Published : 25 Dec 2016 01:16 PM
Last Updated : 25 Dec 2016 01:16 PM

தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா: காவிரியோரக் கதைகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத் துறை, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை திருச்சியில் டிச.17-ல் நடத்திய தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழாவில் சிறுகதைக் கலை குறித்தும் அதன் இன்றைய நிலை குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.

வ.வே.சு. அய்யர் 1915-ம் ஆண்டில் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதையே தமிழ்ச் சிறுகதைக்கு விதையாக அமைந்தது. இந்தச் சிறுகதை எழுதப்பட்டதன் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவின் தொடக்கமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன், எழுத் தாளர்கள் எல்லாவற்றையுமே கதையாகத்தான் பார்க்கிறோம். மனிதகுலம் பிறந்த காலத்திலிருந்து கதை இருக்கிறது. கதை இல்லையெனில் மனிதகுலமே இல்லை எனலாம் என்றார். “சிறுகதை என்பது அதன் அளவைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதில்லை, அது எடுத்துக்கொள்ளும் பொருளைப் பொறுத்தது” எனக் கூறிக் கதையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன், சிறுகதையின் வரலாற்றை விளக்கினார். “உலக அளவில் 334 ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்ச் எழுத்தாளர் போம் பெவல் முதல் சிறுகதை எழுதினார். இதிலிருந்துதான் உலகச் சிறுகதை வரலாறு தொடங்கியது. தமிழில் 1910-ம் ஆண்டில் பாரதியார் ‘ஆறில் ஒரு பங்கு’ என்ற கதையை எழுதினார். ஆனால், இது சிறுகதை வரிசையில் வரவில்லை. வ.வே.சு. அய்யர் எழுதிய ‘குளத்தங்கரை அரச மரம்’ என்ற சிறுகதைதான் தமிழில் முதல் சிறுகதை. இதைத் தொடர்ந்து புதுமைப்பித்தன், ஜானகிராமன், விந்தன் எனத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டது. நூறாண்டுகளைக் கடந்துள்ள தமிழ்ச் சிறுகதை உலக சிறுகதை வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது” என்றார். மேலும், கல்லூரிகளில் சிறுகதை எழுதுதல் குறித்த பயிலரங்குகளை நடத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய எழுத்தாளர்களை நாம் கண்டெடுக்க முடியும் என்றும் கூறினார்.

விழாவையொட்டி ‘கதைமலர்’ என்ற நூலைப் பிரபஞ்சன் வெளியிட்டார். தமிழ்ச் சிறுகதையின் நூறாண்டு வரலாறு குறித்த ஒரு கருத்துக் காட்சியைத் தமிழ்ச்செல்வன் வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் சமுதாயத்தில் சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர்கள் அ. வெண்ணிலா, க. உதயசங்கர், தேன்மொழி, ஆதவன் தீட்சண்யா, பாஸ்கர் சக்தி ஆகியோர் பேசினர்.

இந்த விழாவையொட்டிப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிறுகதை, குறும்படப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, “கர்நாடக இசையை சில சாதி, சமுதாய மக்கள் மட்டும்தான் கேட்கிறார்கள் என்ற நிலையை மாற்றத்தான் சேரிகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினேன். ஒரு கலையில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பு இருக்கும்போதுதான் அந்தக் கலை வேகமாக வளர்ச்சியடையும். புதியவையும் கிடைக்கும். கர்நாடக இசை அனைவரின் சொத்து. கலைகளைப் பயன்படுத்தி மக்களை இணைக்க வேண்டும். அதுவே ஒரு உண்மைக் கலைஞனின் கடமையாக இருக்க வேண்டும்” என்றார்.

“விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிறப்பின் அடிப்படையில், வாழும் சூழலின் அடிப்படையில் சாதி நிர்மாணிக்கப்படுகிறது. மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். இதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும்” என்று சொன்ன திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், சிறுகதைகள், எழுத்துகள் மட்டுமே மனிதனைப் பண்படுத்தக்கூடியவை என்று குறிப்பிட்டார். “இளைஞர்கள் அதிகமாக வாசிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படும்” என்றார்.

முன்னதாக எழுத்தாளர் பவா செல்லத்துரையும், வேல ராமமூர்த்தியும் கதை சொன்னார்கள். மாற்று நாடக இயக்கம் சார்பில் கி. பார்த்திபராஜாவின் ‘மரி என்றொரு ஆட்டுக்குட்டி’ என்ற நாடகம் நடத்தப்பட்டது.

விழாக் குழுத் தலைவரும், செளடாம்பிகா கல்விக் குழுமங்களின் தலைவருமான எஸ். ராமமூர்த்தி தலைமை வகித்தார். விழாக் குழுச் செயலாளரும், தமுஎகச மாநிலத் துணைத் தலைவருமான கவிஞர் நந்தலாலா விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x