

உரைநடை தொடங்கிய சிறிது காலத்துக்குள்ளாகவே தொடங்கிவிட்ட நாவல், கலை என்னும் அளவில் தன் முழு வீச்சில் வெளிப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் அதற்கு உடன்பாடான பதிலை அளிப்பதில் தயக்கமே ஏற்படுகிறது. வாழ்வின் பன்முகத் தன்மையைத் தழுவி விரிவது நாவல் கலையின் இயல்பு. தமிழில் பல்வேறு களங்கள் சார்ந்து, பல்வேறு பொருள்களில் தரமான நாவல்கள் வந்தாலும் நாலா திசைகளிலும் விரிந்து பரவும் வாழ்வின் பரப்பைக் காலத்தின் பின்னணியில் வைத்துப் புனைவு மொழியில் பிரதிபலித்த கலை ஆக்கங்கள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட ஒரு பரப்பிற்குள் கூர்மையும் ரசனையும் கொண்டு வெளிப்பட்ட நாவல்கள் பல உள்ளன. விரிவும் பன்முகத்தன்மையும் கொண்டு விரியும் நாவல்கள் அதிகம் இல்லை.
தமிழில் முதல் தமிழ் நாவல் வெளியாகி 136 ஆண்டுகள் ஆன நிலையில் 2016-ம் ஆண்டில் வெளியான நாவல்கள், தமிழ் நாவல் களத்தை விரிவுபடுத்தி யிருக்கின்றனவா என்னும் கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன், பா.வெங்கடேசன், தேவிபாரதி போன்ற முக்கியமான படைப்பாளிகள் சிலரது நாவல்கள் இந்த ஆண்டில் வெளிவந்து பரவலான கவனம் பெற்றன. இலங்கை இனப் படுகொலையை மையமாகக் கொண்டு தமிழ்நதி எழுதிய ‘பார்த்தீனியம்’ என்னும் நாவல் அதன் களத்திற்காக அதிகம் பேசப்பட்டது. தமிழ் இஸ்லாமியச் சமூகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் பதிவுசெய்யும் சல்மாவின் ‘மனாமியங்கள்’, தனியார் / தாராளமயமாக்கலின் சிக்கல்களைத் தமிழ்ப் பின்னணியில் வைத்துப் பேசும் இரா. முருகவேளின் ‘முகிலினி’ முதலான நாவல்கள் அவற்றின் உள்ளடக்கம் சார்ந்து கவனிக்கப்பட்டன. சென்னை என்னும் நகரம் உருவான விதத்தை விசித்திரங்கள் நிரம்பிய புனைவுமொழியில் சொன்ன வினாயக முருகனின் ‘வலம்’, நாம் காணும் உலகத்திற்குச் சற்றே அடிப்புறத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இயங்கும் இன்னொரு உலகம் பற்றிப் பேசும் சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ ஆகியவை புதிய களங்களைத் தமிழ் நாவல் பரப்பில் அறிமுகப்படுத்தின.
களம், மொழி, கதைப்போக்கு, புனைவு உத்திகள் ஆகியவற்றில் தீவிரமான பரிசோதனைகளை நிகழ்த்திய ‘நட்ராஜ் மகராஜ்’, ‘பாகீரதியின் மதியம்’ ஆகிய நாவல்கள்; ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் பேசிய ‘இடக்கை’; அரசியல், வர்த்தகம் முதலான களங்களை மையமாகக் கொண்டு நேரடியாகக் கதைசொன்ன ‘முகிலினி’; வெகுஜன வாசிப்புக்கேற்ற விதத்தில் தீவிரமான விஷயங்களைக் கையாண்ட ‘ரோலக்ஸ் வாட்ச்’ ஆகியவை ஒரே ஆண்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது. பல விதங்களிலும் புதிய வரவுகளாக அமைந்த இந்த நாவல்களில் தமிழ் நாவல் பரப்பை, நாவல் கலை சார்ந்தும் தரம் சார்ந்தும் முன்னெடுத்துச் சென்றவை எவை என்னும் கேள்வியோடு கவிஞர் க.மோகன ரங்கன், எழுத்தாளர் சாம்ராஜ், கவிஞர் சே.பிருந்தா (தமிழ் எழுத்தாளர்கள் பலர் சமகாலத் தமிழ் ஆக்கங்களைப் படிப்பதில்லை என்னும் உண்மையும் இந்த முயற்சியின் மூலம் தெரியவந்தது என்பது வேறு விஷயம்) ஆகியோரை அணுகினோம். அவர்களது பரிந்துரைகளின் அடிப்படையில் சென்ற ஆண்டின் சிறந்த நாவல்களின் பட்டியலை இங்கே தருகிறோம்.