

எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலை இத்தாலியைச் சேர்ந்த தமிழ் ஆய்வு மாணவி டோரோட்டியா இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இத்தாலியின் முன்னணிப் பதிப்பகமான உடோபியா இதற்கான உரிமையைக் காலச்சுவடு பதிப்பகத்திடமிருந்து பெற்றுள்ளது. ‘தேம்பாவணி’யைத் தந்த இத்தாலியைச் சேர்ந்த வீரமாமுனிவர் 300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். ஆனால், தமிழிலிருந்து இத்தாலிக்கு ஒரு நூல் நேரடியாக மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை எனச் சொல்லப்படுகிறது.
முடியரசன் பேச்சுப் போட்டி: திராவிடத் தலைவர் அண்ணாவால் ‘திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞா்’ எனப் புகழப்பட்டவர் வீறுகவியரசர் முடியரசன். அவர் படைப்புகள் குறித்து உலக அளவிலான பேச்சுப் போட்டியை ‘வீறுகவியரசர் முடியரசர் அவைக்களம்’ அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் உரைகளைக் காணொளிகளாகப் பதிவுசெய்து அனுப்பிவைக்க வேண்டும். போட்டி தொடர்பான தகவல்களும் விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் இந்தச் சுட்டியில் தரப்பட்டுள்ளன: https://mudiyarasan.org/போட்டி
வெய்யிலின் நீள் கவிதைகள்: தமிழின் கவனம்பெற்ற கவிஞர்களில் ஒருவர் வெய்யில். ஒரே மனநிலையில் அமைந்த 20 நீள்கவிதைகளின் தொகுப்பை விரைவில் அவர் வெளியிட இருக்கிறார்.
‘பேய்க்கணவாயின் காதல்’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் தொகுப்பில், நவீன தொலைதொடர்புச் சாதனங்களின் பின்னணியிலான ஒரு காதலைப் பழமையான சங்கக் கவிதையின் மூர்க்கமான சொற்களைக் கொண்டு பாடியிருக்கிறார்.
பொருநை இலக்கியத் திருவிழா: தமிழ் மரபில் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் விதமாகத் தமிழக அரசு முன்னெடுத்துவரும் விழாவின் தொடர்ச்சியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து ‘பொருநை இலக்கியத் திருவிழா’ வரும் 26, 27 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் கொண்டாடப்படவுள்ளது. வட்டார இலக்கியங்கள், கவிதையியல், சினிமா ஆகியவை குறித்த உரையாடல்கள், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, தமிழே உனக்காக என்னும் தலைப்பில் ஓலைச்சுவடி குறுங்கவிதைப் போட்டி ஆகியவை நடைபெறவுள்ளன.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள அரிய ஓலைச்சுவடிகள், ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியைத் தொடர்புகொண்டு நவம்பர் 24க்குள் சமர்ப்பித்தால் அவை விழாவில் காட்சிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கல்பற்றா நாராயணன், வண்ணதாசன், பொன்னீலன், பூமணி, சோ.தர்மன், ச.தமிழ்ச்செல்வன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன், ஜோ.டி.குரூஸ் உள்ளிட்ட பல இலக்கிய ஆளுமைகள் கலந்துகொள்கின்றனர். கூடுதல் விவரங்களுக்கு: https://porunailitfest.in/
விருதுநகர் புத்தகக்காட்சி: மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமும் இணைந்து விருதுநகரில் முதல் முறையாக புத்தகக்காட்சியை ஒருங்கிணைக்கின்றன. கடந்த வாரம் தொடங்கிய இந்தப் புத்தகக்காட்சி வரும் 27 வரை கேவிஎஸ் மேல்நிலைப் பள்ளி, பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ‘இந்து தமிழ் திசை’ புத்தகங்கள், அரங்கு எண்.108இல் கிடைக்கும்.