

தமிழ் மொழியின் எல்லையற்ற சமவெளியில் இழைந்தோடும் இசை வெள்ளமாக விளங்கிய பாவலனுக்கு நூற்றாண்டு இது. செம்பதாகைகளின் செந்தூர மின்னல்களில் ஒலியெடுத்துக் கவிசெய்த உன்னதக் கவிஞனுக்கு நூற்றாண்டு!
எக்காலத்திலும் தன்னை ஒரு மக்கள் கவியாகவே உருவகித்துக்கொண்ட கே.சி.எஸ்.அருணாசலத்துக்கு நூற்றாண்டைக் கொண்டாடுகிறோம். நினைவுகளின் கோலாகலத்தில் மனது நிரம்பிவழிகிறது. 1921இல் பிறந்த கவிஞர், வறுமையைத் தழுவ நேரிட்டபோதிலும், சமூக உணர்வுமிக்க இளைஞராக வளர்ந்தார். தமிழகத்தில் பொதுவுடமைக் கருத்துகளை விதைத்த ப.ஜீவானந்தம், பொள்ளாச்சியைப் பூர்விகமாகக் கொண்ட கே.பாலதண்டாயுதம், பி.கே.ராமசாமி ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு ‘தீவிர வாலிபர் சங்கம்’ அமைத்து தேச விடுதலைப் போராட்டங்களில் கே.சி.எஸ். ஈடுபட்டார். தொடக்கத்தில் மேடை நாடகத் துறையில் ஈடுபாடு காட்டினார். எண்ணற்ற நாடகங்களை முற்போக்குச் சிந்தனைகளின் முகபடாம்போல எழுதிக் குவித்தார். ‘அமுதம்’, ‘நீதி’, ‘மாதமணி’, ‘வசந்தம்’ இதழ்களில் முத்திரை பதித்தார்.
பாடலாசிரியர் அவதாரம்: அவரது உழைப்பை அங்கீகரித்து 1944இல் கோவையில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் கே.சி.எஸ்.
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960இல் மார்க்சிய அறிஞர் ஆர்.கே.கண்ணன் கதை-வசனம் எழுதி, நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘பாதை தெரியுது பார்’ திரைப்படத்தில் கே.சி.எஸ். எழுதிய ‘சின்னச் சின்ன மூக்குதியாம்’ பாடல் இசைமேதை எம்.பி.சீனிவாசனின் இசையமைப்பில் உருவாகி, மக்களை வசீகரித்தது.
1965இல் அவருடைய அற்புதமான சிறுகதைகள் அடங்கிய ‘பூர்வீகச் சொத்து’ என்.சி.பி.ஹெச். வெளியீடாக வந்தது. அதே ஆண்டில் நாட்டுப்புற ஒயிலும் மரபின் குன்றாத எழிலும் கூடிக்கலந்த அவரது புகழ்பெற்ற ‘கவிதை என் கைவாள்’ கவிதைத் தொகுப்பும் வெளியானது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இயக்கப் பணிகளில் ஆர்வத்துடன் இயங்கினார் கே.சி.எஸ். 1964இல் மதுரையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் துணைத் தலைவரானார். இதன் தொடர்ச்சியாக, 1978இல் திருப்பூரில் நடந்த 4ஆவது மாநாட்டில் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராக கே.சி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னைக்கு வந்தார்: அடுத்து ஜீவா, பாலன் ஆகியோரின் தூண்டுதலால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். ‘ஜனசக்தி’ ஆசிரியர் குழுவிலும், ‘சோவியத் நாடு’ இதழ் பணியிலும், 1983இலிருந்து ‘தாமரை’ இதழில் பொறுப்பாசிரியராகவும் அவரது எழுத்துப் பணி தொடர்ந்தது. 1985இல் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘பாட்டு வராத குயில்’ வெளியானது. 1988இல் ‘இப்டா’ எனப்பட்ட இந்தியா மக்கள் நாடக மன்றம் புனரமைக்கப்பட்டபோது, அதன் தலைவராகக் கோமல் சுவாமிநாதனும் செயலாளராக கே.சி.எஸ்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
‘நேற்றும் இல்லை – அதன்/ முன்பும் இல்லை/ காற்றிதுபோல/ இடதுபுறம் படகை விடு/ ஏலேலோ- கரை/ ஏறும்வழி சேரும் அது ஏலேலோ...’ எனக் கவிஞர் மெல்லச் சுருதி பாடி உயர்த்திச் சிகரம் எட்டும்போது அனைத்து மக்களும் படகோட்டிகளாக மாறும் அதிசயம் நிகழும். பாடல்களை அபிநய அசைவுகளோடும் புதுமையின் நெசவுகளோடும் வாரி வழங்கிய கே.சி.எஸ்.
1991 மே 26 அன்று காற்றின் அலைகளில் கரைந்தார். என்னைப் போல் எத்தனையோ தோழர்களை முற்போக்குக் களத்துக்கும் கலை இலக்கியப் பெருமன்றத்துக்கும் ஒரு தாய்ப் பறவையாகத் தனது சிறகுகளில் சுமந்துவந்த பெருமைக்குரியவர் கே.சி.எஸ். மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வழித்தடத்தில் பொதுமை அறம் பேணிய புலவன், இடப்புறம் படகைச் செலுத்திய பெரும்பாணன் கவிஞர் கே.சி.எஸ்ஸின் நினைவுகளுக்கு மரணமில்லை. - கவிஞர், தொடர்புக்கு:sirpipollachi@gmail.com