

தமிழ்ப் புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தியும் க.நா.சுப்ரமண்யமும் இரண்டு கிளைகள். இவற்றுக்கு இடையில் மரபும் நவீனமும் கலந்த ஒரு புது மரபில் தோன்றியவர் யுகபாரதி. தொண்ணூறுகளின் இறுதியில் ‘மனப்பத்தாயம்’ வழி அறிமுகமானார். 2000இல் கவிதை, கவிதையியல் சார்ந்த தன் எழுத்துகளால் தமிழ்ப் புதுக்கவிதைப் பரப்பில் வசீகரமிக்க ஆளுமையாக உருவானார்.
யுகபாரதியின் கவிதைகள், 70-களில் தமிழ்க் கவிதையில் உருவான நடுத்தர வர்க்கத்தின் இருத்தல் தொடர்பான அக நெருக்கடிகளிலிருந்து வேறுபட்டவை. தீர்க்கமான அரசியலை ஆதாரமாகக் கொண்டவை. கவிப் பொருளை நேரடியாகச் சொல்லும் திடகாத்திரமும் இவரது கவிதைகளுக்கு உண்டு. தாராளமயமாக்கல் பொருளாதாரத்தின் மறைமுகமான விளைவுகளையும் யுகபாரதியின் கவிதைகள் வெளிப்படையாகச் சொல்கின்றன. வேளாண்மை பொய்த்துப் போன நெற்களஞ்சியத்தின் நிலை, மதவாத அரசியல் எனச் சமகால அரசியல் பிரச்சினைகளைப் பாமரர் பக்கம் நின்று பார்க்கின்றன இவரது கவிதைகள்.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் யுகபாரதியின் கவிதைகளை, மலையாளக் கவிஞர் குஞ்ஞுண்ணி மாஸ்டரின் கவிதையுடன் ஒப்பிடப்பட்டு, அவருடைய பிரதி என விமர்சனம் செய்யப்பட்டது. உண்மையில் யுகபாரதி குஞ்ஞுண்ணியை அதுவரை வாசித்திருக்கவில்லை. ஓசையை அகமாகவும் நவீனத்தை உடலாகவும் கொண்ட கவிதைகள் குஞ்ஞுண்ணியுடையவை. இந்த மரபில் தமிழில் விக்கிரமாதித்யனை முன்மொழியலாம். இதன் தொடர்ச்சி என வித்யாஷங்கரைச் சொல்லலாம். ந.பிச்சமூர்த்தி முன்மொழிந்த மரபும் க.நா.சு.வின் நவீனமும் ஒருங்கே அமைந்த இந்த மரபின் அழகான வரிசையில் யுகபாரதியை வைத்துப் பார்க்கலாம். பாதகமானாலும் யுகபாரதி கவியுலகின் ஆதாரத்தை அடைய மேற்சொன்ன இந்த விமர்சனம் உதவியது.
எளிய வாழ்க்கை, இந்த வாழ்க்கைக்கு எதிரான புற அரசியல் என யுகபாரதியின் கவிதைகளில் இரண்டு அம்சங்களைப் பார்க்கலாம். அவரது தொடக்க காலக் கவிதையான ‘பழங்கஞ்சியும்/பயித்தத் துவையலும்/ஏருழும் மாமனுக்கு/எடுத்துப் போவாள்/அவளுக்குப் பிடிக்குமென்று/ஈச்சம் பழங்களைத்/துண்டில் மூடித்/தருவான் இவன்/வானம் பார்த்த பூமியில்/எப்போதும் பெய்தபடி/பிரிய மழை’ இந்தக் கவிதையில் இருக்கும் எளிமைதான் இவரது கவிதைகளின் வாழ்க்கை. ‘மாட்டுவண்டிதான் என்றாலும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதாகப் போக முடிந்தது’ என ஒரு கவிதையில் சொல்கிறார்.
கா.சிவத்தம்பியைக் கூட்டிவரும் இந்தக் கவிதையை யுகபாரதியின் எளிய அழகுக்கு உதாரணமாகச் சொல்லலாம்: ‘ராசா என்கிற சிவத்தம்பி அய்யாவை /நிரம்பப் பிடிக்கும்/ நண்பனாயிருந்தும்/ராஜராஜனை/ கட்டையனென்றோ/கதிரேசன் தம்பியென்றோதான்/ கூப்பிடுகிறேன்/பெரிய மனது வேண்டும்/பிறரை ராசாவாக்குவதற்கு’. இந்த வகையான கவிதைகளுக்கு உட்பொருளில் இருக்கும் கவித்துவத்தையே ஆதார அச்சாகக் கொள்கிறார். சில கவிதைகளில் சொற்களை வைத்துத் தமிழ்ச் செவ்வியல் விளையாட்டை ஆடியிருக்கிறார்.
தமிழ்ச் செவ்வியல் கவிதைமீது ஆழ்ந்த பற்றுக்கொண்டவர் யுகபாரதி. மொழி அளவில் ஓசைநயமிக்க நவ கவிதைக்காகத் தன் கவிதைகளையும் யுகபாரதி பழக்கிப் பதமாக்கியிருக்கிறார். அவரது ‘தெப்பக்கட்டை’ தொகுப்பில் இந்த வேகத்தைக் காணலாம். வறண்ட நிலத்தின் பாடலாக அவர் எழுதிய இந்தக் கவிதையை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ‘செத்தால் துடிப்பது தமிழ்ப் பாட்டு/செத்துப் போகப் படிப்பது/இசைப் பாட்டு/ உற்சவ மூர்த்திக்குப் பட்டாடை/ அதே காவிரியில் மிதக்கின்றன சவங்களும்/ஆற்றுக்குக் கருமாதி/நட்டாற்றில் உழவு/ பதினெட்டாம் பெருக்கைப் பட்டியலிடு/ தேநீர்க் கோப்பைகளில்’. ‘ஒரு மரத்துக் கள்’, ‘தெருவாசகம்’ ஆகிய தொகுப்புகள் இந்த வகையில் மரபில் அமைந்தவை.
யுகபாரதி கவிதைகளில் வெளிப்படும் நகைச்சுவை விசேஷமானது. சமகால அரசியல், சமூக விஷயங்களைப் பேசும்போது கோபப்படுவதற்குப் பதிலாக எள்ளி நகையாடுகிறார். அவரது இந்தக் கிண்டலுக்குள் அரசும் கட்சிகளும் சமூகமும் இருபத்தோராம் நூற்றாண்டும்கூட ஆளாகின்றன. ‘நிலைப்படியில்/ ‘கண்ணைப்பார் சிரி’ /முடியாத பட்சத்தில்/ நாட்டைப் பார்/வந்துவிடும் சிரிப்பு’ என்கிறது ஒரு கவிதை.
‘நாடு உனக்குச் செய்யாது எதுவும்/ நாட்டுக்காக நீ செய்/ தற்கொலையாவது’ என்கிற கவிதையும் சமூக அவலத்தை நகைச்சுவையாக்குவதில் நல்ல தேர்ச்சிக்கு மற்றுமோர் உதாரணம். இன்று நாட்டில் வியாபித்திருக்கும் மதவாத அரசியலை முன்பே யுகபாரதி தன் கவிதைவழி கண்டறிந்துள்ளார். அரசியல் விமர்சனம் செய்யும்போது அவர் சமூகப் பிரதிநிதிதான். அவர் சுழற்றும் சாட்டைக்குள் திராவிட, இடதுசாரிக் கட்சிகளும் வருகின்றன. விவாதத்துக்குள்ளான ‘இயேசு வருகிறார்...’ கவிதையே அதற்குச் சாட்சி.
சிறுகதை அம்சத்துடன் பெண்களின் தொலைந்த உலகத்தைப் பதிவுசெய்யும் சில கவிதைகளை யுகபாரதியிடம் காணமுடிகிறது. வாழ்க்கைப்பட்டுவந்து சமையல், பாத்திரம் என அன்றாடத்துக்குள் மூழ்கிப்போன ஒருத்தி பாத்திரம் விளக்குகையில் அதில் வெட்டிவைத்த அவள் பெயர் தட்டுப்படுகிறது. இதுபோன்ற காட்சிகள் பல கவிதைகளுக்குள் கிடக்கின்றன. குறும்புத்தனங்கள் மொழிவிளையாட்டாகப் பல கவிதைகளில் தொழில்பட்டுள்ளது.
யுகபாரதி தன் கவிதைகளுக்குப் பூரண சுதந்திரத்தை அளித்திருக்கிறார். அவரது கவிதைக்குள் எல்லாமும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், இவற்றுக்குள் பலதரப்பட்ட எளியவர்களின் குரல்களையும் உலகங்களையும் கேட்க முடியும். நவீன கவிதை தீண்டத்தகாதவை என ஒதுக்கிவைத்திருக்கும் பொருளையும் சொல்லையும் இந்தக் கவிதைகள் தைரியமாக உரைக்கின்றன.
அதைப் பெரும் புரட்சியாக அல்லாமல் இயல்பாகச் சித்தரிக்கின்றன. இயல்பு, அதிர்ச்சி ஆன கதையையும் யுகபாரதியின் கவிதைகள் சொல்கின்றன. சொல்முறையிலும் மரபுடனான உறவைத் தன் கவிதை வழி புதுப்பித்துக்கொண்டதன் மூலம் இன்றைக்கு அரும்பத் தொடங்கியிருக்கும் புதிய கவிதையுலகுக்கான முன்னோடி என யுகபாரதியின் இந்தக் கவிதைகளை வரையறுக்கலாம். தமிழ்ச் செவ்வியல் கவிதைமீது ஆழ்ந்த பற்றுக்கொண்டவர் யுகபாரதி. மொழி அளவில் ஓசைநயமிக்க நவ கவிதைக்காகத் தன் கவிதைகளையும் யுகபாரதி பழக்கிப் பதமாக்கியிருக்கிறார்! - மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
யுகபாரதி கவிதைகள், யுகபாரதி
நேர்நிரை பதிப்பகம் , விலை: ரூ. 750, தொடர்புக்கு: 9841157958