Published : 19 Nov 2016 10:52 AM
Last Updated : 19 Nov 2016 10:52 AM

திரைப்படமான நாவல்: இதயத்தோடு பேசும் காதலின் திரைமொழி

உலக இலக்கிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்றால் ஃப்யோதர் தஸ்தாயெவ்ஸ்கி தனி விதம். ஆண்டுகள் பல கடந்து பூக்கும் காக்டஸ் மலர்களைப் போல அபரிதமான மணம் வீசும் கதையாடல்கள் அவருடையவை.

வெண்ணிற இரவுகள் 60, 70 பக்கங்களுக்குள் அடங்கிவிடக்கூடிய குறுநாவல். தஸ்தாயெவ்ஸ்கி தனது எழுத்து வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் எழுதியது. மன ஓட்டங்களின் வாயிலாகச் சம்பவங்களைச் சொல்லிக் கவ்விப்பிடிக்கும் வாசிப்பைக் கோரி நிற்பது.

மாலைப் பொழுதொன்றில் கதை சொல்லி நகருக்கு வருகிறான். ஒரு கனவு லகவாசி எனச் சொல்லிக்கொள்பவன் அவன். மாலை நேரத்தில் மின்னும் நகரின் அழகைச் சுவைப்பதில் மனம் சலிக்க வில்லை அவனுக்கு. தனிமையின் சலிப்பைப் போக்க மாலைப் பொழுதுகளைப் பருகியவாறு அந்த இடத்தைப் பிரிய மனமின்றிப் பின்னிரவிலும் அங்கேயே தொடர்கிறான். போரினால் ஏற்பட்ட இடிபாடுகள் நிறைந்த பகுதிகள் அவை. ஆறுகள் ஆங்காங்கே குறுக்கிடும். சிறுசிறு பாலங்களும் சாலைகளும் குறுக்கிடும் அங்குதான் நாஸ்தென்காவைப் பார்க்கிறான்.

யாரையோ எதிர்பார்த்துக் கண்ணீர் சிந்துகிறாள் நாஸ்தென்கா. அவளது அழுகை அவன் கவனத்தை ஈர்க்கிறது. ஒருமுறை வீறிட்டும் அழுகிறாள். அவளை இப்படி அழ விட்டுச் சென்றவன் யாரெனக் கவலைப்படுகிறான் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் கனவுலகவாசி. இளம் வயதிலிருந்தே உறவுகளைப் பிரிந்தவன்; அன்புக்காக ஏங்குபவன் அவன். அநேகமாக அந்தக் கனவுலகவாசி தஸ்தாயெவ்ஸ்கியாகத்தான் இருக்க வேண்டும்.

ஆறுதல் மொழி சொல்லச் சென்று அன்பின் மொழியாக அது மாறிப்போகும் சாத்தியம் அபூர்வம்தான். அதுவும் நான்கு நாள் அதே இடத்தில் ஒவ்வொரு நாளும் சந்தித்து அன்பின் அனுபவப் பரிமாற்றங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். கடைசியில் யாருக்காக அவள் காத்திருந்தாளோ அந்தக் காதலன் வந்த பின்பு யாரோபோல அந்தக் கனவுலகவாசி தள்ளி நின்று விடைகொடுப்பது எவருக்கும் வலி ஏற்படுத்தக்கூடியது.

பொதுவாக ஒரு நாவல் திரைப்படமாகும்போது, குறைந்தபட்சம் அதன் அடிநாதம் கெட்டுவிடக் கூடாது என்பதுதான் நம் எதிர்பார்ப்பு. ஆனால், அதுவே பல நேரங்களில் மறுக்கப்படுகிறது. காட்சிப்படுத்தலின் சிக்கல்களைத்தான் அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்களை சுவாசித்தவர் இயக்குநர் லுக்கீனோ விஸ்காந்தி. ‘வெண்ணிற இரவுகள்’ நாவலைத் திரைப்படமாக்கி தாஸ்தாயெவ்ஸ்கியை அவர் கொண்டாடிவிட்டார் என்றே சொல்லலாம். தேர்ந்த இலக்கிய மொழியின் வழியே திரைமொழியை எப்படிக் கட்டமைப்பதென்று அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.

நகரத்தின் ஊடே ஓடும் நதிகளுக்காகக் கட்டப்பட்ட வீதிகளை இணைக்கும் பக்கவாட்டில் கிரில் சுவர்கள், காரைச் சுவர்கள் கொண்ட குறு, சிறு பாலங்கள்... மழை சொட்டும் தருணங்கள், விளக்கு வெளிச்சத்தில் விழும் நிழல் உருவங்கள், பீரங்கிக் குண்டுகளுக்கு இரையான கட்டிடங்கள், பனிபடர்ந்த பின் துடைக்கப்பட்ட கடைவீதியின் கண்ணாடிகள். என்று படம் முழுவதும் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தின் அழகை இயக்குநர் கொண்டுவந்திருப்பார்.

இப்படத்தில் வரும் நடனக் காட்சி மிகமிக அழகானது. படத்தின் நான்காவது நாள் சந்திப்புக் காட்சிகளில் பனி விழத் தொடங்குகிறது. விழும் பனிக்கட்டிகளை எடுத்து நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் வீசி அடித்துக்கொள்கின்றனர். வெண்பனி இரவுகளும் கொள்ளை அழகு.

நாஸ்தென்காவை நடாலியாக மாற்றிவிட்டதும், நாவலின் தவிக்கவைக்கும் அடங்கிய தொனியைப் பாய்ச்சல் மிக்க காட்சி மொழியில் பெயர்த்துத் தந்ததும் தான் இயக்குநர் எடுத்துக்கொண்ட சுதந் திரம். கனவுலகவாசியாக நடித்திருக்கும் மர்செல்லோ மஸ்த்ரோயானி இத்தாலிச் சிறையில் ஜெர்மன் ராணுவத்தின் காவலிலிருந்து தப்பித்து வெனிஸ் நகரம் வந்தவர். அந்த மனநிலையிலிருந்து விலகாத தொடர்ச்சியாகவே இப்படத்தின் கனவுலகவாசி பாத்திரம் அவருக்குச் சரியாகப் பொருந்திவிட்டது.

இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதலின் வலியில் அல்லாடும் இப்படத்தின் நாயகி நடிகை மரியா ஷ்செல் ‘வெண்ணிற இரவு’களின் நாயகியைத் திரையில் அழியாமல் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

தமிழில் ஜனநாதனின் இயக்கத்தில் வெளியான ‘இயற்கை’ திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலின் தழுவலே. தஸ்தாயெவ்ஸ்கியின் இந்தக் காவியத்தைத் தமிழில் வெவ்வேறு மொழிபெயர்ப் பாளர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

- பால்நிலவன்

தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x