

பெங்களூருவிலுள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அலெக்ஸ் எம்.தாமஸ், ஆங்கிலத்தில் எழுதிய பொருளாதாரப் பாடநூல் ‘Macroeconomics’; இந்நூல் ‘பேரியல் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்’ (காலச்சுவடு வெளியீடு) என்ற பெயரில் சமீபத்தில் தமிழில் வெளியாகியிருக்கிறது. ‘நான் இளங்கலை முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பேரியல் பொருளாதார அறிமுகப் பாடத்தில் பேராசிரியர் அலெக்ஸ் தாமஸின் விரிவுரைகளும் வகுப்பு உரையாடல்களும் நான் சிந்தித்த விதத்திலும், பொருளியலைப் புரிந்துகொண்ட விதத்திலும் தாக்கத்தை உண்டாக்கின’ என்ற முன்னுரையுடன் இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் அஷ்வத்துக்கு வயது 23 தான் என்பது கவனத்துக்குரியது. ‘பேரியல் பொருளாதாரத்தில் ஈடுபாடு நிறைந்த அனுபவத்தை அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது’ என்று அலெக்ஸ் தாமஸ் குறிப்பிடும் இந்நூல், ‘கல்லூரி மாணவர்களுக்கான பாடநூல் வடிவில் எழுதப்பட்டிருந்தாலும், பொது வாசகரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று மொழிபெயர்ப்பாளர் வலியுறுத்துகிறார்.
ஸ்பாரோ விருதுகள்: ஸ்பாரோ - ஆர்.தியாகராஜன் இலக்கிய விருது இந்த ஆண்டு கவிதைத் துறையில் இயங்குபவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கவிஞர்கள் பொன்முகலி, வே.நி.சூர்யா, காஸி மொழிக் கவிஞர் கின்ஃபாம் ஸிங் நான்கின்ரீ, போடோ மொழிக் கவிஞர் அஞ்சு பஸூமதாரி ஆகிய நால்வருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் டி.ஐ.அரவிந்தன், தி.பரமேஸ்வரி, அம்பை ஆகியோர் இதன் நடுவர்களாகச் செயல்பட்டனர். இதற்கான விருது விழா மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வே.பாபு விருது: வே.பாபு நினைவாக வழங்கப்படும் ‘தக்கை வே.பாபு நினைவுக் கவிதை விருது’ இந்த ஆண்டு கவிஞர் பெரு.விஷ்ணுகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’ என்ற தொகுப்பின் மூலம் தமிழ்க் கவிதைப் பரப்பில் கவனம் பெற்றவர் விஷ்ணுகுமார்.
தொல்லியல் ஆய்வாளர் சந்திரவாணன் மறைவு: குற்றாலத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சொ.சந்திரவாணன் சென்ற வாரம் காலமாகிவிட்டார். தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், தமிழகத்தில் சதி முறை இருந்ததற்கான காரணகாரியங்களைப் பெண் தெய்வ வழிபாட்டை உதாரணமாகக் காட்டி நிறுவியுள்ளார். நிர்மால்யத் தொட்டி கட்டுமான முறை குறித்து எழுதியுள்ளார். கல்வெட்டியல் துறையில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார்.