

பரிசல் வெளியீடான ‘இருபதாம் நூற்றாண்டு மார்க்சியம்’ நூல் வரிசையில் சிறு நூலாக 2006இல் வெளியான இது, பொதுவெளி மற்றும் மதங்கள் பற்றி சமீப காலத்தில் ஹேபர்மாஸ் வெளியிட்ட கருத்துகளோடு விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பாக வெளியாகியிருக்கிறது. 1929இல் பிறந்த ஹேபர்மாஸ், இன்று தன் 93 வயதிலும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். 1,700 பக்கங்கள் நீளும் ‘தத்துவத்தின் வரலாறு’ என்ற பிரம்மாண்ட நூலை அவர் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார். ‘பிராங்க்ஃபர்ட் மார்க்சியப் பள்ளி’ என்ற 20ஆம் நூற்றாண்டின் முக்கியச் சிந்தனைப் பள்ளியின் இரண்டாம் தலைமுறைத் தத்துவவியலாளரான ஹேபர்மாஸ் பற்றி, அவர் வாழும் காலத்திலேயே தமிழில் வெளியாகும் அறிமுக நூல் என்கிற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. துறைசார் அறிமுக நூல்களின் தேவை தமிழில் அதிகம் உள்ள நிலையில், இதுபோன்ற நூல்களின் வரவு அவசியமாகிறது. ஆனால் தகவல் பிழைகளையும் வேறு சிக்கல்களையும் கொண்டுள்ள இந்த நூல், அவற்றைக் களைந்து ஆர்வத்தைத் தூண்டி வாசிக்க வைப்பதாகவும் இருந்திருக்கலாம். - சு.அருண் பிரசாத்
ஹேபர்மாஸ்
இரா.முரளி
வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், சென்னை.
விலை: ரூ.110
தொடர்புக்கு: 9382853646
பகுத்தறிவு நூல்: இந்த நூற்றாண்டு நம் வாழ்க்கையை மிகச் சிக்கலானதாக மாற்றியிருக்கிறது. இந்த வாழ்க்கையை மிக எளிமையாக எதிர்கொள்வதற்கான ஒரு வழிகாட்டியாக இந்த ‘இரகசிய புத்தகம்’ உள்ளது. அத்தோடு இல்லாமல் சமூகம் குறித்தும் அதன் சிக்கல்கள் குறித்தும் வாசகர்களுக்கு விளம்புகிறது. உடலை ஆரோக்கியமாகப் பராமரிப்பது குறித்த எளிய விளக்கத்தை முதலில் இந்நூல் நமக்குத் தருகிறது. அதுபோல் மாதத் தவணைத் தொகை என்ற கடன் முறையில் சிக்காதவர்களே இன்றைக்குக் கிடையாது. அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. அதுபோல் ஒருபக்கம் இறுக்கமாக இருக்கும் நம் வாழ்க்கையை மீட்க மூடநம்பிக்கைகளுக்குள் செல்லும் நம்மைத் தெளிவுபடுத்தும்ரீதியில் பகுத்தறிவுக் கருத்துகளையும் இந்நூல் சொல்லத் தவறவில்லை. இந்த முறைப்பாட்டில் அடுத்தகட்டமாக சமூக அமைப்பில் உள்ள பிரச்சினைகளை இந்நூல் பேசுகிறது. சமூகத்தில் நிலவும் ஆதிக்கம் என்றால் என்ன, அது எதனால் ஏற்படுகிறது, இடஒதுக்கீட்டின் தேவை ஆகியவற்றைச் சொல்கிறது. மாநில, தேசியக் கட்சிகள் ஆகியவை குறித்தும் விளக்கங்கள் உள்ளன. - விபின்
இரகசிய புத்தகம்
தொகுப்பு:
பெரியார் மய்யம்
வெளியீடு:
நன்செய் பிரசுரம்
தொடர்புக்கு: +91 95663 31195
சுவாரசிய அறிவியல்! - மரபணுக் குறியீடுகள் குறித்துத் தமிழில் எழுதுவது என்பது மிகவும் சவாலான பணி. அதை எழுதுவதற்கு மொழியாளுமை மட்டும் போதாது; துறைசார்ந்த அறிவாற்றலும் தெளிவான சிந்தனையும் தேவை. இந்தத் திறன்கள் நூலாசிரியர் மோகன் சுந்தரராஜனிடம் மிகுந்துள்ளன. ஒரு சிக்கலான அறிவியல் நூலை அனைவருக்கும் புரியும்படி எளிய மொழியில் அவர் எழுதியிருக்கிறார். தெளிவான நடை, பொருத்தமான சொற்கள், தெளிவான விளக்கம், வரைபடக் குறிப்புகள் போன்ற அம்சங்கள் இந்த நூலை வாசிப்பதற்குச் சலிப்பற்றதாக மாற்றுகின்றன. மரபணுவியலின் வியத்தகு கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் இந்நூல், 12 தலைப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மரபணுவின் அபார ஆற்றலை விளக்குவதன் மூலம் இந்நூல், வாழ்வின் புதிர்களை விடுவித்து, அறிவியலின் உண்மைகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அறிவியல் ஆய்வில் நாட்டமுடைய மாணவர்களும் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய ஒன்று. - ஹுசைன்
வாழ்க்கைக் குறியீடு - மரபணுவியல் புரட்சி
மோகன் சுந்தரராஜன்
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்
தொடர்புக்கு: 044 - 2825 2663