

ஜனவரியில், முதல் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைச் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தத் தமிழ்நாடு அரசு தயாராகிவருகிறது. இதுவரை இந்தியாவில் புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் மட்டுமே பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் நடைபெற்றுள்ளன. பன்னாட்டுப் புத்தகக் காட்சி என்பது உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, புத்தகத் துறையில் உள்ளவர்கள் பங்கேற்கும் ஒன்றாகும். இதன் அடிப்படை நோக்கம், ஒரு நாட்டிலிருந்து புத்தகங்கள் பல நாடுகளுக்கும் வெவ்வேறு மொழிகளுக்கும் சென்றடைய உதவுவது. ஜெர்மனியில் உள்ள பிராங்ஃபர்ட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேசப் புத்தகக் காட்சியில் உலகம் முழுவதுமிருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், உரிமை முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் சந்தித்துக்கொள்கின்றனர்.
இத்தகைய புத்தகக் காட்சிகள், ஒரு மொழியில் வெளியான படைப்பை பல்வேறு மொழிகளுக்கான உரிமைகளை விற்கப் பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் உதவுகின்றன. எந்த எழுத்தாளரும் தனது படைப்புகளை முடிந்தவரை உலகெங்கும் சென்றடைய வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டிருப்பார்கள்.
அந்தப் புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு படைப்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போது எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் பெருமை சேர்க்கிறது. உதாரணமாக, சமீபத்தில் உலகெங்கும் விற்பனையில் மாபெரும் சாதனை படைத்த யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’ முதலில் ஹீப்ரு மொழியில் வெளிவந்தது. பின் 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. படைப்பாளிக்குப் பெயரும் புகழும் தவிர, பெரும் வருவாயை ஈட்டித் தந்தது.
உலகச் சந்தையில் மொழிபெயர்ப்பு உரிமையை விற்பதற்கு இலக்கிய முகவர்கள் இருப்பார்கள். இலக்கிய முகவர்கள், சிறந்த வாசிப்பாளராகவும், பிற மொழிகளில் எத்தகைய புத்தகங்களை விரும்புவார்கள் என்கிற விவரங்கள் தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். பன்னாட்டுப் புத்தகச் சந்தையில் மகத்தான அனுபவம் கொண்ட அவர்கள், ஒரு புத்தகத்தின் சுருக்கத்தைப் படிப்பதன் மூலம் வெவ்வேறு மொழிகளில் அதற்கான சந்தையைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டவர்கள். வரவுள்ள உலகப் புத்தகக் காட்சிக்கு முன்பு தமிழ்ப் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் உடனடியாகச் செய்ய வேண்டியது தங்கள் படைப்புகள் குறித்துச் சுருக்கமாக 100 வார்த்தைகளுக்குள் ஆங்கிலத்தில் குறிப்புகளைத் தயாரிக்க வேண்டும்.
சுருக்கம் முகவர்களைக் கவர்ந்துவிட்டால் முழு புத்தகத்தையும் கேட்பார்கள். புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆங்கில மொழிபெயர்ப்பு பன்னாட்டுத் தரத்திற்கு ஏற்றவாறு மெருகூட்டப்பட்டு இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தங்களுடைய இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் இலக்கிய முகவர்களைத் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும். பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்களைப் போலவே மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பெரும் வாய்ப்புகள் குவிந்துள்ளன. இப்பணி பெருமளவில் பொருளீட்டும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் பலர் பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளைச் சுய விருப்பத்துடன் கூடுதலாகக் கற்கிறார்கள். அத்துடன் மொழிபெயர்ப்பு நுட்பங்களை அறிந்துகொண்டால் தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள முடியும். மேலும் ஒரு படைப்பைத் தொகுத்தல், சீர்படுத்துதல், செம்மையாக்குதல் மற்றும் மெருகூட்டுதல் போன்ற வேலைகளை அறிந்துகொண்டால் அத்துறையில் உச்சத்திற்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.
பன்னாட்டுப் புத்தகக் காட்சி என்பது இருவழிப் பாதை. வெளிநாட்டுச் சந்தைகளில் நமது படைப்புகளுக்கான உரிமைகளை விற்பது மட்டுமின்றி, பிற மொழிகளில் வெளியாகவும் சிறந்த புத்தகங்களுக்கு உரிமம் பெற்றுத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதும் அடங்கும். இன்று தமிழ் பதிப்பகத் துறையில் பலர் மொழிபெயர்ப்பு உரிமைகளை வாங்கித் தமிழில் வெளியிடுகிறார்கள். இன்று உலகின் பல பகுதிகளில், மக்களால் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் தமிழ் ஒன்றாகும். நம் இலக்கியங்கள் செறிவான கருத்துகளையும் வளமான கலாச்சாரத்தையும் கொண்டுள்ளன. இதனால் தமிழ்ப் படைப்புகள் உலகளாவிய வாசகர்களைச் சென்றடையப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்று கிட்டத்தட்ட அனைத்துக் கண்டங்களிலும் குடியேறியுள்ளனர். தமிழகத்தில் வெளியிடப்படும் புத்தகங்களுக்குப் பல நாடுகளில் சந்தை உள்ளது. தமிழ்ப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்கான வெளிநாட்டு மறுபதிப்பு உரிமைகளை விற்பனை செய்வதற்கான வழி வகைகளை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் தேடலாம். தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் இப்புத்தகக் காட்சி, தமிழ்ப் படைப்புகள் உலகெங்கும் செல்ல வேண்டும் என்கிற இலக்கினை அடைவதற்குச் சரியான தொடக்கம். மேலும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் இத்துறை சார்ந்த அனைவரின் எதிர்காலத்திற்கும் நல்லதொரு பாதையை அமைத்துக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். - கோ.ஒளிவண்ணன் எழுத்தாளர், பதிப்பாளர், தொடர்புக்கு: olivannang@gmail.com