

தமிழ் இலக்கியத் திறனாய்வு, தமிழ் மொழியைப் போல் தொன்மை கொண்டது. தொல்காப்பியம் தொடங்கி எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரைகள் வரையிலான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் விமர்சன மரபைப் பல்வேறு பொருள் தலைப்புகளில் பேராசிரியர் எம்.வேதசகாயகுமார் ‘இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்’ என்கிற தலைப்பின் கீழ் தொகுத்துள்ளார்.
தமிழ் கலைக் களஞ்சியத் தயாரிப்பின் செய்நேர்த்தியில் இந்த நூலைப் பேராசிரியர் உருவாக்கியுள்ளார். தமிழ் விமர்சன வரலாற்றைப் பேராசிரியர்கள் க.பூரணசந்திரனும் க.பஞ்சாங்கமும் தங்கள் நூல்களின்வழி பதிவுசெய்துள்ளனர். இந்த முறைப்பாட்டில் வேதசகாயகுமாரின் இந்நூலும் கவனம் கொள்ளத்தக்கது. இந்நூல் தமிழ் விமர்சனக் களஞ்சியத்தை ஆவணப்படுத்துவதன் வழி தமிழ் நவீன இலக்கியம் உருவான வரலாற்றுச் சித்திரத்தையும் வாசகர்களுக்கு உருவாக்கிக் காட்டுகிறது.
நவீன இலக்கிய விமர்சனத்தின் தொடக்கப்புள்ளி என கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண’த்தைப் பேராசிரியர் இந்நூலில் முன்மொழிகிறார். இலக்கிய மதிப்பீடு கால்டுவெல்லுக்கு முன் தமிழில் இல்லை எனக் கூறி, அதற்குக் கால்டுவெல் கூறும் மதிப்பீட்டு அபிப்ராயங்களை இந்நூல் சான்றாகக் காட்டுகிறது. வடமொழி ராமாயணத்தை ஒப்பிடும்போது, கம்ப ராமாயணமே சிறந்தது எனக் கால்டுவெல் கூறியதை இந்த ஒப்பிட்டு விமர்சன மரபை வேதசகாயகுமார் விளக்குகிறார். வ.வேசு.ஐயரின் விமர்சனப் பார்வை ஐரோப்பிய மரபைச் சார்ந்தது எனக் கூறி அ.மாதவையாவின் பார்வையை கால்டுவெல்லுக்கு அருகில் வைக்கிறது இந்நூல். அவர் தமிழை வியாபிக்கவிருக்கும் புதுக்கவிதை மரபை முன்பே ஊகித்திருக்கிறார் என்ற செய்தியையும் பேராசிரியர் சொல்கிறார். க.நா.சு., டி.கே.சியை தமிழ் விமர்சனத்தின் தொடக்கம் என்பதை மறுக்கும் நூலாசிரியர், அ.மாதவையாவின் விமர்சனப் பார்வையை வாசிக்கும் வாய்ப்பு க.நா.சு.வுக்குக் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுகிறார். டி.கே.சி.யின் ரசனை சார் விமர்சனம் சற்றே விமர்சிக்கவும் படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ‘மணிக்கொடி’யில் கு.ப.ராஜகோபாலனும் புதுமைப்பித்தனும் இரு துருவங்களாக இருந்து விமர்சனம் எழுதினர். இதன் இறுதிக் காலத்தில் க.நா.சு. விமர்சன உலகில் தடம் பதித்தார். கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோரின் விமர்சனப் பங்களிப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு உருவான பொழுதுபோக்குத் தேவைகளுக்காக கல்கி, அகிலன் போன்ற எழுத்தாளர்கள் உருவானதாகச் சொல்லும் இந்நூல், இந்த அம்சத்துக்கு எதிராகத் தமிழில் சிற்றிதழ் இயக்கம் வேர்விட்டதைப் பதிவுசெய்கிறது. தமிழ் விமர்சன மரபு என்பதே இந்த இயக்கத்தைச் சார்ந்ததுதான். மணிக்கொடியின் சந்ததிகளான க.நா.சு.வும் சி.சு.செல்லப்பாவும் இந்தப் பொழுதுபோக்கு எழுத்துகளுக்கு எதிராக விமர்சனக் கலையை எடுத்ததிலிருந்து ‘சரஸ்வதி’ வழியாக முன்னெடுக்கப்பட்ட மார்க்சிய சித்தாந்த முறையிலான விமர்சன மரபையும் நூல் கவனத்துடன் பதிவுசெய்கிறது. சிதம்பர ரகுநாதன், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, தி.க.சி. போன்ற மார்க்சிய விமர்சகர்களின் பங்களிப்பையும் சொல்கிறார். சிற்றிதழ்கள் சார்ந்த விமர்சன மரபைக் கால அடிப்படையில் பட்டியலிட்டுள்ளார்.
நவீன இலக்கிய விமர்சகர்களால் புறக்கணிக்கப்படும் உரையாசிரியர்களின் பங்களிப்பைப் பேராசிரியர் இதில் கவனப்படுத்தியுள்ளார். அவர்களின் துணையின்றிச் சொற்களின் பொருள் பரிமாணங்களை அறிய முடியாது என்கிறார். அதுபோல் கல்வியாளர்களின் விமர்சனப் பங்களிப்பையும் கவனப்படுத்துகிறார். வையாபுரியார், தொ.பொ.மீனாட்சி சுந்தரம், ஜேசுதாசன் போன்ற பேராசிரியர்களை இதற்குச் சான்றாக முன்னிறுத்துகிறார் பேராசிரியர்.
தமிழ் இலக்கியத்தில் உருவான அமைப்பியல், இருத்தலியம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளையும் அது சார்ந்த இலக்கியங்களையும் இந்நூல் பொருள் தலைப்புகளுடன் விளக்குகிறது. உதாரணமாக, இருத்தலியக் (Existentialism) கோட்பாடு உலகப் போர்களுக்குப் பிறகு, வாழ்க்கை பொருளிழந்து போவதை இதற்கு ஆதாரமாகக் காட்டி ழான் பால் சார்தர், காம்யூ, காஃப்கா போன்ற இருத்தலிய எழுத்தாளர்களையும் குறிப்பிடுகிறது. தமிழில் சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன் ஆகிய எழுத்தாளர்களின் சில படைப்புகளை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறது. இவை மார்க்சியச் சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரையின் இருத்தலியம் கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளதையும் இந்தக் களஞ்சியும் சுட்டுகிறது.
இலக்கிய அரசியல், இலக்கியத் திருட்டு, இலக்கிய மோசடிகள் என்ற சுவாரசியமூட்டிப் படிக்கத் தூண்டும் தலைப்புகளும் இதில் உள்ளன. வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், பிரமிள், மு.தளையசிங்கம், ஜெயமோகன் போன்ற பலரது தமிழ் விமர்சன மரபுப் பங்களிப்பும் கவனத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய விமர்சனத்தைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் நல்ல அறிமுகமாகும்.
தமிழில் விமர்சனத் துறை, இன்றைக்கு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. பல்வேறு தேவைகளை முன்னிட்டுத் துதிபாடல்களாகவும் இத்துறை குறுகிவிட்டது. நல்ல தமிழ் இலக்கியங்கள் மலர நேர்மையான விமர்சனங்கள் அவசியம். தமிழ் விமர்சன மரபை நினைவூட்டுவதுடன் அந்த அவசியமும் இந்த நூல் வழி துலங்குகிறது. - மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்
எம்.வேதசகாயகுமார்
வெளியீடு: அடையாளம்
விலை: ரூ.390
தொடர்புக்கு: 04332 273444