

ஒரு நல்ல நாவலை ஆண்டுக்கணக்கில் அமர்ந்து எழுதி அது கவனிக்கப்படாமலே சிவலோகப் பதவி அடைந்துவிட்ட எழுத்தாளர்கள் பலர். இப்போது நிலைமை அப்படியல்ல. ஒரு நாவல் வருவதற்கு முன்னரே அந்த நாவலை யாராவது களவாடிப் படித்துவிடுகிறார்கள் - களவாடும் தருணத்தை நாவலாசிரியரே ஏற்படுத்தித் தந்துவிடுவாரோ என்று சந்தேகப்பட்டுவிடாதீர்கள். அதன் சில பக்கங்களைப் படித்துவிட்டே புளகாங்கிதம் அடைகிறார்கள். அது குறித்து ஃபேஸ்புக்கில் முழம் முழமாக எழுதுகிறார்கள். யதேச்சையாக அந்தப் பக்கத்துக்கு வரும் அனைவரின் கண்ணிலும் நாவல் பற்றிய செய்தி படுகிறது. இதைப் படிக்கும் பிறர் அது என்ன நாவல், எங்கே கிடைக்கிறது எனக் குடைகிறார்கள். நாவல் குறித்த எதிர்பார்ப்பு எழுகிறது. நாவல் வாசிக்கப்படுவதற்கு முன்னரே பிரமாதமான நாவல் என்ற செய்தி காற்றில் கலந்துவிடுகிறது. அதன் பின்னர் நாவல் வாசிக்கப்படுவதோ அதன் தரமோ முக்கியமாகக் கவனிக்கப்படுவதில்லை. இதற்கிடையில் ஏதாவது ஒரு புத்தகக் கடையில் அந்த நாவலுக்கான விமர்சனக் கூட்டம் நடத்தப்பட்டுவிடும். எழுத்தாளர்கள் நாவல் பற்றிப் பேசும் வீடியோ பதிவும் வந்துவிடும். எழுத்தாளர்கள் நாவலை நல்ல முறையில் எழுதுகிறார்களோ இல்லையோ, இந்த வகையான சந்தைப்படுத்துதலில் வெளுத்து வாங்குகிறார்கள்.
நாவல் பற்றி ஃபேஸ்புக்கில் எதிர்பார்ப்பை உருவாக்குவது ஒரு ரகம் என்றால், இன்னொரு ரகத்தினர் இலக்கிய உலகில் மெல்ல நுழைகிறார்கள். எல்லா இலக்கியவாதிகளையும் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார்கள். இலக்கியவாதிகளுடன் தொடர்ந்து நட்பைப் பேணுகிறார்கள். இலக்கியச் செயல்பாடுகளில் தங்களை அமிழ்த்துகிறார்கள். இவை எல்லாம் ஒரு கட்டத்தில் கனிந்துவரும்போது, தங்கள் படைப்பைக் கடைவிரிக்கிறார்கள். ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய்…’ என்னும் கதையாக எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. எப்படியோ இலக்கிய உலகம் வளமாய் இருந்தால் சரி!
தலைநகரில் சனி ஞாயிறு மாலைகளில் ஏதாவது ஓர் இலக்கியக் கூட்டம் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. பத்துப் பேர் கூடும் இடம் கிடைத்தால் போதும் கூட்டம் நடத்திவிடுகிறார்கள். இதில் ஒரு வசதி 15 பேர் வந்தால் பயங்கரக் கூட்டம் என்று சொல்லிவிடலாம். அதன் பிறகு வருபவர்கள் வாசலிலிருந்து எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். கூட்டத்தைக் கூட்டுவதற்கு கூட்டம் நடத்துபவர் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், சில கூட்டங்களில் இலக்கியத்தைவிட இனிப்பும் காரமுமே சிறப்பாக அமைந்துவிடும்.
இத்தகைய சிறிய கூட்டங்களில்கூட சில எழுத்தாளர்கள் மைக்கைப் பிடித்து விளாசத் தொடங்கிவிடுகிறார்கள். தூக்க மருந்தைத் தெளித்ததைப் போல் முதல் வரிசையில் உள்ளவருக்கே தூக்கம் கண்ணைச் சுழற்ற ஆரம்பித்துவிடும்; தூக்கம் வராத சிலரும் மொபைலைத் துழாவ ஆரம்பித்துவிடுவார்கள். நேரம் ஆக ஆக வந்திருந்தவர்கள் மெல்ல வெளியேறிவிடுவார்கள். மேடையில் உள்ளவர்கள் நன்றியுரையை அவர்களுக்குள்தான் சொல்லிக்கொள்ள வேண்டியதிருக்கும்.
இதற்கு நடுவில்தான் இலக்கிய உரையாடல்களை வளர்க்க வேண்டியிருக்கிறது.