

ஐக்கிய அரபு நாடுகளின் முக்கிய நகரமான ஷார்ஜாவில் ஆண்டுதோறும் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெற்றுவருகிறது. இந்தாண்டும் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி வரும் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் சார்பில் 51 பதிப்பகங்கள் கலந்துகொள்கின்றன. தமிழிலிருந்து காலச்சுவடு, சிக்ஸ்த்சென்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ் ஆகிய மூன்று பதிப்பகங்களும் தனி அரங்கை அமைத்துள்ளன.
ரிஷான் ஷெரீப்புக்கு சாகித்திய விருது: இலங்கை அரசு வழங்கிவரும் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய இலக்கிய விருது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ நூல், சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விருதை வென்றது. ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்த, ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்’, ‘கிகோர்’ ஆகிய நூல்களும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்ததால் அதற்கான சான்றிதழ்களும் அவருக்கு வழங்கப்பட்டன.
மலையாளக் கவி ராஜீவன் மறைவு: மலையாள எழுத்தாளர் டி.பி.ராஜீவன் சென்ற வாரம் காலமானர். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதியவர். டெல்லி முன்னணி இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். இவரது நாவலான ‘பாலேறி மாணிக்கம்; பாதிரா கொலபாதகத்தின்ட கத’ நாவல் அதே பெயரில் ரஞ்சித் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்றது. இவரது கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
திருவான்மியூர் புத்தகக்காட்சி: சென்னை திருவான்மியூரில் மேற்குக் குளக்கரைத் தெருவில் உள்ள அமராவதி திருமண மண்படத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கிய புத்தகக்காட்சி வரும் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்களின் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 10 சதவீதத் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கும். தொடர்புக்கு: 9884355516
கவிதை வடிவில் வாழ்க்கை! - மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கையை, ‘காலத்தால் மறையாத கருப்புச் சூரியன்’ எனும் நூலாக கவிதை வடிவில் எழுதியுள்ளார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கிங் நிறுவன வெளியீடாக வெளியிடப்படவுள்ளது. மறைந்த மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியன், மொழியாக்கம் செய்த கடைசி நூல் இது.