நூல் நயம்: இலக்கியவாதியின் சினிமாப் பிரதி

நூல் நயம்: இலக்கியவாதியின் சினிமாப் பிரதி
Updated on
2 min read

திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரகாமின் புகழ்பெற்ற திரைப்படம் ‘அக்ரஹாரத்தில் கழுதை’. இந்தப் படத்தின் திரைக்கதையை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் எழுதினார். இந்தப் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. பேராசிரியர் ஒருவர் தாயை இழந்த கழுதைக் குட்டி ஒன்றை வளர்க்கப்போக, அதனால் சமூகரீதியில் ஏற்படும் பிரச்சினைகள்தாம் கதை. நகரத்தில் கழுதை வளர்க்க முடியாமல் போக, தன் கிராமத்து அக்ரஹாரத்துக்குக் கழுதைக் குட்டியைக் கொண்டுசெல்கிறார். இதன் திரைக்கதை வெங்கட் சாமிநாதனால் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வந்தது. அதன் மறுபதிப்பு இது. இதன் திரைக்கதை குறித்து எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, சி.மோகன் ஆகியோர் வெ.ச.வுக்கு எழுதிய கடிதங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சுரா இதன் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தி.ஜா.வும் சி.மோகனும் பாராட்டியுள்ளனர். ஜான் ஆபிரகாம் ஆளுமை குறித்த வெ.சா.வின் கட்டுரையும் இந்தத் தொகுப்பில் உள்ளது. பிரமிளின் முன்னுரையும் வாசிப்புக்குச் சுவாரசியம் சேர்க்கிறது. திரைப்படம் குறித்து எழுத்தாளர் ந.முத்துசாமி, இயக்குநர் ஞான.ராஜசேகரன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. சினிமா பயில்வோருக்கு இந்தத் திரைக்கதைப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும். - ஜெயன்

அக்கிரகாரத்தில் கழுதை
(சினிமாப் பிரதி)
வெங்கட் சாமிநாதன்
வெளியீடு: காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9840480232

கிராம சபைக் கூட்டத் தகவல்கள்

கிராம சபைக் கூட்டங்கள் ஏதோ நமக்குச் சம்பந்தமில்லாத ஒரு விஷயம் என்பதுபோல கடந்துசெல்கிறோம். பத்திரிகைகளில் இது குறித்த செய்திகளை நாம் வெறுமனே கடந்துவருகிறோம். பொதுமக்களாகிய நாம் இந்தக் கிராம சபைக் கூட்டம் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதைத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது ‘கிராம சபை: அடிப்படை கேள்விகளும் பதில்களும்’ என்கிற இந்நூல். கிராம சபைக் கூட்டங்களை எப்போது கூட்டலாம், யார் அதைக் கூட்டலாம் என்பது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கான பதில்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. கிராம சபைக் கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டால் அந்தக் கூட்டம் செல்லுபடியாகும் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் வலுவான சான்றுடன் கொடுக்கப்பட்டுள்ளன. அரசு வழங்கும் கிராம சபைக் கூட்டத்துக்கான அஜண்டாவை அடிப்படை விவாதப் பொருளாகக் கொண்டு கிராம பஞ்சாயத்தும் சில விஷயங்களை அஜண்டாவுக்குள் வைக்கலாம் என இந்த நூல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. கிராம சபைத் தீர்மானங்கள் பெயருக்கானவை அல்ல. இதை நிரூபிக்க திருவள்ளூர் மாவட்டம் குத்தம்
பாக்கம் கிராம சபை நிலத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக எடுத்த கிராம சபைத் தீர்மானம் வெற்றி பெற்றதை இந்த நூல் ஆதாரமாகக் காட்டுகிறது. - விபின்

கிராம சபை: அடிப்படை கேள்விகளும் பதில்களும்
வெளியீடு: தன்னாட்சி (உள்ளாட்சி உங்களாட்சி), சென்னை
விலை: ரூ.15
தொடர்புக்கு: 9445700758

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in