தமிழ் வழி இந்தி! 

தமிழ் வழி இந்தி! 
Updated on
2 min read

மொழி தொடர்பாக அதிக விவாதம் நடைபெற்றுவரும் காலகட்டம் இது. பல மொழிகள் பேசப்படும் இந்தியத் துணைக் கண்டத்தில் இம்மாதிரியான விவாதங்கள் இயல்பானவை. அதனால் மொழி வெறுப்பு அவசியமற்றது. இளம் தலைமுறையினர் பாகுபாடில்லாமல் பல மொழிகளைக் கற்பது நல்லது. ஆனால், தாய்மொழியைக் கற்கவும் கடைப்பிடிக்கவும் மறக்கக் கூடாது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியான இந்தியைத் தமிழ் வழி எளிதாகக் கற்கலாம் என்பதை ‘தமிழ் மூலம் இந்தி கற்கலாம்’ நூல் விளக்குகிறது. இந்தி எழுத்துகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைத் தமிழில் குறிப்பிட்டுள்ளனர். அதுபோல் நமக்குப் பழக்கப்பட்ட தமிழ் மொழி எழுத்துகளை நினைவூட்டும்படியாக இந்தி எழுத்துகளைப் பட்டியலிட்டுள்ளனர். அடிப்படையில் தொடங்கி வார்த்தை அமைப்பு வரை விரிவாகவும் எளிமையாகவும் இதில் விளக்கப்பட்டுள்ளது. - குமரன்

தமிழ் மூலம்
இந்தி கற்கலாம்!
வியாசர் கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு:
புதிய புத்தக உலகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 044-28158171

அயல்மொழி நூலகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியர்கள் உலகை எப்படிப் பார்த்தார்கள், அது இந்தியாவை எப்படி வடிவமைத்தது என்பதை, அக்காலகட்டத்து இந்தியர்கள் எழுதிய கட்டுரைகள், பேசிய உரைகள், பகிரப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட இன்னபிற ஆவணங்கள் வழி To Raise a Fallen People உருவாகியிருக்கிறது. குறுநூல் அளவுக்கு விரியும் தொகுப்பாசிரியர் ராகுல் சாகரின் அறிமுகக் கட்டுரை, இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஜி20 கூட்டமைப்பு நாடுகளுக்குத் தலைமை ஏற்கும் அளவுக்கு இந்தியாவின் இடம் உலக அரசியலில் இன்று ஸ்திரமடைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில், உலக அரசியல் பற்றிய காலனிய இந்தியாவின் சிந்தனைத் தொகுப்பான இப்புத்தகத்தைச் சமகால வெளிச்சத்தில் வாசிப்பதென்பது வரலாற்றுப் பேராசிரியர்கள், வரலாற்று மாணவர்கள் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களுக்கும் அவசியமாகிறது. - அபி

To Raise a Fallen People: The Nineteenth-Century Origins of Indian Views on International Politics
தொகுப்பாசிரியர்:
ராகுல் சாகர்
வெளியீடு: Columbia University Press/ Juggernaut

முதியோர் நல நூல்

முதியோர் நலம் குறித்த விழிப்புணர்வு நம் சமூகத்தில் இன்றும் போதுமான அளவில் இல்லை. வலுவற்ற உடலுடன், தீராத உபாதைகளுடன் நித்தமும் முதுமையுடன் போராடிவரும் முதியவர்களில் பலர், குடும்பத்தினரின் உளவியல்ரீதியிலான தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளனர். இந்தச் சூழலில், முதுமை குறித்த புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த நூலை டாக்டர் வி.எஸ். நடராஜன் எழுதியிருக்கிறார். முதுமையின் தொடக்கம், அதன் அறிகுறிகள், சந்திக்கும் நோய்கள், தூக்கத்தின் தேவை, உடற்பயிற்சியின் அவசியம் போன்றவை குறித்த கட்டுரைகள் முதுமை குறித்த அச்சத்தைக் களையும் விதமாக எழுதப்பட்டுள்ளன. இறுதி மாதவிடாய், சிறுநீர்த் தொற்று, சிறுநீர்க் கசிவு போன்றவை குறித்த கட்டுரைகள் வயதான பெண்களுக்குப் பயனளிக்கும். - ஹுசைன்

முதியோர் நலம்
டாக்டர் விஎஸ்.நடராஜன்
வெளியீடு: டாக்டர் விஎஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை
விலை: ரூ.250,
தொடர்புக்கு: 81221 02173

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in