

கற்பனையைவிட எதார்த்தத்தையும் உணர்வுகளையும் எழுதுவது சவாலானது; மயிலன் ஜி சின்னப்பனுக்கு அது கைகூடியிருக்கிறது. அவர் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பான ‘அநாமதேயக் கதைகள்’, உறவுகளை அவற்றில் விரவிக் கிடக்கும் சிடுக்குகளை மனித மனத்தின் கீழ்மையைச் சொல்கின்றன. உணர்வுகள் அனைத்தையும் வார்த்தைகளாக்கிவிட முடியாதுதான். ஆனால், அதன் எல்லை வரைக்கும் நீண்டு திரும்பும் முயற்சியை மயிலன் செய்துள்ளார்.
மயிலனின் எழுத்தில் மூன்று அம்சங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, கதைக்காக அவர் தேர்ந்தெடுக்கும் களம். மருத்துவராக இருப்பதாலேயே மருத்துவமனை தவிர்க்க இயலாத களமாகிவிடுகிறது. பன்னாட்டு மருத்துவப் பயிலரங்கு, வீடு, விடுதி, காயல், கேளிக்கை விடுதி, காவல் நிலையம், தென்னந்தோப்பு, திரையரங்கம் என வெவ்வேறு களங்களில் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இரண்டாவது, கதை சொல்லும் பாணி. எந்தக் கதையும் நேர்கோட்டில் பயணிக்காமல் கிளைகிளையாகப் பிரிந்து, வெவ்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. மூன்றாவது, உணர்வுகளின் கச்சிதக் கையாளல். குறிப்பாகப் பெண்ணின் மன உணர்வைக் கையாண்டிருப்பது. பெண்ணைப் பற்றி ஆண் எழுதுகையில் மிகையும் முரணும் இழையோடும். ஆனால், ‘ஐ-பில்’ கதை அப்படி அமைந்ததல்ல. பெண்ணின் மன நெருக்கடியை, உள்ளிருக்கும் குரூரத்தை, அது குரூரம் எனத் தெரிந்ததும் அதிலிருந்து வெளியேற நினைக்கும் தெளிவை, ஒன்றைச் சார்ந்திருக்கும்போது ஏற்படும் சிறுமையை, அதிலிருந்து விட்டு விடுதலையாகும்போது கிடைக்கும் துணிவை... இப்படிப் பெண்ணின் மனவெழுச்சியைக் கதையின் வழியே விரித்தபடி சென்றவிதம் இயல்பாக இருக்கிறது.
‘ஐ-பில்’ கதையில் வரும் பாரதி, தன் காதலனுடன் ஏற்பட்ட உறவால் கர்ப்பமாகிவிடுவோமோ எனப் பயந்து, அதைக் கலைக்க ‘எமர்ஜென்சி பில்ஸ்’ தேடி அலைகிறாள். கடைசியில் இது தன்னுடைய பிரச்சினை, இதிலிருந்து வெளியேறுவது தன் பாடு என்று நினைக்கிற பொழுதில் பாரதி சட்டென்று பலம் கூடியவளாகிறாள். ஒரு பெண்ணுக்குச் சார்பற்ற நிலை வரும்போது அவளுக்குக் கிடைக்கிற தன்னம்பிக்கையும் வேகமும் அளவிட முடியாதவை. பாரதியின் வாயிலாக அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார் மயிலன். எல்லாப் புனிதமும் பெண்ணுடல் மீதுதான் இருக்கிறது என்கிற கற்பிதத்துக்குப் பலியாகிற, ‘ஆகுதி’ கதையின் 22 வயது காவ்யா, நம் வன்முறைக்குச் சான்று. சாதி ஆணவக் கொலைகளுக்குச் சற்றும் குறைவில்லாதவை இதுபோன்ற கொலைகள். குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் கொல்லும் நம் சமூக அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது இந்தக் கதை. தன் மகளின் நிலை நாலு பேருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக மகளையே கொல்லத் துணியும் தாயைத் தண்டித்து எதுவும் ஆகப்போவதில்லை. காரணம், குற்றவாளிகளைப் படம்பிடிக்கவிட்டு நாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இயல்புக்குத் திரும்புவதில் அல்லது திரும்ப முனைவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநிலை இல்லை. யாருக்கும் நேரக்கூடாத துயரம்தான் ‘இடர்’ சிறுகதையில் சேப்ராசு அண்ணனுக்கும் ஏற்படுகிறது. உழவர்களின் நிலையைப் பொருட்படுத்தாத இந்தியா போன்ற நாட்டில் மழை - வறட்சி பாதிப்பால் தற்கொலை செய்துகொள்வதையும் அதிர்ச்சியில் இறப்பதையும் தவிர, நாம் அவர்களுக்கு வேறெந்த உடனடித் தீர்வையும் தருவதில்லை. தான் வளர்த்த தென்னை மரங்கள் எல்லாம் சூறாவளியால் நிலைகுலைந்துபோக, வாழ்க்கையை மறுபடியும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் சேப்ராசு அண்ணனுக்கு. அத்தாச்சியோ மரத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அரசாங்கம் அறிவித்தைத் தொடர்ந்து கணக்கெடுக்க ஆள் வருகையில் போய் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார். எல்லாவிதமான இழப்புகளுக்கும் துரோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் பழக்கப்பட்டவர்கள் பெண்கள். அதனால்தான் சேப்ராசு அண்ணன் ஒரேயடியாகத் தூங்கிவிட, அத்தாச்சி அதையும் ஓலத்தோடு கடந்துவிடுவார் எனத் தோன்றுகிறது.
இந்தச் சமூகம் யாருடைய வெற்றி, தோல்வியையும் தனித்தனியாகப் பார்ப்பதில்லை. ஒன்றுடன் ஒன்றைப் பொருத்திப் பார்க்கிறது அல்லது போட்டியிடச் சொல்கிறது. கல்வி முறையும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது ‘உலர்’ சிறுகதையின் மையம். ஒருவனது வெற்றி எப்படி இன்னொருவனின் தோல்வியாக்கப்படுகிறது, வெற்றிபெற்றவனுக்கு அதனால் ஏற்படும் மன உளைச்சல், தோல்வியடைந்தவனாகக் கருதப்படுபவன் முன்னால் இருக்கும் பாதைகள் என நமக்குத் தெரிந்த கதையில் பல முடிச்சுகளை அவிழ்க்கிறார் மயிலன். ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட விதத்திலோ சமூக அமைப்பிலோ நாம் அடையவேண்டிய மாற்றத்தையும் இலக்கையும் உள்வைத்துப் பின்னப்பட்டுள்ளது. அதுவே கதைகளை நம் மனத்துக்கு நெருக்கமாக்குகிறது. பெண்ணின் மன நெருக்கடியை, உள்ளிருக்கும் குரூரத்தை, அது குரூரம் எனத் தெரிந்ததும் அதிலிருந்து வெளியேற நினைக்கும் தெளிவை, ஒன்றைச் சார்ந்திருக்கும்போது ஏற்படும் சிறுமையை, அதிலிருந்து விட்டு விடுதலையாகும்போது கிடைக்கும் துணிவை... இப்படிப் பெண்ணின் மனவெழுச்சியைக் கதையின் வழியே விரித்தபடி சென்றவிதம் இயல்பாக இருக்கிறது!
அநாமதேயக் கதைகள்
மயிலன் ஜி சின்னப்பன்
தமிழினி வெளியீடு
தொடர்புக்கு: 8667255103
விலை: ரூ.240