Published : 12 Nov 2016 12:09 PM
Last Updated : 12 Nov 2016 12:09 PM

என் உலகம்: தமிழா, ஆங்கிலமா?

நான் சென்னையில் குடியேறி ஐந்தாறு ஆண்டுகளுக்குள் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. கதைகள் பிரசுரம் ஆவது, ஆகாததுகூட என்னைத் தயக்கமுறச் செய்யவில்லை. ஆனால், இரு மொழிகளில் எழுதுவது இரு படகுகளில் காலை வைத்துப் போவது போலிருந்தது. (பல ஆண்டுகள் கழித்து இது நூற்றுக் கணக்கான எழுத்தாளர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது என்று தெரியவந்தது.) சில உலகாயத விஷயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் அறிந்திருப்பது நல்லதுதான்.

ஆனால், படைப்பிலக்கியத்தை முக்கியப் பணியாகக் கொண்டவர்களுக்கு எந்த மொழியில் தொடர்வது என்பது பெரிய கேள்விக் குறி. ஆர்.கே. நாராயணனின் தமிழ் உரையாடல், தமிழ்ப் பரிச்சயம் மிகச் சிறப்பாக இருக்கும். அவர், கூட்டுக் குடும்பத்தின் அறுவடை. வீட்டில் அவ்வளவு பேரும் தமிழே பேசுவார்கள். தமிழிலேயே நகைச்சுவை பரிமாறிக்கொள்வார்கள். சண்டை போடுவது, கண்டனம் தெரிவிப்பது எல்லாம் தமிழில்தான்.

இனி மைசூர் கிடையாது, இதுதான் கடைசி தசராவோ என்ற பயம் எழுந்தபோது என்னுடன் இன்னும் இருவரும் மைசூர் போய்விட்டு வரலாம் என்று முடிவு செய்தனர். நான்காவதாக, நாராயணின் தம்பி ஆர்.கே. ராமச்சந்திரன்.

ஒழுங்காக சென்னை மைசூர் ரிட்டர்ன் டிக்கெட் வாங்கியிருக்கலாம். பெங்களூர் போய் பஸ்ஸில் போவது நல்லது என்று விவரம் அறியாத ஒருவர் சொல்ல, கடைசியில் பெங்களுரிலிருந்து மைசூருக்கு ஒரு பகல் நேர பாஸஞ்சரில் போனோம். மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பதிலாக எட்டு மணி நேரம். நாங்கள் வெந்து நொந்து நாராயணின் வீடு சென்றடைந்தால் அங்கு ஒருவர் தவறாமல், “ஏன்டா, மைசூர் பார்க்க யாராவது தசரா நாளிலே வருவார்களா?” என்று கேட்டார்கள்.

இதுகூடத் தமிழில். கிட்டத்தட்ட நூறு சதம் தமிழ் பயன்படுத்திய குடும்பத்திலிருந்து வந்த நாராயண் ஏன் படைப்பிலக்கியத்துக்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தார்? வீட்டில் என்னதான் தமிழ் பயன்படுத்தினாலும் வெளியில் வேறு மொழி. அதாவது தமிழல்லாத சூழ்நிலை. ஆனால், என் காதில் சென்னையில் எல்லா நேரமும் தமிழ்தானே விழுந்துகொண்டிருக்கிறது?

1960 அளவில், முந்தைய தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரை நான் அறிந்திருக்கவில்லை. நான் என்ன மொழியில் எழுதுவது என்று கலங்கியதற்கு அது ஒரு காரணம். ‘வெறி’என்ற கதைதான் நான் ஆங்கிலத்தில் எழுதியது. இது 1966-ல் அதன் பிறகு கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வாராந்திர ஆசிரியர் வேண்டுகோளுக்கு இணங்க ‘கல்யாணிக்குட்டி அம்மா’ என்ற கதையை ஆங்கிலத்தில் எழுதினேன்.

உலகில் பல எழுத்தாளர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள். என் நினைவுக்கு வரும் முதல் பெயர் ஆஸ்கார் வைல்ட். நகைச்சுவை கொண்ட மகத்தான நாடகங்களும் உரைநடைப் படைப்புகளும் எழுதிய இந்த மேதாவி, நாடு விட்டுப் போய் அற்பாயுளில் இறக்க வேண்டியதாயிற்று. இவர் முதலில் எழுதிய ‘சலோமி’என்ற நாடகத்தை பிரஞ்சு மொழியில்தான் படைத்தார். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவருடைய இலக்கிய அளவுகோல்களுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. அதன் பின் அவருடைய தாய்மொழியாகிய ஆங்கிலத்திலேயே அற்புதமான படைப்புகளைப் படைத்தார்.

இந்த இரு மொழிச் சிக்கலில் மாட்டிக்கொண்ட இன்னொருவர் போலந்து நாட்டு ஜோஸஃப் கான்ராட். இவருக்கு இருபது வயது வரை ஆங்கிலமே தெரியாது. அதன் பிறகு ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் மகத்தான படைப்புகள் படைத்தார். இவர்கள் மேதைகள். உதாரணத்துக்குச் சொல்லலாமே, தவிர நாம் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது. அந்தப் பத்தாண்டுகளில் நான் எழுதவே முயற்சி செய்யவில்லை. ஆனால், அதே பத்தாண்டுகளில் என் ஆரம்பச் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி,’ ‘ஃபெமினா,’ ‘இம்பிரிண்ட்’ போன்ற, பூமியில் கால் பரவாத இந்தியப் பத்திரிகைகளில் என் பிரயத்தனமே இல்லாமல் வெளியாகிக்கொண்டிருந்தன.

‘தாட்’ என்ற டெல்லிப் பத்திரிகை என் கதைகளின் மொழிபெயர்ப்புகளைக் கொண்டு ஒரு தனி ‘சப்ளிமெண்ட்’ வெளியிட்டது. அனீஸ் ஜங்க் என்ற பெண்மணி ‘யூத் டைம்ஸ்’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியையானார். அவருடைய இதழுக்கு இதழ் என்னை எழுதச் சொன்னாள். கட்டுரைகள் எழுதினேனே தவிரக் கதைகள் எழுதவில்லை.

ஆங்கிலத்தில் எழுதினால் ஓரளவு தேசியக் கவனம் பெறலாம். துளியளவு உலகக் கவனம் பெறலாம். நான் இடதுசாரிகளுடன் நட்பு கொண்டிருக்கலாம். இடதுசாரி எழுத்தாளர்களே அன்றைய சோவியத் ரஷ்யாவில் மொழிபெயர்க்கப் பட்டார்கள் என்ற சூழ்நிலையில் என் படைப்புகள் பலவும் ரஷ்ய மொழியாக்கம் செய்யப்பட்டன.

இது பற்றிப் பல ஆண்டுகள் மாஸ்கோவில் வாழ்ந்த பீஷம் சஹானியைக் கேட்டேன். ஆங்கிலத்தின் செல்வாக்கு சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆட்சியாளர்களையும் மீறி வலுவாக உள்ளது என்றார் அவர். “இப்போது பார், நீயும் நானும்கூட ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்,” என்றார். அவர், அவருடைய சகோதரர் பால்ராஜ் சஹானி மற்றும் அவர்கள் குடும்பமே தேசப் பிரிவினையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களானாலும் வெறுப்புக்கு இடமே தராதவர்கள்.

இலக்கியமே அடிப்படையில் மொழிதான். அது பிரச்சினையான மனிதர்கள் உற்சாகமாக இருப்பது கடினம்.

(தொடரும்)
அசோகமித்திரன், மூத்த தமிழ் எழுத்தாளர்.
தொடர்புக்கு: ashoka_mitran@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x