Published : 05 Nov 2016 10:06 AM
Last Updated : 05 Nov 2016 10:06 AM

ஒரு நூற்றாண்டு தாக்கம்...

நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே ஐரோப்பிய நவீன இலக்கியத்தைப் போல் ரஷ்ய இலக்கியமும் இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது. காந்திஜிக்கு, லியோ டால்ஸ்டாயையும் அவருடைய படைப்புகளைப் பற்றியும் தெரிந்திருந்தது. டால்ஸ்டாய் மீது கொண்ட அபிமானத்தினால் அவர், தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, டால்ஸ்டாயின் பெயரிலேயே ஒரு பண்ணையை ஆரம்பித்தார் என்பது உலகமறிந்த செய்தி.

1800-களில் வாழ்ந்த கோகேல், துர்க்கனேவ், டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி முதலான பல பெரும் ரஷ்ய இலக்கியப் படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் ஆங்கிலம் படித்த இந்திய மேல்தட்டு வர்க்க மக்கள், அந்நாட்களிலேயே அறிந்துவைத்திருந்தனர். இன்று உலக இலக்கியங்கள் எல்லாமே ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. ஆனால் நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அயல் இலக்கியங்களை ஆங்கிலத்தில்தான் படிக்க முடியும். 19-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள், உலகமெங்கும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்தன. தமிழில் இந்த முயற்சி, சென்ற நூற்றாண்டில்தான் தொடங்கியது.

‘தினமணி’ நாளிதழின் முதலாசிரியரான டி. எஸ். சொக்கலிங்கம், டால்ஸ்டாயின் முதல் நாவலான ‘போரும் வாழ்வும்’ என்ற மகத்தான ரஷ்ய இதிகாசத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஈடு இணையில்லாத அந்த மொழிபெயர்ப்பை மிஞ்சிய நூல் தமிழில் இதுவரை வெளிவரவில்லை. சுதந்திரப் போராட்ட நாட்களில் காங்கிரஸ்காரரான ஆக்கூர் அனந்தாச்சாரி, டால்ஸ்டாயின் சில சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

ஐரோப்பிய அமெரிக்க இலக்கியங்களை புதுமைப்பித்தன் படித்திருக்கிறார் என்பதற்கு அவர் மொழிபெயர்த்த ஐரோப்பியச் சிறுகதைகளே சான்று. ரஷ்ய இலக்கியத்தைப் பற்றிப் புதுமைப்பித்தன் என்ன நினைத்தார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. ரஷ்யப் படைப்புகள் எதையும் அவர் மொழிபெயர்த்ததாகவும் தெரியவில்லை. பு.பி.யின் நண்பரான க.நா.சு., ரஷ்ய இலக்கியக்கர்த்தாக்களைப் பற்றி தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஐரோப்பிய நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்த க.நா.சு., ரஷ்யப் படைப்புகள் எதையும் மொழிபெயர்க்கவில்லை. 1940-50-களில் இருந்த பல தமிழ்ப் பதிப்பகங்கள் ரஷ்யப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்றன. அவை ஆங்கிலம் அறியாத தமிழ் வாசகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

இவையெல்லாமே உதிரி உதிரியாகச் சிறு அளவில் நடந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள். ரஷ்யப் புரட்சிக்குப் பின் அமைந்த சோவியத் ரஷ்யாவின் அயல்மொழிப் பதிப்பகத் துறை, மார்க்சிய நூல்களோடு, பெருவாரியான அளவில் ரஷ்ய நாவல்கள், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துக் குறைந்த விலையில் வெளியிட்டது. தமிழைப் போலவே பிற இந்திய மொழிகளிலும் அவை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. தமிழ் மொழிபெயர்ப்புக்காக மாஸ்கோ பதிப்பகத்தின் ரா. கிருஷ்ணையா, பூர்ணம். சோமசுந்தரம், தர்மராஜன் முதலான தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் ரஷ்யாவிலேயே தங்கியிருந்து பணிபுரிந்தனர். மாஸ்கோ பதிப்பகத்தின் இம்முயற்சி, ரஷ்ய நூல்களைத் தமிழகமெங்கும் கொண்டுசென்று, பரவலான அளவில் வாசகர்களையும் உருவாக்கியது. இப்படித்தான் நவீன ரஷ்ய இலக்கியம் ஏராளமான தமிழ் வாசகர்களைச் சென்றடைந்தது.

ரஷ்ய இலக்கியம் தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட அளவுக்கு தமிழ் இலக்கியத்திலும் அதன் தாக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாகவோ, எதனாலோ தமிழ் இலக்கியத்தில் அதன் தாக்கம் இல்லையென்பதே உண்மை. ஒரு ‘அன்னா கரீனினா’ போல், ஒரு ‘கரமஸோவ் சகோதரர்கள்’ போல் அல்லது ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ நாவலைப் போல் தமிழில் எந்த நாவலும் உருவாகவில்லை.

அன்றைய மணிக்கொடி எழுத்தாளர்கள் முதல் இன்றைய புது எழுத்தாளர்கள், கவிஞர்கள் வரை, பெரும்பாலான தமிழ் இலக்கியவாதிகள், ரஷ்ய இலக்கியங்களைப் படித்திருக்கிறார்கள். அவை, தங்களைப் பாதித்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால், ரஷ்ய இலக்கியத்தின் ஆழத்தையும் அதன் வீச்சையும் கொண்டு தமிழில் எந்தப் படைப்பும் உருவாகவில்லை.

சமீபகாலமாக, குறிப்பாக 1980-களிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் தஸ்தாயெவ்ஸ்கி பெரிதும் கொண்டாடப்படுகிறார். தற்காலத் தமிழ் இலக்கிய அறிவுஜீவிகள் டால்ஸ்டாயை விட, தஸ்தாயெவ்ஸ்கியை அதிகமாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ போலவோ, ‘அசடன்’, ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற உன்னத மான படைப்புகளுக்கு நிகராகவோ எந்தத் தமிழ் படைப் பாளியாலும் எழுத முடியவில்லை. ரஷ்ய இலக்கியத்தை அனுபவிக்கிற தமிழ்ப் படைப்பாளிகளிடம் அவற்றுக்குச் சமமான படைப்புகளை எழுதும் திராணி இருந்ததில்லை.

ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் எனக்குத் தெரிந்த அளவில் மலையாளத்தில், வங்கமொழியில், இந்தியில், குஜராத்தியில் இருக்கிறது. ஆனால், தமிழில் இல்லவே இல்லை. இனி தோன்றும் என்பதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை.

- வண்ணநிலவன்,

தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x