

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் ஒரே புத்தகமாகச் சுருக்கியிருக்கிறார் உமா சம்பத். புது வெள்ளம், சுழற் காற்று, கொலை வாள், மணிமகுடம், தியாக சிகரம் ஆகிய ஐந்து பாகங்களையும் 500 பக்கங்களுக்குள் அடக்கியிருக்கிறார்கள். நாவல் வெளியான காலத்தில் கதாபாத்திரங்களை உள்வாங்கிக்கொள்ள ஓவியங்கள் துணைபுரிந்தன. இந்தக் காலத்தில் அதற்கான தேவையில்லை என்பதாலோ பக்கங்களின் எண்ணிக்கை குறைப்பு நிமித்தமோ ஓவியங்கள் இடம்பெறவில்லை. அது குறையாகவும் தெரியவில்லை. கதையோட்டத்தைப் பாதிக்காத வகையில் பெரும்பாலான விவரணைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதுவே வாசிப்பை வேகப்படுத்துகிறது. கதைமாந்தர்கள் யாரென விளங்கிக்கொள்வதற்காக மணி குணசேகரன் உருவாக்கிய விளக்கப்படம் புத்தகத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. விளக்கப்படத்தின் எழுத்துரு அளவும் வடிவமைப்பும் கதாபாத்திரங்களின் பெயர்களும் வாசிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. வாசகர்கள் இதை வாசித்துவிட்டுக் கதைக்குள் நுழையக்கூடும் என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். - ப்ரதிமா
பொன்னியின் செல்வன்
(சுருக்கப்பட்ட வடிவம்)
கல்கி
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 044-42009603