

தமிழ்ச் சமூகம் தொல்பழங்காலத்தில் பெண்ணையே தலைவியாகக் கொண்டு இயங்கியது. அவள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அச்சமூகம் கட்டுப்பட்டது. பின்னர் இனக்குழுக்களிடையே நடைபெற்ற போர்களில் அத்தலைமைப் பதவி ஆண்களிடம் சென்றுவிட்டது. அடுத்து, நிலைத்தகுடிகளாக மாறிய நிலவுடைமைச் சமூகத்தில் பெண் தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டாள். அதிகாரத்தை முழுமையாக ஆண்கள் எடுத்துக்கொண்டனர். இன்றுவரை இந்நிலையே தொடர்கிறது. ‘தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்’ என்ற கோ.சசிகலாவின் நூல் இத்தகைய வரலாற்றைத் தொல்லியல் தரவுகளுடனும் தகுந்த படங்களுடனும் முன்வைக்கிறது. கோ.சசிகலா தொடர்ச்சியாக இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறார். இவர் ஏற்கெனவே எழுதியுள்ள ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலச் சமூகம்’, ‘தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்’ ஆகிய நூல்களும் முக்கியமானவை. இவர், தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றனுடன் இணைந்தும் பல முக்கியமான ஆய்வுகளைத் தமிழுக்கு அளித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளில், பெண்கள் தலைமையில் ஒரு சமூகம் செயல்பட்டிருப்பதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இலக்கியத் தரவுகளைவிடத் தொல்பொருள் சான்றுகளே வரலாற்றைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இலக்கியத் தரவுகள் உயர்குடிகளால் உருவாக்கப்பட்டவை; தொல்பொருள் ஆய்வுகளில் கிடைக்கும் தரவுகள் அன்றாட வாழ்க்கையில் எளிய மக்களுடன் தொடர்புடைய புழங்கு பொருட்கள். எனவே, இவற்றைத்தான் வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் கோ.சசிகலா. தாய்தெய்வ வழிபாடு இன்றும் பல்வேறு பழங்குடிகளிடம் தொடர்வதை அறிய முடிகிறது. அதாவது, சக்தியை வழிபடுதல்தான் நம் தொன்மையான வழிபாட்டுமுறை. கொற்றவையே முதல் தெய்வம். குறிஞ்சி நிலமே இந்த தெய்வத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது; பின்னர் இதைத் தன் மகனான சேயோனுக்கு அளித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தையும் கோ.சசிகலா முன்வைக்கிறார். ‘குறிஞ்சித் திணைக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்’ என்று இளம்பூரணர் எழுதியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
தாய்வழிச் சமூகம் தொல்பழங்காலத்தில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. கோயில்களே அதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. இரண்டாம் ராஜராஜன் கட்டிய தாராசுரம் கோயில், ஒரு பெண் தெய்வத்துக்கான கோயில் என்கிறார் கோ.சசிகலா. இறந்தவர்களைத் தாழியில் புதைத்தல் என்ற சடங்குகூட தாய்வழிச் சமூகத்தின் பண்பாட்டையே வெளிப்படுத்துகிறது. இங்குத் ‘தாழி’ என்பது பெண்ணின் வயிறாக உருவகம் செய்யப்பட்டிருக்கிறது. வந்த இடத்துக்கே திரும்புதல் என்பதன் குறியீடாக இச்சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்ற கருதுகோளையும் தன் ஆய்வு முடிவாக வைக்கிறார். பெண் உடல்ரீதியாக வலிமையற்றவள் என்ற கருத்து தற்போது நிலைபெற்றுவிட்டது.
ஆனால், அக்காலத்தில் பெண் மிகுந்த ஆற்றல் கொண்டவளாகவும் படைக்கும் ஆற்றல் பெற்றவளாகவும் போற்றப்பட்டிருக்கிறாள். வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் இருந்து இதற்குரிய சான்றுகளை கோ.சசிகலா எடுத்துக்காட்டுகிறார். இவர் தன் ஆய்வுக்கு இலக்கியச் சான்றுகளைக் குறைவாகவும் தொல்லியல் சான்றுகளை மிகுதியாகவும் பயன்படுத்தியிருக்கிறார். இலக்கியங்களில் ஊடிழையாக மறைந்துள்ள சான்றுகளைவிட நேரடியாகப் புலப்படும் சிற்பங்கள், கற்சிலைகள், சுடுமண் சிலைகள், பானையோடுகள், சுவரோவியங்கள், பாறையோவியங்கள் போன்றவற்றைக் கொண்டு தன் கருதுகோளுக்கு ஆதாரங்களைக் காட்டுகிறார். சமூக வரலாற்றைத் தொல்லியல் ஆய்வுகளினூடாக எழுத இந்நூல் முயன்றிருக்கிறது. அவ்வகையில் மிக முக்கியமானது. - சுப்பிரமணி இரமேஷ் இலக்கிய விமர்சகர், தொடர்புக்கு: ramesh5480@gmail.com
தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்
கோ.சசிகலா
வெளியீடு: தடாகம், சென்னை– 41
விலை: ரூ.160
தொடர்புக்கு:
89399 67179