

‘‘இந்த இளம் மாணவர், பதின்பருவத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரது எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் அவரை எச்சரித்து, இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்’’ - நெல்லைச் சதி வழக்கிலிருந்து நீதிபதியால் விடுவிக்கப்பட்ட அந்த மாணவன் அறம்வளர்த்தநாதன். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அறம்வளர்த்தநாதன், கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.நல்லசிவனால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தவர். அக்காலத்தில் கம்யூனிஸ்ட் தோழர்களான பாலதண்டாயுதம், நல்லசிவன், நல்லகண்ணு, ஆர்.எஸ்.ஜேக்கப், ஐ.மாயாண்டிபாரதி போன்ற தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நெல்லைச் சதி வழக்கில் இருந்த கடைசிப் பெயர் அறம்வளர்த்தநாதன்.
அறம் தனது திருமணத்தின்போது, தனது மனைவிக்கு வழங்கிய பரிசுப் பொருள் அவரைத் திடுக்கிட வைத்தது. வழக்கமாக மணப்பெண்ணுக்கு மோதிரம் போடுவது வழக்கம். ஆனால், இவரோ 25 புத்தகங்கள் அடங்கிய பொதியை வழங்கினார். பெரும்பாலும் டால்ஸ்டாய், செகாவ் எழுதிய சிறுகதைகள். ராகுல் சாங்கிருத்யாயன் நூல்கள். முனைஞ்சிபட்டி அரசுப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, ஊரின் சுடுகாட்டுப் பக்கம் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அதுதான் வசதியான இடம். போலீஸ் தொந்தரவு இருக்காது. ஆனால், இப்படி ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் அவரது புரட்சிகரக் கருத்துகளால் ரெளடிகளின் தாக்குதலுக்கும் ஆளானார். அவரது மனைவியின் நகைகளைப் பறித்ததோடு, அவரையும் தாக்கியதில், வலது காது கேட்கும் திறனை இழந்தது.
கழுகுமலை அரசுப் பள்ளியில் பணியாற்றியபோதுதான் அவரைப் பார்த்தேன்.
வீடு முழுக்க ‘சோவியத் யூனியன்’, ‘சோவியத் நாடு’ இதழ்கள் குவிந்துகிடக்கும். மாணவர்களுக்கு படிக்கக் கொடுப்பார். ‘ஃப்ரண்ட்லை’னில் தோழர் இ.எம்.எஸ். எழுதி வந்த கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து, ‘தீக்கதிர்’ நாளேட்டில் எழுதினார். ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழில் வெளிவரும் முக்கியக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். தோழர்களோடு உரையாடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஏராளமான நூல்களை அள்ளி அள்ளி வழங்கியவர். கொடுத்தால் ஒன்றோ இரண்டோ அல்ல, ஏழெட்டு நூல்களை ஒரே சமயத்தில் அன்பளிப்பாகக் கையெழுத்திட்டு வழங்குவார். திண்டுக்கல் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற பின், அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். ஓய்வுபெற்ற பின்னரும் அவரது சிம்ம கர்ஜனை மட்டும் ஓயவில்லை. தொழிற்சங்கப் போராட்டங்களில் கலந்துகொண்டு பேருரை நிகழ்த்திவந்தார். - இரா.நாறும்பூநாதன் எழுத்தாளர், தொடர்புக்கு: narumpu@gmail.com