

இந்திய அளவில் மிக அதிகமாகப் புத்தகங்கள் வெளியாகும் மொழிகளில் தமிழ் இரண்டாவது இடத்தில் உள்ளது. 60 கோடி மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் 2021ஆம் ஆண்டு 21,645 புத்தகங்கள் வெளியாகின. அதே ஆண்டு, தமிழில் 17,190 புத்தகங்கள் வெளியாகின. தமிழுக்கு அடுத்ததாக வங்க மொழியில் 13,760 புத்தகங்களும் பிற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் தலா 4,000, 4,645, 6,160 புத்தகங்களும் வெளியாகின.
அனைத்து மாநிலங்களின் பதிப்பகச் சங்கங்களின் கூட்டமைப்பான புதுடெல்லியில் உள்ள இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பு, கடந்த 75 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாகச் செப்டம்பர் 30ஆம் தேதியன்று டெல்லியில் விழா எடுக்கப்பட்டது. கூடுதல் சிறப்பாக இந்தியப் பதிப்புத் துறை குறித்து மலர் கொண்டுவரப்பட்டது. வெறும் வாழ்த்துகள் நிறைந்த மலராக அல்லாமல் பதிப்புத் துறைக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களைத் திரட்டித் தொகுத்துள்ளனர். முதன்முறையாக ‘நீல்சன்’ என்கிற அமைப்பின் துணையோடு இந்தியப் பதிப்புத் துறையைக் குறித்து நாடு தழுவிய ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளையும் பதிப்பித்துள்ளனர். (அவ்வறிக்கை தனிப் புத்தகமாகக் கொண்டுவரப்பட்டு இவ்வாண்டு ஃப்ராங்க்பெட் புத்தகக்காட்சியில் வெளியிடப்பட்டது)
இது தவிர, இந்தியாவில் வெவ்வேறு மொழிகளில் இயங்கும் பதிப்புத் துறை குறித்தும் அம்மலரில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ப் பதிப்புத் துறை குறித்தும் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பதிப்புச் சூழ்நிலை சாதகமாக இருப்பதற்குக் காரணம், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நீண்ட இலக்கியப் பாரம்பரியம், இடைக்காலத்தில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் சென்ற நூற்றாண்டில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட கல்வி அறிவும், தமிழ்நாடு அரசாங்கத்தின் தொடர் உதவிகளுமே பதிப்புத் தொழில் இங்கே சிறந்து விளங்கக் காரணமாகிறது.
இந்தியாவில், பிற மாநிலங்களில், தலைநகரங்களில்கூட புத்தகக்காட்சிகள் சரிவர நடைபெறாத சூழ்நிலையில், தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடைபெறுவது சிறப்பு. தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் உதவியும் இதற்கு அடிகோலுகிறது. சென்னை புத்தகக் காட்சிக்கு அரசாங்கம் ஆண்டுதோறும் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் வழங்க முன்வந்திருப்பதும், மாவட்டங்களில் புத்தகக்காட்சி நடத்த நிதி உதவியும் சென்னை எழும்பூரில் கன்னிமாரா நூலக வளாகத்தில் பதிப்பாளர்கள் ஆண்டு முழுவதும் புத்தகங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நிரந்தரப் புத்தகக்காட்சி எனப் பல வகைகளில் உதவிவருகிறது.
நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்குவதாகட்டும், ஊரக வளர்ச்சித் துறை சார்பாகப் பஞ்சாயத்து நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதாகட்டும், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. முன்மாதிரியாகவும் விளங்குகிறது. இதில் பதிப்பாளர்களுக்குச் சில குறைபாடுகள் இருந்தாலும் அரசு முடிந்தவரை அதைக் களைவதற்கு முயன்றுவருகிறது.
நம் நாட்டில், இணைப்பு மொழியாக ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது. 2021இல் 44,360 ஆங்கிலப் புத்தகங்களைப் பதிப்பித்து இந்தியாவில் முதலிடத்திலும், உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலும் உள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து 80 நாடுகளுக்குப் புத்தகங்கள் ஏற்றுமதி ஆகிறது. இதில் 95% கல்வி சார்ந்த புத்தகங்கள். இந்திய அளவில் 20,000 பதிப்பாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் மயமாதல் உலகெங்கும் வேகமாக நடைபெற்று வந்தாலும் இந்தியாவிலும் அது முன்னிறுத்தப்பட்டாலும், புத்தகங்களைப் பொறுத்தவரை பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை. இந்தியப் புத்தகச் சந்தை இன்னும் 90 சதவீதம் அச்சுப் புத்தகங்களைத்தான் நம்பியுள்ளது. கல்விப் புத்தகங்களைத் தவிர்த்து மற்ற ஆங்கிலப் புத்தகங்களில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே மின் புத்தகங்களாக விற்கப்பட்டிருக்கின்றன.
இந்தியப் பதிப்புலகில் தொடக்கக் காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் மிகப் பெரிய சவால், புத்தகங்களைச் சந்தைப்படுத்துதலாகும். உலகில் பல பகுதிகளிலுள்ள மக்கள் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினாலும் தனி ஒருவருக்கு அனுப்பும் செலவு புத்தக விலையைவிடப் பத்து மடங்காக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு வெளிநாடுகளுக்குப் புத்தகங்களை அனுப்புவதற்கு அஞ்சல் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.
நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குறைந்த அளவு புத்தகங்களை அச்சடிப்பதன் மூலம் முதலீடு குறைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். இதன் மூலம் ஏராளமான புத்தகங்களைப் பதிப்பிக்க வழிகிடைத்திருக்கிறது. இணையம்வழியாகப் புத்தகங்களை விற்பது அதிகரித்துவருகிறது. புதிதாக எழுத வருபவர்களுக்குச் சமூக வலைதளங்கள் பெரும் வாய்ப்பினை நல்குகின்றன. முன்பெல்லாம் ஒரு புதிய எழுத்தாளர் தன்னுடைய படைப்பை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. வெகுஜனப் பத்திரிகைகளிலோ இலக்கியப் பத்திரிகைகளிலோ எளிதில் இடம் கிடைக்காது. ஆனால், இன்றைக்குத் தன்னுடைய படைப்பை உலகெங்கும் எவ்விதச் செலவுமின்றி கொண்டுசெல்ல முடிகிறது. பதிப்புலக வாய்ப்பு ஜனநாயகமாகிவருவதன் தொடக்கமாக இதைக் கருதலாம்.
இதற்கு எழுத்தாளர்களும் தயாராக வேண்டும். ஆட்டக் களம் மாறிவிட்டது. சந்தையில் எழுத்தாளர்களும் தங்கள் இருத்தலைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசெல்ல பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் இணைந்து கைகோத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். பொது முடக்கக் காலத்திலும் அதற்குப் பிறகும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மூன்றில் இரண்டு பகுதியினர் தாங்கள் முன்பைவிட அதிகமாகப் புத்தகங்கள் படிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்களது தேர்வில் அச்சுப் புத்தகங்கள் முதல் இடத்திலும் ஒலிப் புத்தகங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
எந்த விலையில் புத்தகங்கள் இருந்தால் வாங்குவதற்கு எளிது என்கிற ஒரு ஆய்வில், நாவல் படிப்பவர்களில் 50 சதவீதத்தினரும், ஏனைய புத்தகங்களைப் படிப்பவர்களில் 40 சதவீதத்தினரும், 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை இருந்தால் சிரமம் இல்லை என்று கருதுகின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட புத்தகங்கள் படிப்போர் சராசரியாக ஆண்டுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை புத்தகம் வாங்கச் செலவிடுவதாகக் கூறியுள்ளனர். வரும் ஆண்டுகளில் பதிப்புத் துறை மாபெரும் வளர்ச்சியைக் காணும் வாய்ப்புள்ளதாக இவ்வறிக்கை குறிப்பிடுவது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.