எழுத்தாளர்களை ஏமாற்றுகிறதா தமிழ் சினிமா?

எழுத்தாளர்களை ஏமாற்றுகிறதா தமிழ் சினிமா?
Updated on
2 min read

“கதைதான் இந்தப் படத்தின் கதாநாயகன்” என்று பெரும்பாலான இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டு நம் செவிகள் புளித்துப் போய்விட்டன. கதைக்கான மெனக்கெடல்தான் சினிமா தயாரிப்பின் முதல் புள்ளி. ஆனால், அந்தக் கதைக்கும் கதாசிரியர்களுக்குமான மதிப்பைத் தமிழ் சினிமா தருகிறதா?

இலக்கியவாதிகளுக்கும் தமிழ் சினிமாவுக்குமான உறவு என்பது தித்திப்பாக இல்லை என்பதே நிஜம். ஒருசில இயக்குநர்கள் மட்டுமே எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக்கும்போது அதற்குரிய நியாயதர்மங்களுடன் நடந்துகொள்கிறார்கள். பலர், எழுத்தாளருக்குரிய சன்மானத்தைத் தருவதில்லை என்பதோடு அவருக்கான பெயரையும் உரிய முறையில் போடுவதில்லை. புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜேஷ் குமார், கதை விஷயத்தில் திரையுலகினர் பலர் தன்னை ஏமாற்றிய கதையை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். இன்னும் பல எழுத்தாளர்கள் வெளியில் சொல்ல வாய்ப்பில்லாமல் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன் போன்ற இலக்கிய ஆளுமைகள் சினிமாவுக்குள் நுழைந் தாலும், தமிழ்த் திரைக் கடலின் நீக்குப்போக்குகளுக்கு அவர்களின் முதுகுத்தண்டு வளைந்து கொடுக்காததால் கசப்புடன் கரையேறிவிட்டார்கள்.

“தியாகராஜ பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’ திரைப்படத்துக்குக் கதை, வசனம் எழுத புதுமைபித்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு புனேவில் நடந்தது, புதுமைபித்தனும் புனே சென்றுள்ளார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. பாதி வேலையிலேயே ஊர் திரும்பிவிட்டார். அந்த புராஜெக்ட்டும் அவரிடமிருந்து கை நழுவிப்போனது” என்கிறார் எழுத்தாளர் வண்ணநிலவன்.

தன் தந்தை அகிலன் தொடர்பான செய்தியை அகிலன் கண்ணன் பகிர்ந்துகொள்கிறார். “என் தந்தையின் ‘கயல்விழி’ நாவலை விலைகொடுத்து வாங்கி ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படமெடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அகிலனின் திரைக்கதை, வசனத்தில் உருவான ‘பட்டினத்தார்’ படத்தில் அவர் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. என் தந்தை கோர்ட்டுக்குப் போனார்” என்கிறார் அகிலன் கண்ணன்.

பின்னாட்களில் நிலைமை ஓரளவு முன்னேறியிருக்கிறது என்பதையும் வண்ணநிலவன் பதிவுசெய்கிறார். “இயக்குநர் ருத்ரையா ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு என்னை வசனம் எழுதச் சொன்னார். எனக்குரிய மரியாதை, ஊதியம் எல்லாம் நிறைவாகவே கிடைத்தன” என்கிறார்.

சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களும் திரைப்படத் துறையில் ஓரளவு மரியாதையாக நடத்தப்பட்ட எழுத்தாளர்களில் அடங்குவார்கள். மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் தாங்கள் பயன்படுத்திக்கொண்ட கதை களுக்கும் கதாசிரியர்களுக்கும் உரிய இடத்தைக் கொடுத் தவர்கள். 80-களில் புஷ்பா தங்கதுரை, மகரிஷி, சிவசங்கரி ஆகியோரின் கதைகள் உரிய விதத்தில் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன.

நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்ற படமாக்கினார். படம் வெளியானபோது டைட்டிலில் நாஞ்சில் நாடனின் பெயர் இருந்தது. ஆனால், அதன் பிறகு தொலைக்காட்சிகளில் வெளியாகும் பதிப்புகளில் அவர் பெயர் இல்லை. ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலைத் தழுவி இயக்குநர் பாலா ‘நான் கடவுள்’ எடுத்தபோது ஜெயமோகன் அதில் வசனங்களை எழுதினார். ஆனால் கதாசிரியராக அவர் பெயர் இடம்பெறவில்லை.

“ஷங்கரின் ‘எந்திரன்’ கதை 1996-ல் நான் எழுதிய ‘ரோபோ’என்ற நாவலின் காப்பி. இதற்காக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். ஆறு ஆண்டுகளாகியும் இன்னமும் ஷங்கர் தரப்பினர் வழக்கை இழுத்தடித்துக்கொண்டிருக்கின்றனர்” என்கிறார் ஆரூர் தமிழ்நாடன்.

“எழுத்தாளர்களை சினிமாவுக்குப் பயன்படுத்தும் இயக்குநர்கள் இப்போது சிலர்தான் இருக்கிறார்கள். இலக்கியவாதிகளைப் பயன்படுத்தினாலும் அவர்களுடைய நாவல்களைப் படமாக்க முன்வர மாட்டார்கள். அவர்களை வசனம் எழுத, ஸ்கிரிப்ட்டில் உதவி செய்ய மட்டுமே பயன்படுத்துவார்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு இயக்குநரும் ஒரு ரைட்டரை வைத்திருந்தனர். அவர்கள் இலக்கியவாதிகள் இல்லை. நானும் ஜெயமோகனும் அதையெல்லாம் உடைத்து சினிமாவில் தொடர்ந்து வேலை செய்கிறோம். உரிய மரியாதை கிடைக்க ஆரம்பித்துள்ளது” என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுபா, பாஸ்கர் சக்தி போன்ற எழுத்தாளர்களை சினிமா இன்று பயன்படுத்திவருகிறது. என்றாலும் இன்னமும் கதைத் திருட்டும் கதாசிரியர்களின் பெயரைக் குறிப்பிடாத மோசடியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கோடிகளில் புழங்கும் திரையுலகம் ஒரு படத்தின் ஜீவாதாரமாக விளங்கும் கதைக்கும் கதாசிரியருக்கும் உரிய மரியாதையை வழங்குவதில் என்ன சிக்கல் என்பது எளிமையான கேள்வி. கற்பனை வறட்சி, படைப்பூக்கத்திற்கான எல்லாப் பெருமையையும் தானே எடுத்துக்கொள்ளும் அரிப்பு ஆகியவைதான் இதற்கு அடிப்படையான காரணம் என்று தோன்றுகிறது. இந்த நோய் தீரும்வரை திரையுலகில் எழுத்தாளர்களுக்கான மரியாதை என்பது தமிழ் சினிமாவில் கலையம்சத்தைப் போலவே அரிதான சங்கதியாகவே இருக்கும்.

- மானா பாஸ்கரன்,

தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in