

கடை விரித்தது க்ரியா
சென்னை மயிலாப்பூரில், ராமகிருஷ்ணா மடத்துக்கு எதிரே திலீப்குமார் நடத்திவந்த சின்ன புத்தகக் கடை ஞாபகம் இருக்கிறதா? அதை அவர் கைவிட இப்போது அங்கு தன்னுடைய விற்பனை நிலையத்தைத் திறந்திருக்கிறது ‘க்ரியா’. திறப்பு விழாச் சலுகையாக அந்த விற்பனை நிலையத்தில் ‘க்ரியா’ புத்தகங்களுக்கு இந்த மாதம் முழுவதும் 20% தள்ளுபடியாம்! க்ரியா தமிழ் அகராதி, தன்னுடைய ஏனைய புத்தகங்கள், பிற பதிப்பகங்களின் தேர்ந்தெடுத்த புத்தகங்களை விற்பனை செய்வதுடன் கூடவே, சிறுவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க தமிழ்-ஆங்கில நூல்களை உள்ளடக்கிய ‘சிறுவர் நூலகம்’ ஒன்றையும் அமைத்திருக்கிறது ‘க்ரியா’. பள்ளி மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம்!
பிள்ளை எடுத்த அப்பா படம்
ஜெயமோகனைப் பற்றி ஓர் ஆவணப் படத்தை அவர் மகன் அஜிதனே உருவாக்கியிருக்கிறார்.
ஜெயமோகனின் எழுத்தாளுமைக்கு மிகவும் அடிப்படையான அவருடைய இளமைக் காலப் பின்னணி, தாய் தந்தையர், அவருடைய படைப்புகள், கனவு முயற்சியான ‘வெண்முரசு’ என்று விரிவாகப் பேசியிருக்கிறார் ஜெயமோகன். அப்பாவை வெகுவாக ரசித்து எடுத்திருக்கிறார் அஜிதன்!
மூச்… இது மோடி யுகம்
குஜராத் கலவரத்தில் பாஜக பெருந்தலை களின் பங்கை அம்பலப்படுத்திய பத்திரி கையாளர் ரானா அய்யூப் (குஜராத் கோப்புகள் நூலாசிரியை) கத்தாரில் நடந்த அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
திடீரென்று நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. இந்தியத் தூதரகத்தின் அழுத்தமே காரணமாகச் சொல்லப்படுகிறது. மோடி யுகத்தில் கடல் தாண்டி இந்திய ஜனநாயகத்தின் புகழ் ஓங்குகிறது!
நாவலாகிறது விருதுநகர்
விமர்சகர் மணிமாறன் புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘பட்டியக்கல்’. ஒரு வர்த்தக நகரமாகவே அறியப் பட்டிருக்கும் விருதுநகரின் பன்முகத்தை வெளிக்கொணரும் நாவலாக இது இருக்கும் என்கிறார் மணிமாறன்!
‘மாப்பிள்ளை’யின் நாவல்
தமிழ் இலக்கிய உலகில் ‘அண்ணன்’ என்ற வார்த்தை கோணங்கியைச் சுட்டும் என்றால், ‘மாப்ள’ என்ற வார்த்தை கணேச குமாரனைச் சுட்டும். யாரிடம் பழகினாலும் அடுத்த இரண்டே நிமிடங்களில் ‘மாப்ளே மச்சான்’ உறவாடிவிடும் கணேசகுமாரன் தன்னுடைய ‘மெனிஞ்சியோமோ’, ‘பெருந்திணைக்காரன்’ சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து, ஒரு நாவலைத் தொடங்கியிருக்கிறார். நாவலின் தலைப்பு ‘எழுத்தாளன்’. எழுத்தாளர்களின் கதையைச் சொல்லும் நாவலாக இருக்கும் என்கிறார். நடிகைகளின் கதையைப் படித்து வந்த சமூகத்துக்கு இது ஒரு மாற்றுதான்!
கிளிக்காரர் 400/100
கடந்த 100 நாட்களில் 400 கவிதைகளை எழுதியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். “நவீன கவிஞர்கள் மொத்தம் நூறு கவிதைகளோடு காணாமல் போய்விடுபவர்கள் என்று இனிமேலும் பேச மாட்டார்கள் இல்லையா?” என்கிறார்.
ஃபேஸ்புக்கில் அன்றாடம் இந்தக் கவிதைகளைப் பதிவிடுவதன் மூலம் புதிது புதிதாக ரசிகைகளைப் பிடிக்கிறார் என்று வேறு தகவல் பரவ, இளங்கவிஞர்கள் காதில் புகை கக்குகிறார்கள்!