

ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் அகதியாகக் குடியேறியவர் எழுத்தாளர் காலித் ஹுசைனி. இவர் எழுதி 2013இல் வெளிவந்த ‘அண்டு தி மௌண்டன்ஸ் எக்கோடு’ என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘மலைகளும் எதிரொலித்தன’. இதை சதீஷ் வெங்கடேசன் மொழிபெயர்த்துள்ளார். கடின உழைப்பின் வழியே ஐந்து குழந்தைகளுடன் வாழ்க்கையை நகர்த்திச்செல்லும் ஓர் ஏழை விவசாயி, கொடிய அரக்கன் ஒருவனுக்குத் தன் குழந்தைகளில் ஒன்றைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவரும் அவருடைய மனைவியும் கண்ணை மூடிக்கொண்டு ஐந்தில் ஒன்றைத் தேர்வுசெய்கிறார்கள். தேர்வுசெய்யப்பட்ட அந்த அதிர்ஷ்டமற்ற குழந்தை அவர்களுக்கு மிகவும் விருப்பமான குழந்தை. துக்கத்தின் ஆழத்தில் விழும் அந்த விவசாயி தன்னுடைய குழந்தையைக் காடு, மலை தாண்டிச் சென்று கண்டுபிடிக்கிறார். அந்த அரக்கனின் அழகிய மாளிகையில், பசுமையான தோட்டத்தில் அவருடைய குழந்தை, தனது கடந்த காலம் குறித்து எவ்விதப் பிரக்ஞையுமற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தது.
மகனை மீண்டும் தன்னுடைய துயர்மிகுந்த வறுமை வாழ்க்கைக்கு அழைத்துவர மனமின்றி அந்த அரக்கனிடமே விட்டுச் செல்ல அந்த விவசாயி தீர்மானிக்கிறார். கருணையின் அடையாளமாக, அந்த அரக்கன் விவசாயிக்கு ஒரு மருந்தைக் கொடுக்கிறார், அது அவருக்கு அந்த மகன் இருந்ததை மறக்கச் செய்கிறது. நாவலின் தொடக்கத்தில் இந்தக் கதை ஆப்கனில் வாழும் ஓர் ஏழைத் தந்தை தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்குச் சொல்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த நாவலின் மையமும்கூட. மனத்தின் பேரழிவைப் பறைசாற்றும் இந்த எளிமையான கதை, சிக்கல் மிகுந்த தார்மீக சமன்பாடுகளின் சாரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நாவலின் எஞ்சிய பகுதியில் அந்தத் தார்மீக சமன்பாடுகளின் அடிநாதத்தை ஹுசைனி பகடிக்கு உள்ளாக்குகிறார்.
‘மலைகளும் எதிரொலித்தன’ -ஹுசைனியின் லட்சியப் படைப்பு. அதன் பன்முகக் கதையும், நடையின் கட்டமைப்பும் நம் மனசாட்சியுடன் நேரடியாக உரையாடுகின்றன. துன்பத்தில் வாழ்பவர்களுக்குத் தங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை வளமிக்கவர்கள் தீர்மானிக்கும் வழிமுறைகளை ஹுசைனி விவரிக்கும் விதம் சமூகத்தின் முகமூடியைக் கழற்றி எறிந்துவிடுகிறது. போர்சூழ் உலகில் இருப்புக்காகப் போராடும் மக்களின் வலிகளை நம்மால் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. போரினூடே, குண்டுகளுக்கு நடுவே அகதிகளாகத் திரியும் மக்களின் அவல வாழ்க்கையை எழுத்தில் காட்சிப்படுத்துவது சுலபம் அல்ல. ஆனால், காலித் ஹுசைனி அதை இந்த நாவலில் சாதித்துக் காட்டியிருக்கிறார். - முகமது ஹுசைன்
மலைகளும் எதிரொலித்தன
காலித் ஹுசைனி
(மொ.ர்.: சதீஷ் வெங்கடேசன்)
வெளியீடு: எதிர்
விலை: ரூ.599
தொடர்புக்கு:
04259 226012,
98650 05084