திண்ணை: பிராங்ஃபர்ட் புத்தகக் காட்சி

திண்ணை: பிராங்ஃபர்ட் புத்தகக் காட்சி
Updated on
1 min read

ஜெர்மன் நகரான பிராங்ஃபர்ட்டில் நடைபெறும் புத்தகக்காட்சி உலக அளவில் பிரபலமானது. இந்த ஆண்டு அக்டோபர் 19இல் தொடங்கிய புத்தகக்காட்சி 23 வரை நடைபெறவுள்ளது. உலகின் முக்கியப் பதிப்பகங்கள் இதில் கலந்துகொள்கின்றன. நூல்களுக்கான மொழிபெயர்ப்பு அனுமதி, பதிப்புரிமை பெற இந்தப் புத்தகக்காட்சிச் சந்திப்பு வழிவகை செய்கிறது. பன்னாட்டுப் பதிப்பகங்கள் பல இந்தக் காரணத்துக்காக இதில் கலந்துகொள்கின்றன. இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் தமிழிலிருந்து காலச்சுவடு பதிப்பகம் பல ஆண்டுகளாகக் கலந்துகொண்டுவருகிறது. எதிர் வெளியீடு பதிப்பாளர் அனுஷ் இந்த ஆண்டு கலந்துகொள்ள இருப்பதாகத் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

எஸ்.ரா. கதை ஆங்கிலத்தில்... எஸ்.ராமகிருஷ்ணனின் ‘புருவமில்லாத பொம்மைகள்’ என்ற சிறுகதை டாக்டர் சந்திரமௌலி மொழிபெயர்ப்பில் ‘பார்டர்லெஸ் ஜர்னல்’ (borderlessjournal) என்ற இணைய இதழில் வெளியாகியுள்ளது. இதே இதழில் கடந்த பிப்ரவரியில் ராமகிருஷ்ணனின் ‘மலைப்பாம்பின் கண்கள்’ என்ற சிறுகதையையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான ஒரு மதிப்புரையும் வெளியாகியுள்ளது கவனத்துக்குரியது.

அழகிய பெரியவனின் வரலாற்று நாவல்: தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவர் அழகிய பெரியவன். ‘தீட்டு’, ‘நெரிக்கட்டு’ ஆகியவை அவருடைய கவனம் பெற்ற சிறுகதைத் தொகுப்புகள். அவரது ‘தகப்பன் கொடி’ நாவல், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை யதார்த்தமாகச் சொன்னது. இந்நாவலுக்காகத் தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளார். விவரிப்பில் நவீனமும் படிமக் காட்சிகளும் அழகிய பெரியவனின் விசேஷமான அம்சம். சோழர், ராஷ்டிரகூடர், பல்லவர், முகலாயர், ஆங்கிலேயர் எனப் பல ஆட்சிகளின் கீழ் இருந்த வரலாற்றுத் தொன்மை கொண்ட வேலூர்ப் பின்னணியில் அழகிய பெரியவன் இப்போது ஒரு வரலாற்று நாவலை எழுதிவருகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in