

இந்தச் சமூக ஊடக யுகத்தில் எழுதியவற்றை, எழுதியவரே மறந்துவிடும் காலம் இது. ஆனால், இதிலிருந்து வித்தியாசப்படுகிறார், லண்டனில் வசிக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த முனைவர் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. ஓர் இடதுசாரித் தந்தைக்குப் பிறந்த ஃபாசில், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பல ஆண்டுகளாக எழுதிய எண்ணச் சிதறல்களின் கலவைதான் ‘எண்ணப்பூக்கள்’ நூல். நூலில் சமகால சமூகப் போக்குகள், பொதுவுடமைக் கொள்கைகள், சமூக அரசியல், பொருளாதாரம், தனிமனித வாழ்க்கை, அதன் நெறிமுறைகள் எனப் பல அம்சங்களையும் ஆழ்ந்த ஈடுபாட்டோடு எழுதியிருப்பதை உணர முடிகிறது. பல கட்டுரைகள் விசாலமான பார்வையையும் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களை வெறுமனே பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தாமல், அதில் எழுதும் எண்ணங்களை ஒரு நூலாகவும் கொண்டுவர முடியும் என்பதற்கு ‘எண்ணப் பூக்கள்’ உதாரணமாகியிருக்கிறது. - டி.கே.
எண்ணப் பூக்கள்
ஃபாசில் ஃப்ரீமேன் அலி
வெளியீடு: சிபி பதிப்பகம்
விலை: ரூ. 300
தொடர்புக்கு: 8838211644
இலக்கண ஒப்பாய்வு நூல்: திராவிட மொழிகளில் தலையாய மொழியாகக் கருதப்படுவது தமிழ். தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் மிகத் தொன்மையானது. திராவிட மொழிகளில் தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு மட்டும்தான் இலக்கண நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை முறையே லீலா திலகம், சப்த சிந்தாமணி, கவிராஜமார்க்கம் ஆகியவை. 11ஆம் நூற்றாண்டில் வடமொழி செல்வாக்குச் செலுத்திய சோழர் காலத்தில், தமிழில் புதிய இலக்கண நூல்கள் இயற்றப்பட்டன. ‘வீரசோழியம்’ என்னும் நூல் புத்தமித்திரன் என்பவர் இதை எழுதினார் எனச் சொல்லப்படுகிறது. இதே காலகட்டத்தில்தான் தெலுங்கு இலக்கண நூலான சப்த சிந்தாமணியும் இயற்றப்பட்டது. இந்த இரண்டு நூல்களையும் ஒப்பிட்டு, அதன் வேற்றுமை, ஒற்றுமைகளை சமூக வரலாற்று நோக்கில் இந்நூல் ஆசிரியர் இரா.அறவேந்தன் அணுகியுள்ளார். இலக்கண ஒப்பாய்வில் குறிப்பிடத்தகுந்த நூல் இது. - விபின்
சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்
இரா.அறவேந்தன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 04652 278525