நூல் வெளி: தனித் தமிழ் இயக்க வரலாறு

நூல் வெளி: தனித் தமிழ் இயக்க வரலாறு
Updated on
3 min read

நூற்றாண்டுக்கு முந்தைய உரைநடைத் தமிழில் வடமொழிச் சொற்கள் மிகுந்திருந்தன. கலைச்சொற்கள் மொழிபெயர்ப்பிலும் இந்நிலைதான். ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் உரைநடைத் தமிழில் வடமொழிக் கலப்பு வெகுவாகக் குறைந்திருப்பதைக் காணலாம். நல்ல தமிழ்க் கலைக்களஞ்சியமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கு வித்திட்டது தனித் தமிழ் இயக்கம் எனத் தைரியமாக உரைக்கலாம். அந்தத் தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றத்தையும் வரலாற்றையும் மறைமலை அடிகளின் பெயரன் மறை. திரு. தாயுமானவன் இந்நூலில் திறம்பட விவரித்துள்ளார். இந்த இயக்கத்துக்குத் துணைநின்ற கொள்கைச் சான்றோர்களின் பங்களிப்பையும் முறைப்படி வரிசைப்படுத்தியுள்ளார்.

வடமொழியே இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் மூலம் என நம்பப்பட்ட காலத்தில், தமிழை மூலமாகக் கொண்ட திராவிட மொழிகள் பல உள்ளன என ஆராய்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதிய கால்டுவெல்லை முன்மொழிந்து இந்தக் கட்டுரையை ஆசிரியர் தொடங்குவது போற்றுதலுக்குரியது. தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றுவாயாகப் பாம்பன் சுவாமிகளின் ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். செய்யுளில் வடமொழிக் கலப்பு இருந்த காலகட்டத்தில் இந்த நூல் தனித் தமிழ்ச் சொற்களால் இயற்றப்பட்டது. இதன் முன்னுரையில் தமிழும் வடமொழியும் தனித்த இரண்டு மொழிகள். இவை தனித்தியங்கும் தன்மை கொண்டவை என்பதைப் பாம்பன் சுவாமிகள் தெளிவாக்கியுள்ளார்.

தனித் தமிழ் இயக்கத்தின் நோக்கம் வடமொழிக் கலப்பைத் தடுப்பதற்காகத்தான் தோன்றியதே அன்றி, வடமொழி வெறுப்பால் தோன்றியதல்ல என்பதையும் நூலாசிரியர் தெளிவாக்கியுள்ளார். வடமொழிக் கலப்பால் தமிழ் மொழியிலிருந்து கிளை மொழிகள் தோன்றியதை அறிஞர்களின் மேற்கோள்களுடன் இதில் சொல்லப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற திராவிட மொழிகள் தமிழில் வடமொழி நிகழ்த்திய தாக்கத்தால் விளைந்தவை என்பது திருத்தமாக விளக்கப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்லூரிகளில் தமிழைப் பாடத்திட்டத்தில் சேர்க்காமல் விடப்பட்டதற்கு எதிராக அப்போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைச் சுட்டித் தாய்மொழிக் கல்விக்கான போராட்டம் அப்போதே தொடங்கிவிட்டதையும் நூல் குறிப்பிடுகிறது.

கால்டுவெல்லின் ஆராய்ச்சி தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழியில் பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவினார். இந்த இயக்கம் தமிழ் வளர்ச்சியில் ஆற்றிய பங்கு சிறப்புறச் சொல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசரின் ‘சொற்பிறப்பியல் அகராதி’, பூபாலனாரின் ‘தமிழ் வரலாறு’, அ.சிதம்பரநாதர் ‘ஆங்கிலம்-தமிழ் அகராதி’, கு.கதிரைவேலின் ‘தமிழ்ச் சொல் அகராதி’ போன்ற பல நூல்கள் இந்த முறைப்பாட்டில் வகித்த பங்கும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுத் தமிழ் விருப்பப் பாடமாக மாற்றப்பட்டதால், மறைமலை அடிகள் தாம் பார்த்துவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியை இழந்தார் என்ற செய்தியும் கவனம் கொள்ளத்தக்கது. சென்னை ஆட்சிக் குழு 1913இல் தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. அதற்கு ஆதரவளித்த சத்தியமூர்த்தியையும் இந்நூல் கவனத்துடன் நினைவுகூர்கிறது. சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவற்றைத் தமிழில் நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்த எஸ்.குப்புசாமி ஐயங்காரும் இந்த வரிசையில் நினைவுகூரப்படுகிறார். ‘சுதேசமித்திர’னின் ஆங்கிலக் கலப்பைக் கண்டித்து, 1916இல் ‘ஞானபாநு’ இதழில் சுப்பிரமணிய சிவா எழுதிய குறிப்பும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அ.மாதவையாவும் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கமும் தமிழ்ச் செம்மொழியே என வாதிட்ட நிகழ்ச்சியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தனித் தமிழ் இயக்கம் என்னும் பெருங்கடலின் சிறு துளிகளையும் நூலாசிரியர் சிரத்தையுடன் கவனப்படுத்தியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது.

சமய எழுச்சியாலும் படையெடுப்பாலும் தமிழில் நிகழ்ந்த மொழிக் கலப்பை மறைமலை அடிகளாரின் துணை நின்று விளக்குகிறார் நூலாசிரியர். ராமலிங்க அடிகளின் ஒரு பாடலைப் பாடித் தன் மகளுடன் கழித்த ஒரு பொழுதில், அப்பாடலில் உள்ள வடமொழிச் சொல்லை நீக்கித் தமிழ்ச் சொல்லைச் சேர்க்கும்போது ஓசை இன்பம் மிகுவதை மறைமலை அடிகள் தன் மகளுக்கு விளக்கினார். வடமொழிச் சொல்லால் அதற்கு நிகரான அருமைத் தமிழ்ச் சொற்கள் மறைந்தே போகும் என்பதையும் வலியுறுத்தினார். அப்படியானால், பிறமொழிச் சொற்களின் பயன்பாட்டை நீக்கித் தனித் தமிழை நாம் பயன்படுத்த வேண்டும் என அவரது மகளும் தனித் தமிழ் இயக்கவாதியுமான நீலாம்பிகை அறிவுறுத்தினார். மகளின் கருத்தை ஏற்ற அடிகள், தன் பெயரான வேதாசலத்தை மறைமலை அடிகள் என மாற்றி தனித் தமிழ் இயக்கத்துக்கான சுடரை ஏற்றினார். இந்நிகழ்வு நூலில் தெளிவுறச் சொல்லப்பட்டுள்ளது.

மறைமலை அடிகளின் மகளும் அவர் வழிநின்று தனித் தமிழ் இயக்கத்துக்காகச் செலவுசெய்தவர். தனித் தமிழை வலியுறுத்தி ‘தனித் தமிழ்க் கட்டுரைகள்’ என்னும் நூலையும் வெளியிட்டார். அவரது வாழ்க்கைக் குறிப்புடன் இது சொல்லப்பட்டுள்ளது. நீலாம்பிகை தலைமையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் ஈ.வெ.ராவுக்குப் ‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட அருந்தகவலும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்துக்கு இணையாக வடமொழிச் சொற்களைக் கலைச்சொற்களாகப் பயன்படுத்தப்படுவது குறித்த விமர்சனத்தைப் பெரியார் ‘குடியரசு’ இதழில் எழுதியுள்ளதை வேறோர் இடத்தில் நூல் சுட்டிக்காட்டுவது கவனம் கொள்ளத்தக்கது. மறைமலை அடிகளின் தனித் தமிழ் இயக்கத் தளபதி எனச் சொல்லப்படும் தேவநேயப் பாவாணரின் வாழ்வும் பணியும் அடுத்ததாகக் கோக்கப்பட்டுள்ளன. வடமொழி, தமிழ் ஆகியவற்றின் சொற்பிறப்பியலை ஆராய்ந்து தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி என்பதை நிறுவிய பாவாணரைப் பற்றி நூலாரிசியர் நயம்பட விளக்கியிருக்கிறார். இவ்வாறு தனித் தமிழ் விழுதுகள் என்ற தலைப்பின் கீழ் இயக்கச் சான்றோர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன், கு.மு.அண்ணல்தங்கோ, சி.இலக்குவனார், வை.பொன்னம்பலனார், பெருஞ்சித்திரனார், இறைக்குருவனார், மறை.திருநாவுக்கரசு, மா.நன்னன், இரா.இளவரசு, மு.தமிழ்க்குடிமகன் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பும் தமிழ்ப் பணியும் இந்நூலில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

தனித் தமிழ் இயக்கத்தின் வரலாற்றையும் திராவிட இயக்க வளர்ச்சியையும் நூலாசிரியர் ஓரிடத்தில் ஒப்பிடுவது பொருத்தமானது. மொழி என்பது தொடர்பாடலுக்கானது என இந்தக் காலகட்டத்தில் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. ஆனால், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான நம் அருமைத் தமிழ், பண்பாடாக, அரசியலாகச் சுடரொளி வீசும் பண்புடையது. அந்தக் கருத்தை இந்த நூல் நமக்கு நினைவூட்டித் தூண்டுகிறது. - மண்குதிரை
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

தனித் தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்

மறை. திரு.தாயுமானவன்

வெளியீடு: மறைமலையடிகள் பதிப்பகம்

விலை: ரூ.450

தொடர்புக்கு: 9840988361

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in