Published : 19 Nov 2016 10:05 AM
Last Updated : 19 Nov 2016 10:05 AM

தமிழ் எழுத்தாளருக்கான விருதுத் தொகை கௌரவமா, அகௌரவமா?

தமிழ்ச் சூழலில் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் விருதுகளில் அரசுசார் அமைப்புகளில் நிலவும் அரசியலுக்கு இணையாக தனியார் அமைப்புகளிடையே பரவும் மலிவுக் கலாச்சாரம் உருவெடுத்துவருவது அதிருப்தி அளிக்கிறது.

ஒரு காலகட்டம் வரை தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு அரசுசார் விருது கிடைக்க வேண்டும் என்றால், அவர் அந்திமத்திசையை அடைந்தால்தான் சாத்தியம் என்பது எழுதப்படாத விதிபோல இருந்தது. அப்படியும்கூட விருதுகளால் புறக்கணிக்கப்பட்ட ஆளுமைகள் என்று சுந்தர ராமசாமி, சி.மணி தொடங்கி ஞானக்கூத்தன் வரை விருது கௌரவங்கள் ஏறாமலேயே புகழுடம்பு எய்தியவர்களின் பெரும் பட்டியல் உண்டு. சாகித்ய அகாதமியோ, தமிழக அரசோ இதுபற்றி எப்போதும் அலட்டிக்கொண்டதில்லை.

இந்த அவலச் சூழலுக்கு மாற்றாகத் தனியார் அமைப்புகள் மற்றும் தனிமனிதர்களால் உருவாக்கப்பட்டு தமிழ் நவீன எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் விருதுகள் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் அதிகரித்துள்ளது வரவேற்புக்குரியது. ஆனால், பெரும்பாலான விருதுகளுடன் தரப்படும் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் தொகைகள் மிகவும் சொற்பமானவை. ரூ.1 லட்சத்தை உள்ளடக்கிய ‘விஷ்ணுபுரம் விருது’, ரூ.75 ஆயிரத்தை உள்ளடக்கிய ‘விளக்கு விருது’ போன்ற சில விதிவிலக்குள் நீங்கலாக பெரும்பாலான விருதுகளுடன் அளிக்கப்படும் தொகையானது படைப்பாளிகளுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.

ஒரு சிறந்த படைப்பாளியைக் கௌரவிக்க அவரது படைப்புகளைக் கௌரவிக்கும் அளவுகோலாக பணம் இருக்க முடியாதுதான். ஆனால், எழுத்து போன்ற செயல்பாடுகளையே லௌகீக வாழ்வுக்கு எதிராகப் பார்க்கும் நமது இந்திய நடுத்தர வர்க்க மனநிலையில் ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படும் விருதுக்கு நிகராக அந்தப் பரிசுத்தொகையும் முக்கியத்துவம் வாய்ந்ததே. சமூகத்துக்கு அவர் அளித்த வாழ்நாள் கொடைக்கு, அவரது குடும்பத்திலிருந்து வரும் ஆமோதிப்பாக அந்தப் பரிசுத்தொகை இருக்கிறது. பாப்லோ நெருதா தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு தீவே வாங்கினார் என்று கூறப்படுவது உண்டு. இங்கே அந்த நிலை சாத்தியமில்லாவிட்டாலும், ஒரு எழுத்தாளர் தனது பரிசுத் தொகையைக் கொண்டு ஒரு வாடகை வீட்டுக்கு முன்பணம் கொடுக்கும் அளவுக்காவது இருக்க வேண்டும் இல்லையா? மாறாக, ஒரு மாத வாடகைத் தொகையைக் காட்டிலும் குறைவான தொகையைப் பரிசாக அளிப்பதை எந்த வகையில் கௌரவமானதாக எடுத்துக்கொள்ள முடியும்?

ஒரு சமூகம் படைப்பாளிகளைக் கௌரவிப்பதன் வாயிலாக உண்மையில் தன்னை கௌரவித்துக்கொள்கிறது. பரிசுத் தொகை உண்மையில் சமூகத்தின் பொருளாதார நிலையை அல்ல; மனநிலையையே எதிரொலிக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x