

பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் (George Luzerne Hart, III) எனும் பெயர் இன்று பலரும் அறிந்த ஒன்று. இதற்கு, ‘தமிழ், செம்மொழி என அறிவிக்கப்படுவதற்கு உரிய அத்தனை தகுதிகளையும் உடையது’ என இவர் எழுதிய பரிந்துரைக் கடிதமும் ஒரு காரணம். இவ்வாறாகப் பரிந்துரைத்த இப்பேராசிரியர் யார்? இவர் தமிழுக்கு, குறிப்பாகச் செவ்வியல் தமிழுக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் என்னென்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் எல்.ஹார்ட், தமிழ், சம்ஸ்கிருதம், ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளில் புலமை உடையவராக விளங்குகிறார். 1970இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் (Sanskrit and Indian Studies) முனைவர் பட்டம் பெற்றார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதும் மத்திய அரசின் குறள் பீட விருதும் இவரது தமிழ்ப் பணிக்காக அளிக்கப்பட்டுள்ளன. இவரது ஆய்வு தமிழ், சம்ஸ்கிருதச் செவ்விலக்கியங்களுக்கு இடையேயான மிக முதன்மையான ஒப்பிலக்கிய ஆய்வாக அமைகின்றது. ‘நான் இயற்பியல் படிக்கவே ஹார்வர்டில் சேர்ந்தேன். என் அறைத் துணைவர் சம்ஸ்கிருதம் படித்தார். உலகின் மிகப் பழமையான ஒரு மொழியைப் படிப்பதாக அவர் சொன்னதும் அந்த வகுப்பிற்குச் சென்றேன். சென்ற இடத்தில் அதைவிடவும் தொன்மையானது தமிழ் என்று தெரிந்ததும் தமிழால் ஈர்க்கப்பட்டேன்’ எனப் பேட்டி ஒன்றில் தனது தமிழார்வம் பற்றிக் கூறியிருக்கிறார் ஹார்ட்.
பயன் தரும் தமிழாய்வுகள்: இவ்வாறாக இந்திய மொழிகளின்பால் ஈர்க்கப்பட்ட ஹார்ட், 1960-களின் பிற்பகுதியில் இந்தியா வந்து தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றார். இது குறித்து இக்கட்டுரையாளர் எழுப்பிய வினாவுக்கு “நான், ஏறக்குறைய ஓராண்டுக் காலம் இந்தியாவில் ராமசுப்பிரமணியம் என்பவரிடம் தமிழும் கே.வி.சேஷாத்ரிநாதன் உள்ளிட்ட பண்டிதர்களிடம் சம்ஸ்கிருதமும் பயின்றேன். இவர்கள் யாவருக்கும் ஆங்கிலம் தெரியாது. இவர்களிடம் முறையே தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில்தான் பேச வேண்டும். நாள்தோறும் காலையில் மூன்று மணி நேரம் தமிழ் வகுப்பு நடைபெறும். வகுப்பு முடிந்ததும் வகுப்பில் படித்த பாடங்களை மூன்று மணி நேரம் செலவிட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொள்வேன். அடுத்து சம்ஸ்கிருத வகுப்பு நடைபெறும். அவ்வகுப்பில் நடத்தப்படும் பாடங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அடைவாக்கம் செய்துகொள்வேன். இவ்வாறாகப் பயின்று பெற்ற தரவுகளின் அடிப்படையிலேயே எனது ஆய்வேடு உருவானது” எனப் பதிலளித்துள்ளார்.
இவரது முனைவர் பட்ட ஆய்வேடு 1975ஆம் ஆண்டு ‘The Poems of Ancient Tamil: Their Milieu and their Sanskrit Counterparts’ எனும் தலைப்பில் கலிபோர்னியப் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது. அடுத்து, 1976ஆம் ஆண்டு ‘The Relation between Tamil and Classical Sanskrit literature’ எனும் தலைப்பிலான ஆய்வு நூலும் வெளிவந்துள்ளது. இவ்விரு ஆய்வு நூல்களும் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய தமிழாய்வுச் சூழலிலும் பயன்தரத் தக்கனவாய் அமைந்துள்ளன.
தமிழ் நல்கிய கொடை: தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் செவ்வியல் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்திய ஹார்ட் பண்டைத் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு இடையே இலக்கியப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைத் தனது ஆய்வின்வழி வெளிப்படுத்தியுள்ளார்.
‘தமிழ்ச் செவ்விலக்கியங்கள் தக்காணப் பெருங்கற்கால நாகரிகத்தில் தோற்றம் பெற்றுள்ளன. இவை, தக்காணப் பகுதியில் தோன்றி விளங்கிய சமூகத்தின் பாணர் மரபில், வாய்மொழி இலக்கியங்களாக உருவாகியுள்ளன. அதேநேரம், இத்தக்காண மரபிலிருந்தே இந்தோ ஆரிய இலக்கிய வடிவங்களும் உருப்பெற்றிருக்க வேண்டும். இவை பிராகிருத இலக்கியமான ‘ஹாலாவின் சத்தசயீ’ வழியாகக் காளிதாசரின் காலத்தில் சம்ஸ்கிருத இலக்கிய மரபுக்குச் சென்றிருக்க வேண்டும். காளிதாசரும் தக்காணப் பகுதியிலிருந்து பெறப்பட்ட இலக்கிய மரபுகளை அப்படியே பயன்படுத்தவில்லை. சம்ஸ்கிருதத்துக்கே உரிய மாற்றங்களைப் பின்பற்றியே அவற்றைப் பயன்படுத்தியுள்ளார்’. இவை ஆய்வின் முதன்மையான முடிவுகள். இத்தகைய பாணர் மரபுவழி உருப்பெற்ற இலக்கியங்கள், வேறு இந்திய இலக்கியங்கள் எதிலும் இடம்பெறாமல் தமிழில் இடம்பெறுவது இந்திய இலக்கியத்துக்கு ‘தமிழ்’ அளித்துள்ள ‘கொடை’ எனக் குறிப்பிடுகிறார். இத்தகைய சிறப்புக்குரிய தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைத் தோற்றுவித்த பண்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தி சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
புறநானூறு மொழிபெயர்ப்பு: மொழிபெயர்ப்பு எனும் நிலையிலும் ஹார்ட் தமிழ்ச் செவ்வியலுக்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். அகநானூறு, புறநானூறு ஆகிய இரண்டு தொகை நூல்களையும் முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய தொகைகளின் தெரிவுசெய்யப்பெற்ற பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1969 இல் தொடங்கி அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்து, 2009இல் பணிநிறைவு பெற்றுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் பெர்க்லியில் தமிழுக்கான இருக்கையை உருவாக்கி, அது தொடர்ந்து செயல்பட வழிவகை செய்துவருகிறார். இவருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரது மனைவி கௌசல்யா ஹார்ட்டும் தமிழாய்வு, மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் செவ்விலக்கியங்களின் மீது தீராப் பற்றுக்கொண்டுள்ள ஹார்ட், ஒருவர் புறநானூற்றுப் பாடல்களைப் படித்து, அதன் ஆழமான பொருளை உணர்ந்தே தனது வாழ்நாளைக் கழித்துவிடலாமெனக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் புறநானூற்றுப் பாடல்களைப் படித்து, அதன் ஆழமான பொருளை உணர்ந்தே தனது வாழ்நாளைக் கழித்துவிடலாமெனக் குறிப்பிட்டுள்ளார்.
பு.கமலக்கண்ணன்
ஜார் ஜ் எல்.ஹார் ட்டின் ‘தமிழ்-
சம்ஸ்கிருதச் செ வ்விலக்கிய
உறவுகள்’ நூலின்
மொழிபெயர்ப்பா ளர்.
தொடர்புக்கு: pkkannan96@gmail.com