சிறாரின் வாசிப்பு: நிதர்சனம் என்ன?
பெரும்பாலான புத்தகக்காட்சிகளில் குழந்தைகளை ஈர்க்கும்படி பல அரங்குகள் அமைந்துள்ளன. அவர்களும் ஆசையாய்ப் புத்தகங்களை எடுக்கிறார்கள்; தொட்டுப் புரட்டுகிறார்கள். விலையைப் பார்த்ததும் அங்கேயே வைத்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களின் வாங்கும் சக்தியோடு ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கான புத்தகங்களின் விலை வெகு தூரத்தில் இருக்கிறது.
இந்தப் பின்னணியில் ‘புத்தகக்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்?’ என்கிற தலைப்பில் ஒரு சிறு நூலைச் சமீபத்தில் நிறைவடைந்த மதுரைப் புத்தகக்காட்சியில் ‘இல்லம் தேடிக் கல்வி’ அரங்கிற்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் முயற்சியை முன்னெடுத்தோம். அவர்களோடு உட்கார்ந்து வாசிக்கவைத்து கலந்துரையாடலும் நடத்தினோம். 36 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,200 மாணவர்களைச் சந்தித்ததன்வழி வாசிப்பின் இடர்களை அறிய முடிந்தது. அரசுப் பள்ளிக் குழந்தைகள் எந்தெந்த அரங்குகளுக்குள் நுழைகிறார்கள் என்பதைக் கவனித்தோம். இந்தச் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் முத்துக்குமாரி, ராணி குணசீலி ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். மதுரை புத்தகக்காட்சியில் பேய்க்கதைகள், புரூஸ் லீ, பகத்சிங் எனப் பிடித்த புத்தகங்களை வாங்கிய குழந்தைகளிடம் பேசினோம். புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறார்களுக்கான வழிகாட்டுதலைப் பெரியவர்களான நாம் தரவில்லை என்றே சொல்ல வேண்டும். தற்காலச் சிறார் இலக்கிய உலகம், பள்ளிக் குழந்தைகளிடமிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது என்பதே நிதர்சனம்.
மாணவர்களின் வாசிப்புக்கான முதல்படி ஆசிரியர்களின் வாசிப்புதான். அதைச் சரி செய்யாமல் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவது கடினம். அந்த வகையில் தொடர்ச்சியாக வாசிக்கும் ஆசிரியர்களைப் பெற்ற குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள். தற்போது அரசு மேற்கொள்ளத் தொடங்கியிருக்கும் பள்ளி நூலக முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன. மாற்றங்களும் தென்படத் தொடங்கியிருக்கின்றன. மாணவர்களுக்கென வெளியாகியுள்ள ‘தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ போன்ற சிறார் இதழ்கள், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ இதழ் போன்ற முயற்சிகளும், பள்ளி நூலகத்திற்கு நூல் தேர்வு, இதழ் பரிந்துரைகள் போன்ற யாவும் பெரும் நம்பிக்கையைத் தருகின்றன.
இந்த நேரத்தில், தமிழகத்தில் வாசித்துக்கொண்டிருப்பவர்களின் ஒட்டுமொத்தப் பங்கேற்பும் இதில் அவசியமாகிறது. மொட்டை மாடியிலும், மரத்தடியிலும், கிளை நூலகங்களிலும் அருகில் உள்ள குழந்தைகளோடு பெரியவர்களும் சேர்ந்து வாசிக்க வேண்டும். குழந்தைகள் வெளியிடங்களில் உட்கார்ந்து வாசித்த அனுபவங்களைப் பேசப் பள்ளிக்குள் நேரமும் இடமும் ஒதுக்கப்பட வேண்டும். குழந்தைகளின் வாசிப்பை ஈர்க்கும் விஷயங்களைப் பெரியவர்கள் முதலில் கண்டுணர வேண்டும். பிறகு, அதை மேம்படுத்தும் முயற்சிகளில் இறங்கலாம். ஒட்டுமொத்தமாக சமூகத்தையும் பள்ளியையும் இணைக்கிற புள்ளியாக வாசிப்பு மாற வேண்டும்.
சக.முத்துக்கண்ணன்
‘சிலேட்டுக்குச்சி’, ‘ரெட்இங்க்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: kannatnsf@gmail.com
