

தமிழகத்தின் சாதனைகளை ஆவணப்படுத்தும் எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் சாதியின் ஆணவத்தைப் பெருமை பேசும் குணம் பெரும்பாலான தமிழர்களிடத்தில் உண்டு. முன்பைவிட அது இன்னமும் மோசம் என்பதுதான் கொடுமை! இப்படியான காலகட்டத்தில் வந்திருக்கிறது ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய 'ஆணவக் கொலைகளின் காலம்' எனும் கட்டுரைத் தொகுப்பு.
ராசி பலன்கள் போல ஆணவக் கொலைகளும் ஊடகங்களில் வெளியாகும் தினசரிச் செய்தியாக இடம்பெற்றுவிட்டன. இந்த ஆணவக் கொலைகள் ஏதோ சமீபத்தில் புதிதாகத் தோன்றிய ஒன்றல்ல; வரலாறு நெடுகிலும், தொன்றுதொட்டு வரும் கொடிய வழக்கமே இது என்பதைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குகிறார் நூலாசிரியர்.
இந்த ஆணவக் கொலைகள் குறித்துத் தமிழ்த் திரைப்படங்கள் காட்டும் ஜாலங்களையும், இமையம் எழுதிய கதைகளின் வழியே தெரியும் உண்மைகளையும் நம் முன் வைத்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பின்னிணைப்புகளாக தர்மபுரி வன்முறை குறித்தும், கோகுல்ராஜ் மரணம் குறித்தும் தான் பங்கேற்றிருந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கைகளை வழங்கியிருக்கிறார். கூடவே, தலித்களுக்கான கட்சிகள் சாதிக் கட்சிகளின் திரட்சியை எதிர்கொள்ளும் திறன் இல்லாமல் இருக்கின்றன என்பதையும் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் சிலவற்றின் மூலம் விளக்குகிறார். மிக முக்கியமான ஆவணம் இந்த நூல்!