உயிர்த்தெழும் உண்மைகள்

உயிர்த்தெழும் உண்மைகள்
Updated on
1 min read

ஸ்டாலின் ராஜாங்கத்தின் புதிய நூல் ‘பண்பாட்டின் பலகணி’ அடியாழத்தில் புதைந்துள்ள உள்மெய் தோண்டி எடுத்துக்காட்டும் மாயத்தைச் செய்திருக்கிறது. சாவுச் சடங்குகள் எனப்படும் நீத்தார் சடங்குகளே நம்முடைய ஆதி வழிபாடுகளாக இருந்திருக்கின்றன என்று கூறும் ஆசிரியர், நாம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளின், திருவிழாக்களின் அடியோட்டமாக இத்தகைய சடங்குகளே இருந்திருக்கும் என்கிற கருதுகோளின் அடிப்படையில் நிகழ்த்திய உரையாடல்களும் கள ஆய்வுகளுமே இந்நூலின் கட்டுரைகளாக உருப்பெற்றிருக்கின்றன. ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, தீபம், தீபாவளி, மாவலி அமாவாசை, போகி, பொங்கல், மாசிக்களரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களை எடுத்துக்கொண்டு அவற்றை நினைவுகூர்வதற்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் வைதீகக் கதையாடல்களின் பொருத்தமின்மையையும் இந்நாட்களில் பின்பற்றப்படும் சடங்குகளில் தொழிற்படும் நீத்தார் சடங்குகளின் பொருத்தப்பாட்டையும் விவாதிக்கும் இக்கட்டுரைகள், பண்பாட்டாய்வில் புதிய குரல்.

தமிழர் திருநாளாகக் கொண்டாடப்பெறும் பொங்கல் விழாவுக்குச் சமயச்சார்பற்ற, மொழி அடிப்படையில் ஒருங்கிணைந்த விழா என்கிற சமகாலத்து விளக்கங்களுக்கான சான்றுகள் எதுவும் தமிழ் வரலாற்று எழுத்துப் பிரதிகளில் இல்லாத நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முறைமைகளை ஆய்ந்து, அவற்றில் இடம்பெறும் சடங்குகளாக அழுவது, பழைய பொருட்களை நீக்குவது, படையல், இறைச்சி, உப்பில்லாத பொங்கல், மொட்டையிடுவது போன்ற சடங்குகளைத் தொகுத்தளிக்கும் ஆசிரியர், பொங்கல் பண்டிகையில் நீத்தார் சடங்குகள் உள்மெய்யாகவும் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசியல் சார்ந்த கருத்தியல்கள் புறமெய்யாகவும் இருப்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இந்தக் கற்பிதங்களே பெருமிதமாகவும் உகந்ததாகவும் நாம் அமைதிகொள்வோமானால், வரலாறு என்பதன் அர்த்தம்தான் என்ன என்கிற ஆசிரியரின் கேள்வி இங்கு முக்கியமானது. மகாளய அமாவாசை, பெருமாள் வழிபாட்டையும் கார்த்திகை தீபம், நெருப்பாய் நின்ற சிவன் கதையையும் தீபாவளி, நரகாசுரன் அழிக்கப்பட்ட கதையையும் புறமெய்யாகக் கொண்டிருப்பினும் உள்மெய்யாக உள்ளூர் நீத்தார் சடங்குகளே இருப்பதைக் களச் சான்றுகளோடு விளக்கும் ஆசிரியர், ஒரு சம்பவம் நடந்து அதை நினைவுகூர ஆண்டுதோறும் விழா நடக்கிறது என்கிற பொதுப் புரிதலைத் தலைகீழாக்கி, இங்கு மக்களிடம் புழங்குகிற சடங்குகளின் செல்வாக்கை ஒட்டியே பிற்காலத்தில் கதைகள் புனையப்பட்டன என்பதையும் தெளிவுபடுத்துகிறார். மேலும், ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையிலும் நீத்தார் நினைவுகூரல் இருக்க, ஐப்பசி மாத அமாவாசையை மட்டும் தீபாவளி கதையைப் பொருத்த வைதீகம் தேர்ந்தெடுத்தது ஏன் என்கிற ஆய்வாளரின் கேள்வியும் விளக்கமும் கவனம்பெற வேண்டியது. - ஜெ.சுடர்விழி, பேராசிரியர், தொடர்புக்கு: sudaroviya@gmail.com

பண்பாட்டின் பலகணி
ஸ்டாலின் ராஜாங்கம்
வெளியீடு: பரிசல் வெளியீடு,
சென்னை-106
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9382853646

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in