நூல் வெளி: பதிப்புத் தொண்டைப் பறைசாற்றும் நூல்

நூல் வெளி: பதிப்புத் தொண்டைப் பறைசாற்றும் நூல்
Updated on
1 min read

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு பதிப்பகம் முல்லை; அதன் பதிப்பாளர் முத்தையா. அவரால் 1944இல் தொடங்கப்பட்டது இந்தப் பதிப்பகம். பாவேந்தர் பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’, ‘பாண்டியன் பரிசு’, ‘நல்ல தீர்ப்பு’, ‘காதல் நினைவுகள்’ உள்ளிட்ட பல நூல்களை நல்ல முறையில் பதிப்பித்தது. பாரதிதாசன் பாடல்கள்மீது கொண்ட ஈர்ப்பால் அவற்றை வெளியிடுவதற்காகவே முத்தையா இந்தப் பதிப்பகத்தைத் தொடங்கினார். ‘முல்லை’ என்ற பெயரையும் பாவேந்தரே முன்மொழிந்திருக்கிறார். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் பிரபலமான மனநல சுயமுன்னேற்ற(?) எழுத்தாளராக மலர்ந்த எம்.எஸ்.உதயமூர்த்தியின் முதல் நூலையும் முல்லை வெளியிட்டது. முத்தையா முதலில் தொடங்கி நடத்திய கமலா பிரசுராலயம் ராஜாஜியின் முதல் நூலான ‘மதுவிலக்கு’ வெளியிட்டது குறிப்பிடத்தகுந்தது. முத்தையாவின் நூற்றாண்டு இது. அவரைக் கெளரவிக்கும் வகையில் (‘முல்லை’ பழநியப்பன்) முத்தையா குறித்த அருந்தகவல்களையும் முத்தையா குறித்த அறிஞர்களின் கட்டுரைகளையும் தொகுத்து முல்லை பதிப்பகம் ‘முல்லை முத்தையா நூற்றாண்டு மல’ரை வெளியிட்டுள்ளது. வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் கட்டுரை முல்லையின் விரிவான வரலாற்றைச் சொல்லிவிடுகிறது.

அச்சுத் துறை வரலாற்றில் விற்பன்னரான சலபதி, பதிப்புப் பணி நின்றும் இலக்கிய வரலாறு சார்ந்தும் முத்தையா பற்றிய முழுமையான சித்திரத்தை வாசகர்களுக்குத் தருகிறார். சம்பிரதாயமற்ற வகையில் எழுதப்பட்டுள்ள சலபதியின் கட்டுரை இந்த மலரில் கவனம்கொள்ளத்தக்கது. திராவிடத் தலைவர் மு.கருணாநிதி, முத்தையா பற்றிப் பகிர்ந்த தகவல் வாசகர்களுக்குச் சுவாரசியம் அளிக்கும். வே.குமரவேல், க.நா.சுப்ரமணியனின் குறிப்பொன்றில் அன்னாரைப் பற்றி எழுதியதைச் சுவைபடக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சான்றோர்கள் பலருக்கும் முத்தையாவுக்கும் இருந்த நட்பை நயம்பட இந்தத் தொகுப்பு வெளிப்படுத்துவதில் வெற்றிபெறுகிறது. திருப்பூர் கிருஷ்ணன், விக்கிரமன், நாரண.துரைக்கண்ணன், வீரமணி, ‘பாரி நிலையம்’ செல்லப்பன், பொன்னீலன் உள்ளிட்ட அறிஞர்கள் பலரின் ஆக்கங்கள் இந்த மலருக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன.

முல்லை முத்தையா நூற்றாண்டு மலர்
முல்லை மு.பழநியப்பன்
வெளியீடு: முல்லை
விலை: ரூ.600
தொடர்புக்கு: 9840358301

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in