

நபிகள் நாயகம் குறித்த விரிவான ஆய்வு நூல்கள் தமிழில் அரிதாகவே எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்நூலைப் பைம்பொழில் மீரான் எழுதியிருக்கிறார். இஸ்லாமியர் அல்லாதோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு. நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் முயற்சிகள் தொடரும் சூழலில், அவரின் வரலாற்றை ஆறே தலைப்புகளில் அடக்கி அளித்த விதம் ஆசிரியரின் எழுத்தாளுமையையும், சீரிய திட்டமிடலையும் வெளிப்படுத்துகின்றன. இந்நூலில் நபிகளாரின் பேரன்பை மட்டுமல்லாமல், அவர் பெருங்கோபம் கொண்ட தருணங்களின் பின்னணியையும் மீரான் அழகாகத் தொகுத்து அளித்திருக்கிறார். இந்நூல் நெடுக ஆங்காங்கே நபிகள் நாயகத்தின் தலைசிறந்த பொன்மொழிகள் தனியே தரப்பட்டிருக்கின்றன. ஆன்மிக தாகம் கொண்டவர்களுக்கு உதவும் நூல் இது. - நிஷா
முஹம்மது: பேரன்பும் பெருங்கோபமும்
பைம்பொழில் மீரான்,
வெளியீடு: ஹார்ஸ்சென்ஸ் மீடியா நெட்வொர்க்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 6380798360
பெண் மனத்தின் நுண்மைகள்
மஞ்சுளாவின் ‘வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை..' என்கிற கவிதைத் தொகுதி, மொழி எளிமையும் செறிவும் ஒருங்கே அமைந்த நூல். இவர் எழுத்தில் பெண் மனத்தின் நுண்மைகள் நன்கு வெளிப்பட்டிருக்கின்றன. நடப்புகளின் இன்றியமையாமை தளையாக இருந்தபோதும் அவற்றிலிருந்து விடுபடத் துடிக்கும் ஆசை எழுத்தின் ஊடாகச் செல்கிறது. பறவை, மரம் மற்றும் மழை மேல் இவருக்கிருக்கும் ஈடுபாடு பலவகையில் இதில் வெளிப்பட்டுள்ளது. முரண்கள், படிமங்கள் போன்றவற்றை மிகத் திறனுடன் கையாளுகிறார். அடர் வனம், சிறுமியின் பாடல், அம்மாவின் சேலை போன்ற நல்ல கவிதைகளை எழுதிய இவர் கவனிக்கத்தக்கவர். - கானப்ரியன்
வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை
மஞ்சுளா
வெளியீடு: கடல் பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 8680844408