

புலியூர்க் கேசிகன், நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களுக்குத் தெளிவுரை எழுதியவர். தமிழ் ஆசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வறிஞர், சோதிட அறிவியல் விற்பன்னர் எனப் பல முகங்கள் உடையவர். நல் தமிழ் இலக்கியங்களை மக்களிடத்தில் சேர்த்ததில் இவரது பங்குப் போற்றத்தக்கது.
புலியூர்க் கேசிகனின் இயற்பெயர் க.சொக்கலிங்கம். திருநெல்வேலிக்கு அருகில் புலியூர்க்குறிச்சியில் பிறந்தவர். இவரது குடும்பம் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டது. தொடக்கநிலைக் கல்வியை, அருகில் இருந்த டோனாவூரிலும் உயர்கல்வியைத் திருநெல்வேலியில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக நடைபெற்றுவந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கேசிகனார் கலந்துகொண்டார். தமிழறிஞர்கள் மு.வரதராசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆகியோருடனான நட்பு கேசிகனாரின் தமிழ்ப் பசிக்கு நல் விருந்தானது.
வடுகச்சிமலைப் பள்ளியில் ஆசிரியர் பணி செய்துவந்தார். இந்தக் காலகட்டத்தில் மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை டோனாவூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது கேசிகனாரின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைக்குக் காரணமானது. தமிழறிஞரின் மகள் என்ற அடிப்படையில் கேசிகனார் அவர்களுக்கு உதவியுள்ளார். அதனால் நீலாம்பிகை, கேசிகனார்பால் அன்பும் மரியாதையும் கொண்டவரானார். நீலாம்பிகையின் கணவர் திருவரங்கனார் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். அவரது சிபாரிசில் புலியூர்க் கேசிகனார் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் திருநெல்வேலிக் கிளையில் மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தத் தம்பதியின் மகளான சுந்தரத்தம்மாளை மணம்புரிந்து அவர்களது மருமகனுமானார். சில காலத்துக்குப் பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். மெய்ப்புப் பார்ப்பது தொடங்கி நூலாக ஆக்கம் பெறுவது வரையிலான பல நிலைகளில் கேசிகனாரின் பங்கு கவனம்கொள்ளத்தக்க வகையில் இருந்தது.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக பணிக்குப் பிறகு, அருணா பதிப்பகத்திலும் அதைத் தொடர்ந்து பாரி நிலையத்திலும் பணியாற்றினார். இங்குதான் சொக்கலிங்கம், புலியூர்க் கேசிகன் ஆனார் எனச் சொல்லப்படுகிறது. இன்றைக்கு மெச்சப்படுகிற அவரது தமிழ்த் தொண்டு இங்குதான் தொடங்கியது. 1958இல் தொல்காப்பியத்துக்கு முழு விளக்க உரை எழுதி வெளியிட்டார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களுக்கும் விளக்கவுரை எழுதினார். நற்றமிழ் நூல்களை மிக எளிய உரைவழி மக்களிடம் கொண்டுசேர்த்தார். இவர் விளக்கவுரைக்குக் கடைபிடித்த எளிமை அறிவுலகில் விமர்சனத்துக்கும் உள்ளானது.
சோதிடத்தில் ஈடுபாடு கொண்டவர். அதை முறைப்படி கற்றவர். அதனடிப்படையில் ‘எண்களின் இரகசியம்’, ‘எண்களும் எதிர்காலமும்’, ‘ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்’, ‘திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ‘நந்தி வாக்கு’, ‘ஜோதிட நண்பன்’ போன்ற ஜோதிடம் சம்பந்தப்பட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பை வகித்துள்ளார். ஆன்மிகத்திலும் பிடிப்புக்கொண்டவர். ‘மாங்காடு காமாட்சியம்மன் வரலாறு’ நூலை எழுதியுள்ளார்.
‘முத்தமிழ் மதுரை’, ‘ஐந்திணை வளம்’, ‘புகழ்பெற்ற பேரூர்கள்’, ‘புறநானூறும் தமிழர் சமுதாயமும்’, ‘புறநானூறும் தமிழர் நீதியும்’, ‘பூலித்தேவனா... புலித்தேவனா?’ ஆகியவை இவரது ஆய்வு நூல்கள். காளமேகம், ஒளவையார், கம்பன் ஆகியோரின் தனிப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தளித்தது இவரது சிறப்பு வாய்ந்த பணி. சங்க இலக்கிய நூல்கள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். கலிங்கத்துப் பரணி, நளவெண்பா போன்ற சிற்றிலக்கிய நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். ஒப்புநோக்கிப் பார்த்தால், ஒரு குழுவோ நிறுவனமோ செய்ய வேண்டிய பெரும்பணி இது. தனி மனிதராக அவர் செய்தது அருஞ்செயல். இதற்காகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் நினைவுகூரப்பட வேண்டிய தமிழறிஞர். - ஜெயகுமார்; தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in