Published : 19 Nov 2016 10:09 AM
Last Updated : 19 Nov 2016 10:09 AM

என் உலகம்: வாசிப்பும் வழிகாட்டிகளும்- அசோகமித்திரன்

நீண்ட ஆயுள் இருப்பதில் ஒரு சங்கடம், நண்பர்கள் பலரின் மரண ஊர்வலத்தில் பங்கு கொள்வது என்று சாமர்செட் மாம் கூறியிருக்கிறார். அவரைப் போலவே இன்னும் சிலரும் கூறியிருக்கிறார்கள். மாம் இறப்பதற்குள் 90 வயது தாண்டிவிட்டார். அவர் மாதிரி மனநிறைவோடு உயிரை விட்டவர்கள் துறவிகள்தான். நண்பர்களை இழப்பதோடு இன்னொரு சங்கடம், பதினெட்டும் இருபது வயதுமான இளம் நிருபர்களுக்குப் பேட்டி அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம். அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்று நானும் பதில் தருவேன். இரண்டு கேள்விகள் தவறாமல் இருக்கும். புனைபெயர்; எழுதத் தூண்டிய நூல்கள். என்.வி. ராஜாமணி என்ற ராமநரசு எழுதிய ‘வானவில்’ என்ற நாடகம் பெரும் வெற்றியடையவில்லை. அதன் கதாநாயகனின் புனைபெயர் அசோகமித்திரன். ஆசிரியர் அனுமதியோடு அந்தப் பெயரை தமிழ், ஆங்கிலம் இரு மொழிப் படைப்புகளுக்கும் பயன்படுத்திவருகிறேன். இந்த பதில் முதல் கேள்விக்கு. இரண்டாவதற்கு, எனக்குப் பள்ளிப் படிப்பில் சில அபூர்வமான ஆசிரியர்கள் நேர்ந்தார்கள். என்.ஆர்.கே.எல். நரசிம்மன், காமேஷ்வர் ராவ், எம்.எஸ். கோடீஸ்வரன், ராஜாபாதர். என் வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களுமே எழுத்தாளர்கள் ஆகியிருக்கக் கூடியவர்கள்.

ஆசிரியர்கள் மட்டும் போதுமா? நூல்கள் வேண்டும். நான் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கும்போது ஆங்கிலப் பாடத்துக்குத் துணை நூலாக சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘எ டேல் ஆஃப் டூ சிடீஸ்’ இருந்தது. எனக்கு இலக்கியத்தின் விளிம்பைத் தொட அந்த நூல் கிடைத்தது. நான் பத்தாவது முடிக்கும்போது எங்கள் ஊரில் பத்தாவதுதான் பள்ளி இறுதி வகுப்பு நான் சார்லஸ் டிக்கன்ஸின் பல முழு நாவல்களைப் படித்திருந்தேன். என் அப்பா பத்தாவது வகுப்பு வரைதான் படித்தார். ஆனால், அவர் பைரனின் கவிதைகள், ஷேக்ஸ்பியரின் மொத்தப் படைப்புகள், டிக்கன்ஸின் பல நாவல்கள், சாமுவேல் ஸ்மைல்ஸ் எழுதிய பல சுயமுன்னேற்ற நூல்கள், பிரதாப முதலியார் சரித்திரத்தின் மூன்றாம் பதிப்பு, கமலாம்பாள் சரித்திரத்தின் இரண்டாம் பதிப்பு, எனப் பல தமிழ்-ஆங்கில நூல் களோடு கிரந்தத்தில் சுந்தர காண்டம் ஆகியவையும் வாங்கிப் படித்திருக் கிறார்! பிரதாப முதலியார் சரித் திரத்தைக் குடும்பத்துக்கே கேட்கும் படியாக உரத்துப் படிப்பார். பல வகைகளில் ஒரு விளிம்பு மனிதனாக வாழ்ந்தவர் இப்படிப்பட்ட நூல்களை என்ன எண்ணி வாங்கினார், படித்தார்? ஷேக்ஸ்பியர் நூலில் ‘ரேப் ஆஃப் லுக்ரீஸ்’என்றொரு நீண்ட கவிதை இருக்கும். ரோமானியப் படைத்தலைவனின் மனைவி லுக்ரீஷி யாவின் அழகையும் குணத்தையும் அறிந்த இளவரசன் அந்தப் பெண்மணியைப் பலவந்தத்துக்கு உள்ளாக்குகிறான். நிகழ்ந்த காலத்தில் சொல்லப்படும் அந்த வரலாற்றில் அந்தக் கொடூர நிகழ்ச்சியை மட்டும் ஷேக்ஸ்பியர் இரு வரிகள் நிகழ் காலத்தில் எழுதியிருப்பார். இப்படிக் காலம் மாறுவதை என் அப்பா எனக்கு எடுத்துக் கூறினார். இதையெல்லாம் கவனிக்க அவருடைய நெருக்கடி வாழ்க்கையில் எப்போது நேரம் கிடைத்தது?

எனக்குக் கல்லுரியில் ஆங்கில பாடத்துக்கு இரு நல்ல ஆசிரியர்கள் கிடைத்தார்கள். அத்துடன் எங்கள் கல்லூரி நூலகமும் நல்ல நூல்கள் கொண்டதாக அமைந்தது. செவ்வாய் ஒரு நாள்தான் எங்களுக்கு நூலக நாள். நாங்கள் காத்திருப்போம்.

நான் 1952-ல் சென்னையில் குடியேறியபோது அமெரிக்கன் நூலகம் மத்திய நூலகத்துக்கு அடுத்த கட்டிடத்தில் இருந்தது. அந்த விசாலமான அறையில் படிக்கலாம், அங்கத்தினரானால் இரு புத்தகங்கள் இரு வாரங்களுக்கு இரவல் வாங்கலாம். நேரமிருந்தால் தூங்கலாம். அது சொந்த இடத்துக்கு மாறியபோது தூதரக அலுவலகங்களும் அங்கு வந்துவிட்டன. அது, எளிதில் நெருங்க முடியாத கோட்டையாயிற்று. பிரிட்டிஷ் நூலத்தில் அன்று மாணவர்களுக்கு ஐந்து ரூபாய் வருடக் கட்டணம். பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ‘கிளாசிக்ஸ்’ என அறியப்பட்ட நூலகளைப் படித்து முடித்தேன். சா. கந்தசாமி மூலம் எனக்கு மத்திய நூலகப் பரிச்சயம் கிடைத்த்து. ‘ஐராவதம்’ சுவாமிநாதன் மணிமணியான யோசனைகள் கூறுவார். அவர் ‘இந்தப் படத்தைப் பாருங்கள், இந்த நூலைப் படியுங்கள்’ என்று சிபாரிசு செய்தால் அதைச் செய்யத் தவறியதே கிடையாது. அவர்தான் மத்திய நூலகத்தில் அன்றிருந்த ‘எ பர்ஸனல் ஆன்தாலஜி’ (அந்தரங்கமானதொரு தொகுப்பு) நூலைப் படிக்கச் சொன்னார். அது ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ் தன் படைப்புகளிலிருந்தே தேர்ந்தெடுத்த கவிதை, கட்டுரை, கதைகளின் தொகுப்பு. போர்கெஸ் நவீன லத்தீன் அமெரிக்க இலக்கியப் போக்கை நிர்ணயித்தவர். போர்கெஸ் நூல்களை எவரும் படிக்கலாம். ஏமாற்றம் இருக்காது.

அதே போல அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் இயற்றிய ‘விநோத ரச மஞ்சரி’ என்ற நூல். ஒரு புதிய பதிப்புக்குப் பதிப்பாளர்கள் கவிமணி இராமலிங்கம் பிள்ளை அவர்களை ஒரு முன்னுரைக்காக அணுகியிருக்கிறார்கள். அவர் அந்த நூலில் உள்ள பிழையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே நேரத்தில் ‘தமிழ் மொழியின் ஒரு பகுதி போல உள்ள’ அந்த நூலைப் பதிப்பிக்க முன்வந்த பதிப்பாளரை வாழ்த்தவும் செய்தார். நான் அந்த முன்னுரையைப் படிக்கும்போதெல்லாம் ஆச்சரியப்படுவேன். எப்பேர்ப்பட்ட மாமணிகள் இலக்கியத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள்!

க.நா. சுப்பிரமணியன் பற்றி நினைக்கும்போதும் இந்த வியப்பு தான் தோன்றுகிறது. அவருடைய வாழ்நாளில் அவரைத்தான் எவ்வளவு கிண்டல் செய்திருக்கிறார்கள்! ஆனால் அவர் இறுதி வரை எழுதிக் கொண்டிருந்தார். ஏராளமான அச்சுப் பிழைகளுடன் வெளியான ‘பித்தப்பூ’ நாவலில்கூட அவருடைய மேதைமை தெரியவரும்.

நீண்ட ஆயுள் வாழ்பவர்களுக்கு எதுவுமே வியப்பைத் தராது என்பார்கள். ஆனால் எனக்கு அன்று வியப்பூட்டிய இலக்கிய மேதைகள் இன்றும் வியப்பளிக்கிறார்கள்.

- அசோகமித்திரன், தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர்

தொடர்புக்கு: ashoka_mitran@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x