Published : 02 Oct 2022 04:35 AM
Last Updated : 02 Oct 2022 04:35 AM

‘பாபாசாகேப் அம்பேத்கர் - ஒரு பன்முகப் பார்வை’ நூல் வெளியீடு: மாவட்டம் தோறும் கொண்டு செல்ல நீதிபதி சந்துரு வேண்டுகோள்

`தி இந்து' குழுமத்தின் தமிழ் திசை பதிப்பகம் சார்பில் `பாபாசாகேப் அம்பேத்கர் - ஒரு பன்முகப் பார்வை' என்ற நூலை முன்னாள் நீதிபதி கே.சந்துரு வெளியிட, து.ரவிக்குமார் எம்.பி. பெற்றுக்கொண்டார். உடன் `இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன், செ.கு.தமிழரசன். (உள் படம்) வாழ்த்துரை வழங்கிய மிசோரம் முன்னாள் ஆளுநர் ஆ.பத்மநாபன். படம்: ம.பிரபு

சென்னை

‘தி இந்து’ குழுமத்தின் தமிழ் திசை பதிப்பகம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘பாபாசாகேப் அம்பேத்கர் - ஒரு பன்முகப் பார்வை’ நூலை முன்னாள் நீதிபதி கே.சந்துரு வெளியிட, து.ரவிக்குமார் எம்.பி. பெற்றுக்கொண்டார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து வெளியான கட்டுரைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முடிவு செய்தது.

அதன்படி, ‘தி இந்து’ குழுமத்தின் தமிழ் திசை பதிப்பகம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘பாபாசாகேப் அம்பேத்கர் - ஒரு பன்முகப் பார்வை’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். நூலை முன்னாள் நீதிபதி கே.சந்துரு வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான து.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன்: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அம்பேத்கர் பற்றிய அரிய கட்டுரைகள் வந்துள்ளன. அடுத்த கட்டமாக, அதை தொகுத்து புத்தகமாக வெளியிடும் திட்டம் இருக்கிறது.

அம்பேத்கர் பற்றி முழுமையான ஒரு தொகுப்பை கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான அறிவுரைகள், வழிகாட்டுதலை நமது விருந்தினர்களிடம் வேண்டுகிறோம்.

முன்னாள் நீதிபதி கே.சந்துரு: அம்பேத்கர் பற்றி இந்து குழுமத்தில் இருந்து புத்தகம் வருவதை முக்கிய குறியீடாகதான் பார்க்கிறேன். நாம் கருத்து ரீதியாக போராட்டத்தை முன்னெடுக்க ஒரே ஆயுதம் அம்பேத்கர்.

அவரது கருத்துகளை எடுத்துச் செல்ல இந்த புத்தக வெளியீடு நிச்சயமாக பயன்படும். இந்து குழும கட்டமைப்பைக் கொண்டு மாவட்டம்தோறும் இந்த புத்தகத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.

து.ரவிக்குமார் எம்.பி.: இன்று அம்பேத்கர்தான் இந்திய அரசியல் உரையாடலின் மையப்புள்ளி. அவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் நெருக்கடியை சந்திக்கிறது. இந்த நிலையில் இந்த நூல் வெளியிடப்படுவதும், அதை நீதிபதி சந்துரு வெளியிடுவதையும் முக்கியமானதாக பார்க்கிறேன்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மிசோரம் முன்னாள் ஆளுநரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலருமான ஆ.பத்மநாபன் நிகழ்ச்சிக்கு வர இயலாததால், அவரது சார்பில் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் பங்கேற்றார். அவர் ஆ.பத்மநாபனின் வாழ்த்துரையை வாசித்தார்.

நூலை தொகுத்த ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகையாளர் இரா.வினோத் நன்றியுரை வழங்கினார். பத்திரிகையாளர் மா.சுசித்ரா தொகுத்து வழங்கினார்.

நூலை அஞ்சலில் பெறலாம்: ‘பாபாசாகேப் அம்பேத்கர் - ஒரு பன்முகப் பார்வை’ நூலின் விலை ரூ.220.

இந்தியாவுக்குள் புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற ஒரு புத்தகத்துக்கு அஞ்சல் செலவு ரூ.30-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 சேர்த்து, KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி:

‘இந்து தமிழ் திசை நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002. போன்: 044-30899000. நூலை ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications. உங்கள் முகவரி மற்றும் கைபேசி எண்ணை அவசியம் குறிப்பிடுங்கள். மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 044 30899092

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x