

ராம் தங்கத்தின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு ‘புலிக்குத்தி’. இவரது புனைவு உலகம் பதின்பருவச் சிறுவர்கள் குறித்தானது. பல்வேறு காரணங்களால் அகப்புற நெருக்கடிக்குள்ளாகும் சிறுவர்கள், இவரது கதைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
எழுத்தாளரையும் மீறி அவர்கள் இவரது புனைவில் ஊடுருவுவதாகவே கருதுகிறேன். ராம் தங்கம் காட்டும் சிறுவர்களின் உலகம் விவரிக்க முடியாத புதிர்த்தன்மையும் துயரங்களும் நிரம்பியது. குறிப்பாக, அம்மாவை இழந்த சிறுவர்களின் வாழ்க்கை இச்சமூகத்தின் மீது நிகழ்த்தும் ஊடாட்டத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் எழுதிவருகிறார். எதிர்பாராமல் நிகழும் இழப்புகளும் அதனூடாக அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் வறுமையும் படைப்பாளரை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இளமையில் வறுமை மிகக் கொடியது என்பது ஔவையின் வாக்கு. எப்படிக் கொடியது என்பதை ஔவை விளக்கவில்லை. ராம் தங்கத்தின் பல கதைகள் இதனை ஊடறுத்துச் சென்றிருக்கின்றன.
‘புலிக்குத்தி’ என்ற சிறுகதை நாட்டுப்புறக் கதைகளுக்குரிய தன்மைகளுடன் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் இடம்பெற்றுள்ள தேவையற்ற வருணனைகள் நாட்டார் கதைகளின் உருவத்தை அளித்துவிடுகின்றன. ‘சாதி வாக்கு’, ‘கம்யூனிஸ்ட்’ ஆகிய இரு கதைகளும் புதிய மோஸ்தரில் எழுதப்பட்ட அரசியல் கதைகள். தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் சாதி குறித்த பொதுப்புத்தி மனநிலையைச் ‘சாதி வாக்கு’ சிறுகதையினூடாகச் செறிவான புனைவாக்கியிருக்கிறார் ராம் தங்கம். உள்ளாட்சித் தேர்தலில் சாதிதான் அரசியல் செல்வாக்கைவிடப் பலம் காட்டுகின்றது. இருவேறு கட்சிகளில் இருந்தாலும் சாதியால் ஒன்றிணையும் வன்மத்தைத் தேர்தல் நேரங்களில் காணலாம். எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்துவதற்கு அப்பகுதியின் சாதிக் கணக்குப் பார்க்கும் நிலையை நாம் இன்னும் கடந்துவிடவில்லை. அந்த வகையில் இக்கதை தொகுப்பில் தனித்துத் தெரிகிறது. ராம் தங்கத்தின் கதைகளில் உணவுப் பொருட்களும் சமையல் குறிப்புகளும் அதிகளவில் இடையீடு செய்திருக்கின்றன. புனைவிற்கு இது சுமை. அடுத்து, கதைசொல்லி பேசுவது போன்றே கதை எழுதுவதையும் தவிர்த்தல் நலம். கதாபாத்திரங்களின் உரையாடல் புனைவில் மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளது; இதனால் கதாபாத்திரங்களின் மோதல் கதைகளில் வலிமையாக இடம்பெறவில்லை. உரையாடலில்தான் வட்டாரமொழி காத்திரமாக வெளிப்படும். வளமான நாஞ்சில் நாட்டு மொழியை ராம் தங்கம் பெற்றிருக்கிறார். அதனை அவர் புனைவுகளில் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
சுப்பிரமணி இரமேஷ், இலக்கிய விமர்சகர்,
தொடர்புக்கு: ramesh5480@gmail.com
புலிக்குத்தி
ராம் தங்கம்
வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை
விலை: ரூ. 150
தொடர்புக்கு: 94458 70995
தமிழை வலியுறுத்தும் நூல்
நம் நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விப் படிப்புகள் ஆங்கிலம் வழியாக மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, ஆங்கில மொழியில் ஒருவருக்கு இருக்கும் தேர்ச்சியே அவரது அறிவைத் தீர்மானிக்கும் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அறிவுக்கூர்மை இருந்தும் கிராமப்புறங்களில் படித்த பல மாணவர்களால் கல்லூரிகளில் ஜொலிக்க முடியாமல் போகிறது. இந்தக் குறையைக் களையும் வழிமுறைகளை இந்த நூலில் டாக்டர் சு.நரேந்திரன் தெளிவுடன் விளக்கியிருக்கிறார்.
முக்கியமாக கல்வியில் மட்டுமல்லாமல், தமிழை எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் சொல்கிறார். இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் தாய்மொழியில் உரையாடுவதையே பெருமையாகக் கருதுகின்றனர். நம் நாட்டில் ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பெருமையாகக் கருதும் போக்கு நிலவுகிறது. இந்த நிலையை மாற்றியமைக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல்.
- ஹுசைன்
தமிழ் பயிற்றுமொழி - கனவும் நனவும்
டாக்டர் சு.நரேந்திரன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
விலை: ரூ.340
தொடர்புக்கு: 044 – 2625 1968