

பெண்களின் வாழ்வியலைப் பேசும் 13 கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. கதாசிரியர் தீபா நாகராணி. இது மதுரைப் பெண்களின் கதைகள் என்று தலைப்பில் குறிப்பிட்டாலும் இது அனைத்துப் பெண்களுக்குமான கதைகள். அவர்களின் ஏக்கம், போராட்டம், ஆசாபாசங்கள், தவிப்புகள், ஏமாற்றங்களை நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் தருகின்றன இக்கதைகள். ஒரே வீட்டுக்குத் திருமணமாகி வந்திருக்கும் இரண்டு பெண்களின் நட்பை உணர்வுபூர்வமாகச் சொல்லும் ‘செம்பருத்தி’, சீதா என்ற பெண்மணியின் ஏக்கத்தைச் சொல்லும் ‘முடக்கம்’, மகளின் குற்ற உணர்வைப் பேசும் ‘ஈரம்’, தூக்கத்துக்குத் தவிக்கும் ஜவுளிக்கடையில் பணியாற்றும் தனம் பற்றிய ‘இடம் பொருள் ஏவல்’, தன் தவறால் உடைந்த காதலைச் சொல்லும் ‘பிராப்தம்’, தள்ளுபடியில் துணி எடுக்க ஆசைப்படும் கற்பகத்தைப் பேசும், ‘நாச்சியார்’, தினமும் சந்திக்கும் இளைஞனை விரும்பும் பெண்ணின் மனதைச் சொல்லும் ‘மரிக்கொழுந்து’ துணிச்சலான சாரதாவைக் காட்டும், ‘வாழ்க்கை யார் பக்கம்’ என்பது உட்பட அனைத்துக் கதைகளுமே புது அனுபவத்தைத் தருகின்றன. எளிமையான மொழியில் தடுமாறாத நடையில் அழகாகக் கதைச் சொல்லி இருக்கிறார் தீபா நாகராணி. இவை பெண்களுக்கான கதைகள் என்றாலும் ஆண்களுக்கானதும்தான் என்பதை வாசித்து முடிந்ததும் புரிந்துகொள்ள முடியும்.
- அழகு
மூன்று தலைமுறைகளின் கதை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி என்கிற தொன்மையான கடல்சார் பட்டினம் அருகில் அமைந்துள்ள ‘பண்ணவயல்’ கிராமம்தான் கதையின் மையச் சித்திரம். பண்ணவயல் சம்சாரிகளின் மாட்டுத் தொழுவங்களின் வாசம், வயல்வெளிப் பறவைகளின் கீச்சொலி, பசுந்தழைகளின் அடர்த்தியான மணம், நகரத்தார் பாணி வீடுகள் ஆகியவற்றுடன் கலந்த பொய்யாரின் வாழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளிக்காட்டையும், கருவேலங்காட்டையும் தங்கள் உழைப்பால் விளைநிலமாக மாற்றுகிறார்கள் பொய்யார் குடும்பத்தினரும் அவர்களது தாயாதி சொந்தங்களும். முதல் தலைமுறையைச் சேர்ந்த பொய்யார் காலத்து வாழ்வில் ஆரம்பித்து, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த துரைசாமி காலத்து வாழ்வு வரை நாவலின் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. காலத்தின் போக்கிற்கேற்ப நிகழும் மண்ணின் மாற்றமும், வாழ்வின் வீழ்ச்சியும், வரலாற்று நிகழ்வுகள் ஊடுபாய கதையாக வடிவமெடுத்து வியந்து வாசிக்க வைக்கிறது.
- அலெக்ஸ்