நூல் வெளி: ஒரு அகமுகப் பயணம்

நூல் வெளி: ஒரு அகமுகப் பயணம்
Updated on
2 min read

இருபதாம் நூற்றாண்டின் மெய்யியலாளர்களில் மிக முக்கியமானவரான லுட்விக் விற்கன்ஸ்ரைன் (Ludwig Wittgenstein 1889-1951) அர்த்தம், மொழி, மனம் என்பவற்றோடு அளவையியல், கணிதத்தின் அடிப்படைகள் போன்ற கருத்துகளை ஆழமாய் விசாரித்த ‘மெய்யியல் ஆய்வு’களில் (Philosophical Investigations) இப்படிக் கருத்துரைக்கிறார்: “இரண்டு மனங்களுக்குக் கிடைக்கும் தரவுகள் ஒத்தனவாய் இருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எந்த இரண்டு மனங்களிலும் ஏற்படும் சிவப்பு நிறம் பற்றிய புலனுணர்வு ஒன்றாகத்தான் இருக்கும் என்று எப்படி எங்களுக்குத் தெரியும்? எங்களுக்கு அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உனது ‘சிவப்பு நிறம்’ நான் ‘சிவப்பு’ என்பதனை ஒத்திருப்பதற்குப் பதிலாக, நான் ‘பல் வலி’ என அழைப்பதைப் போன்றிருக்கலாம். மரம் ஒன்றைப் பார்க்கையில், அது பச்சை நிறம் என நாம் ஒப்புக்கொள்கிறோம் என்பது, உன்னுடைய பச்சை நிறமும் என்னுடைய பச்சை நிறமும் ஒன்று என நிரூபிக்க இயலாது.”

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், கோட்பாட்டு விமர்சகர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் வெளிப்படும் எம்.டி.முத்துக்குமாரசாமி, ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்கிற அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பில், விற்கன்ஸ்ரைனின் கருத்தை எதிரொலிப்பதாகப் படுகிறது: ‘ஒரு கவிதையை எழுதி முடித்த உடனேயே நான் வேறொருவனாய் ஆகிவிடுகிறேன். என்னுடைய ‘நான்’ பிடிக்கு அகப்படாமல் தொடர்ந்து நழுவிக்கொண்டே இருக்கிறது. எனவே, என்னையும் என் வாழ்க்கையையும் தொடர்புறுத்தி இந்தக் கவிதைகளை வாசிப்பது உங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கூட்டாது. ஆகவே, நீங்கள் இந்தக் கவிதைகளை உங்கள் வாசிப்பு, உங்கள் வாழ்க்கைப் பின்புலம் ஆகியவற்றை வைத்து வாசித்துப் பொருள் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்’ என்கிறார் எம்டிஎம்.

எம்டிஎம் பதின்பருவத்திலிருந்தே கவிதை எழுதுபவராக இருந்தாலும், மனதைச் சுத்திகரிப்பதற்கான ஒரு முறைமையாகக் கவிதை எழுதுதலைக் கண்டுகொண்டு, கவிதையைத் தனக்குரிய வடிவமாக மீட்டெடுத்தது சமீபத்தில்தான் என்கிறார். மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை/செய்துகொண்டிருக்கிறேன்/கவிதை எழுதுகிறேன் பேர்வழி என/ஒரு படி உப்பை எடுத்துக் கொண்டு போய்/கடலில் கரைத்துக் கொண்டிருக்கிறேன்/கர்மவினை. ‘சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்பது தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க, எழுத்தை’ நாடுவதாக நகுலன் அறிவித்தார்; எனினும், ‘எழுதிப் பார்த்து ஆழ்மனதை அறிதல் என்பதில் ஒரு வகையான அறிவுத் தேற்றவியலின் அதீத கற்பிதம்’ என்று கருதும் எம்டிஎம், கவிதை சிந்தனைக்குமான ஒரு வடிவம் என்றும் நம்பத் தலைப்படுகிறார்: ‘ஏதோ ஒரு அகமுகப் பயணம்/எப்போதுமே தேவையாயிருக்கிறது’.

கவிதை எழுதத் தொடங்கும் காலகட்டத்துக்கும், கவிஞனாகத் தன்னை உணரும் காலகட்டத்துக்குமான இடைவெளியில் ‘கவிஞ’னின் சிந்தனைப் போக்கு, மொழி என்னவாக ஆகிவந்திருக்கிறது என்பது கவனிப்புக்குரியது. அந்தவகையில், பதின்வயதில் கவிதை எழுதத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து, கவிதையைத் தனக்குரிய வடிவமாக மீட்டெடுத்த சமீபத்திய காலம் வரையிலான இடைவெளியில் பரிணாமம் பெற்றிருக்கும் எம்டிஎம்மின் சிந்தனையும் மொழியும் ‘நொறுங்கிய உன் பிரக்ஞையில்’ கவிதையில் வெளிப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

“அகத்தையும் அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன?” என்று வினவும் எம்டிஎம், “பல ஒன்றாய் கூடிவரும் கூடுகையின் திவ்யத்தையும் அது கலைந்து அடுக்கப்படும்போது உண்டாகும் மறுவடிவத்தையும் நான் பாடுகிறேன்” என்று பதிலளிக்கிறார். கவிதை ரசனை என்பது கவிதையை வாசிப்பதில் உள்ளதா, அது உருவாக்கும் எண்ணங்களைப் பின்தொடர்வதில் உள்ளதா? ‘சிதறுண்ட மன நிகழ்வுகளால் ஆனதல்லவா கவிதை’ என்று கவிதையை நிகழ்த்திவிட்டுக் கவிஞன் அதிலிருந்து வெளியேறிவிடுகையில், கவிதைக்குள் நுழையும் வாசகன் சிதறுண்டவற்றைத் தம் அனுபவங்களினின்று ஒன்றிணைத்துப் பொருள் கொள்கிறான். எதில்/வேண்டுமென்றாலும்/ஒரு கவிதையை/வாசிக்கலாம்/என்ன, ஒளி எங்கேயிருந்து வருகிறதோ/அதற்கு நேர் எதிர்த் திசையில் பார்க்க வேண்டும்/ஒலியின் அலைகளுக்கிடையிலுள்ள/மௌனத்தைக் கேட்க வேண்டும்.

‘காலம் ஒரு பகற்கனவு’, ‘காலம் இனியொரு நிலமற்ற கடைத்தெரு’, ‘நினைவே காலம் அதுவே புதிரும்கூட’ என்று காலத்தைப் பொருள்கொள்ள யத்தனிக்கும் எம்டிஎம், ‘ஆகாயத்துக்கும் எல்லையற்ற வெளிக்கும்... ஒப்புக்கொடுத்துவிட்டு’ நினைவு, கடல், நகரம், தந்தை, இசை, பொருநை சார்ந்து பல படிமங்களைக் கவிதையாக்குகிறார். எம்டிஎம் கவிதைகளில் வெல்லும் படிமம் எது, கொல்லும் படிமம் எது என்பதை அறிவதே வாசகனுக்கு இத்தொகுப்பில் சவாலும் வாசிப்பின்பமும் ஆகிறது.

- சு.அருண் பிரசாத், தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

ஒரு படிமம் வெல்லும்

ஒரு படிமம் கொல்லும்

எம்.டி.முத்துக்குமாரசாமி

வெளியீடு: தமிழ்வெளி,

மலையம்பாக்கம், சென்னை - 122.

தொடர்புக்கு: 9094005600

விலை: ரூ.240

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in