Published : 12 Nov 2016 12:07 PM
Last Updated : 12 Nov 2016 12:07 PM

குழந்தை இலக்கியத்தின் மீது ஏன் இந்தப் பாராமுகம்?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான இதழ்கள் வெளியான தமிழ்ச் சூழலில், இன்றைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய இதழ்களே வெளிவருகின்றன. குழந்தைகளுக்கான இதழ்களின் நிலை மட்டுமல்ல, குழந்தைகளுக்கான படைப்பு வெளியும் சொல்லத்தக்க அளவில் இல்லை. குழந்தைகளுக்காக எழுதும் படைப்பாளர்கள் தமிழில் குறைந்துகொண்டே வருகிறார்கள். வை.கோவிந்தன், அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, கல்வி கோபாலகிருஷ்ணன் என்று நீண்டுவந்த மரபில் இன்றைக்குக் குழந்தை இலக்கியத்துக்குப் பங்களிக்கும் எழுத்தாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலர் குழந்தை களுக்கான படைப்புகளையும் எழுதியவர்கள். டால்ஸ்டாய் தொடங்கி ரவீந்திரநாத் தாகூர், சத்யஜித் ரே வரை குழந்தைகளுக்காகவும் எழுதியவர்கள் பட்டியல் நீளமானது. குழந்தைகளுக்காகவும் எழுதுவது என்பது ஒரு வகை சமூகக் கடமையும்கூட. தமிழில் இதை உணர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. எல்லாக் காலங்களிலும் சிலர் முயற்சித்துவந்திருக்கின்றனர். கிருஷ்ணன் நம்பி, அம்பை தொடங்கி யூமா வாசுகி, எஸ்.ராமகிருஷ்ணன் வரை பட்டியலிடலாம். ஜெயமோகன்கூட முயற்சித்தார். என்ன பிரச்சினை என்றால், இது மிகச் சிறுபான்மைக் கூட்டம்.

படைப்பாளிகளை மட்டும் குறை சொல்ல முடியாதுதான். குழந்தைகளுக்காக எழுதுபவர் என்றாலே அதைக் குறைத்து மதிப்பிடும் மனோபாவம்தானே ஒட்டுமொத்தச் சமூகத்திடமும் இருக்கிறது? குழந்தைகள் இலக்கியங்கள் இன்று பெரிய அளவில் விற்பதில்லை. குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று அதிகம் விற்பவை பொது அறிவு, தகவல் சார்ந்தவை. எதையுமே பொருளாதாரப் பயனீட்டு பலன் அடிப்படையில் அணுகும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தச் சூழல் குழந்தைகள் இலக்கியத்தை நோக்கி நகரும் படைப்பாளிகளையும் தொந்தரவுக்குள்ளாக்குவது இயல்புதான். எனினும், சூழலை மாற்ற வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டிய சூழலும் படைப்பாளிகள் மீதே விழுவது நம்முடைய மோசமான சமூக நிலையின் துயரம்.

தாய்மொழிக் கல்விக்குச் சமூகம் கொடுக்கும் இடம், புத்தகத்துக்குச் சமூகம் கொடுக்கும் இடம், பிள்ளைகளை சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாற்றுவதற்கேற்ற கல்வி முறை என்று ஒன்றுக் கொன்று பின்னிப்பிணைந்த செயல்முறைகளின் விளைவுகளில் ஒன்று இது. எனினும், இதையெல்லாம் யாராவது புரட்டிப்போட முடியும் என்றால், இது அத்தனை மீதும் விமர்சனத்தை முன்வைப்பவர்கள் மீதுதானே அந்தப் பொறுப்பும் விழும்?

இன்றைய காலச் சூழலுக்கேற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட எளிய வார்த்தைகளில், சுருக்கமான சுவாரசியமான வடிவில் புதிய தலை முறைக்கேற்ற புதிய கதைகளை எப்படி உருவாக்கப்போகிறோம்? கைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்று தேய்ந்துகொண் டிருக்கும் குழந்தைகளின் குழந்தைமையைப் புத்தகங்களின் மூலம் எப்படி மீட்டெடுக்கப்போகிறோம்? தமிழின் முக்கியமான படைப்பாளிகள் இதுகுறித்து யோசிக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x