கு. அழகிரிசாமி நூற்றாண்டு | ‘கவிஞர்’ கு.அழகிரிசாமி!

கு. அழகிரிசாமி நூற்றாண்டு | ‘கவிஞர்’ கு.அழகிரிசாமி!

Published on

புதுமைப்பித்தன் பரம்பரையில் பூத்த மலர், கு.அழகிரிசாமி. புதுமைப்பித்தனைப் போலவே சிறுகதையில் சாதனை படைத்தவர் அவர். எளிய நடை, சித்திரிப்பின் லாகவம், உள்ளோடும் துயர இழை, அமர்த்தலான நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம், உள்ளடக்கத்திற்கு ஏற்ற சொல்லாட்சி எனப் பல அழகுகள் கூடிச்சேர்ந்தது அவரது எழுத்துக் கலை. தமிழில் சிறுகதைக்காகச் சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்ற முதல் எழுத்தாளர் கு.அழகிரிசாமிதான் (1970). அதைக் காண வாய்ப்பைப் பெறாத துரதிர்ஷ்டசாலியும் அவரே.

கதையைத் தவிர கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நாடகம், நாவல், பதிப்பு எனப் பல துறைகளிலும் அவர் தன் ஆற்றலைக் குறைந்த ஆயுளுக்குள் பதிவுசெய்திருக்கிறார். கவிதையைக் கையில் எடுத்தாலும் புதுமைப்பித்தன் பாதி வழியில், அதை விட்டுவிட்டு வந்துவிட்டார். கு.அழகிரிசாமி இலக்கிய உலகில் நுழைந்தது கவிதையையும் மொழிபெயர்ப்பையும் கைபிடித்துக் கொண்டுதான். அழகிரிசாமி, கவிதையைச் சிறுகதையைப் போலப் போஷிக்கவில்லையே தவிர, அதைக் கைவிடவில்லை. அழகிரிசாமியின் அறியப்படாத கவிதை முகத்தின் ஒரு சாயலை இக்குறிப்பில் நாம் பார்க்கலாம்.

கவிஞன் பிறப்பு: கு.அழகிரிசாமியின் முதல் கவிதை ‘கலைமக’ளில் (1943) வெளிவந்தது. பிறந்த இடைசெவல் கிராமத்தில் எல்லோரும் அவரது ஆங்கிலப் புலமையையும் சித்திரச் சிறப்பையும் கண்டு மயங்கி நின்றபோது, அவரது கவிதை ஆற்றலைக் கண்டுகொண்டவர் அவர் நண்பர் க.வ.கந்தசாமி. அவருக்குள்ளிருந்த கவிஞனைக் கண்டுகொண்ட இன்னொருவர் ‘ரசிகமணி’ டி.கே.சி.1944இல் திருச்சியில் நிகழ்ந்த வானொலியின் முதல் கவியரங்கில் (13.4.1944) டி.கே.சி. (62 வயது) அழகிரிசாமியைத் (21 வயது) தன்னுடன் பாடவைத்துள்ளார்.

தான் பார்த்த அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னையில் ‘பிரசண்ட விகட’னில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் அழகிரிசாமி. அதுவே அவரது முதல் பத்திரிகைப் பணி. தொடர்ந்து ‘ஆனந்த போதினி’யிலும் வேலைபார்த்தார். இப்பத்திரிகைகளில் மிகுதியும் உரைநடையைக் கையாள வேண்டிய நிலையில் கவிதைப் பெண் ஓர் ஓரமாக நின்றுவிட்டாள் போலும். அழகிரிசாமியின் கவியாற்றலை மடைமாற்றி உரைநடைப் பக்கம் முழுவதும் திருப்பிவிட்டது பத்திரிகைப் பணியும் ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர் நாரண. துரைக்கண்ணனும் எனலாம். இருப்பினும் அழகிரிசாமி தன் கவிதைக் குழந்தையை ரகசியமாக வளர்த்துக்கொண்டே வந்தார்.

புனைபெயர்கள்: ஜி.செல்லையா, கு.அ., அ.ராதா, அ.சீதா, இடைசைப்புலவன் என்னும் செல்ல, சுருக்க, மகள், மனைவி புனைபெயர்களில் உரைநடைகளை எழுதிவந்த அழகிரிசாமி, கவிதை எழுத இரண்டு புனைபெயர்களையே பயன்படுத்தியிருக்கிறார். குவளை, தார்க்கோல் என்பன அவ்விரு புனைபெயர்கள். குவளை என்கிற பெயரையே தொடக்கத்திலிருந்து பெரும்பான்மையாகப் பயன்படுத்தியிருக்கிறார். ‘சக்தி’யில் வெளிவந்த சாரல் என்னும் ஒரு கவிதையின் சிறு துளி பின்வருவது. குயில் பாட்டின் தொனியை மனதுக்குக் கொண்டு தருகிறது இந்த நற்கவிதை: ‘ஊரெல்லாம் சோர்ந்து உறங்கிடினும், சந்திரனார்/பாரெல்லாம் காணப் பவனி வரும் காட்சியதை/சாரல் துளி மறைக்கும் சகியாக் கொடுமையினை-நேரம் பலவாக நெஞ்சுருகப் பார்த்திருப்பேன்’.

பின்னர் காந்தி மறைந்த 1948இல், அவர் பிறந்த நாளன்று சென்னை வானொலி ஏற்பாடுசெய்த முக்கியமான கவியரங்கில் அழகிரிசாமி கவிதை பாடினார். கவியரங்கிற்குக் கவிஞரே தலைமை ஏற்கும் வழக்கம் தொடங்காத அக்காலத்தில், அப்போதைய அமைச்சர் பக்தவத்சலம் தலைமையில் அக்கவியரங்கம் நடைபெற்றிருக்கிறது. பின்னரும் வானொலியில் 1959இல் நிகழ்ந்த பொங்கல் கவியரங்கமும் அமைச்சர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்றது. அதிலும் தங்கம்மாள் பாரதி, கண்ணதாசன் போன்றோரோடு ‘புதிய கதிர்’ என்ற தலைப்பில் அழகிரிசாமி கவிதை பாடினார்.

இரட்டையர் கவிதை: 1949 இல் கோயமுத்தூரில் ஜி.டி.நாயுடு மாளிகையில் ச.து.சு.யோகியார் தலைமையில் நடந்த பாரதி விழாவிலும் கவிதை பாடினார். இக்கவியரங்கில் கவிதை புதிய வடிவம் எடுத்தது. புதுமைப்பித்தன் பரம்பரைக் கொடியில் பூத்ததாகக் குறிப்பிட்ட இன்னொரு மலரான ரகுநாதனுடன் இரட்டையராகப் பாடிய கவிதை அது. பரஸ்பரம் இருவரும் ஒருவர் அடி எடுத்துக் கொடுக்க மற்றொருவர் முடித்துக்கொண்டு வருவார். முதல் பாட்டின் முதல் இரண்டு அடிகளை ரகுநாதன் பாடுவார், பின்னிரண்டு அடிகளையும் அடுத்த பாட்டின் முதல் இரண்டு அடிகளையும் அழகிரிசாமி பாடுவார். அதைத் தொடர்ந்து வரும் நான்கு வரிகளை ரகுநாதன் பாடுவார். இந்த முறையில் 4 வரிகள் கொண்ட 19 கண்ணிகளை இருவரும் அக்கவியரங்கில் இணைந்து பாடினர். ரகுநாதன் ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் புகழ்பெற்ற கவிஞராக மலர்ந்தவர் என்பது நாம் அறிந்ததே. அழகிரிசாமியின் கவிதையாற்றல் குடத்தில் இட்ட விளக்காக எவரும் அறியாமலிருந்தாலும், ஒளிர்ந்துகொண்டுதான் இருந்தது.

இரட்டையர் பாடிய கவிதையின் பத்து வரிகளை இங்கு பார்க்கலாம்: ‘...சொல்லுக்கு அழகேற்றும் அழகிரியான் அணி செய்யக் கேட்டிடுவீர்/பழகு தமிழ் எம்மிரட்டைப்பா./ ராவிலே கண் விழித்து ரயிலில்/ வரும்போது/ பாவிலேயே கண் வைத்துப் பாடினோம் - நாவிலே/ வந்து சரஸ்வதியார் வாழாக் கலியுகத்தில்/ சொந்தக் கவியாய் துணிந்து./ காட்பாடி ஜங்ஷனிலே காப்பியின்றி டீ குடித்து/ ராப்பாடியாய் நாங்கள் ராத்திரியில் - பாப்பாட/ எதுகையோடு போராடி எதிர்க்கட்சி தானாடி/ இதுவுரைத்தோம் கேட்பீர் இனி.’ தந்திருக்கும் பாடலில் முதல் நான்கடிகள் ரகுநாதனும் பின்னான்கு அடிகள் அழகிரிசாமியும் பாடியவை. தொடரும் இரண்டடிகள் ரகுநாதன் பாடியவை.

சாகித்யங்கள்: 1940கள் காலத்திய பெரும்பான்மை எழுத்தாளர்கள்போல அழகிரிசாமியும் இசையறிவு மிக்கவர். அவருடைய ஊர்க்காரரும் நண்பருமான கி.ராஜநாராயணனும் இசையார்வம் மிக்கவர். இசைக் கலைஞர்கள் காருகுறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சுவாமிகள் ஆகியோர் இவர்களின் இசை ஆதர்சங்கள். அழகிரிசாமி சாகித்யங்கள் எழுதும் ஆற்றலையும் உடன் வளர்த்துக்கொண்டே வந்திருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் அவரது நாட்குறிப்பிலும் கிடைக்கின்றன. ஆனால், எழுதிய சாகித்யங்களைத் தொகுத்துவைக்கவோ பத்திரப்படுத்தவோ இல்லை எனத் தெரிகிறது. திடீரென அழகிரிசாமி தன் 47 ஆவது வயதில் 1970இல் அகால மரணம் அடைந்துவிட, அவர் மனைவி இசைக் கலைஞர் சீதாலட்சுமி, அழகிரிசாமி எழுதிய சாகித்யங்களைத் தேடினார். அவரது பால்ய கால நண்பர் கி.ராவிடமும் அவர் கேட்டிருக்கக் கூடும்.

அதைக் குறித்து கி.ரா. எழுதிய பதில் கடிதத்திலிருந்து (4.4.1971) சில வரிகள்: ‘வீடெல்லாம் தேடிப் பார்த்ததில் அழகிரிசாமியின் சாகித்யங்கள் ஐந்து கிடைத்தன. ‘யார் எனக்குத் தூது சொல்லுவார்’ (சண்முகப்பிரியா), ‘போய் வருவேன் என் சுவாமி’ (நடபைரவி), ‘தூது சொல்ல யாரும் இல்லையே’ (சஹானா), ‘ராசாதி ராசர் மெச்சும்’ (ஆனந்த பைரவி), ‘வருவதற்கென்ன கோபமோ’ (ஹிந்தோளம்). இன்னும் தேடிப் பார்த்தால் மற்றவைகளும் கிடைக்கக்கூடும்’ என்று அந்தக் கடிதம் தொடர்ந்து நம்பிக்கையூட்டிச் செல்கிறது. அவரது நூற்றாண்டிலாவது கு.அழகிரிசாமியின் ஆற்றலின் பன்முகங்களும் விகசிக்கட்டும். அதற்கு ‘தேடிப் பார்த்தால் மற்றவைகளும் கிடைக்கக்கூடும்’ என்கிற கி.ரா.வின் வாக்கு கைவிளக்காகட்டும். - பழ.அதியமான், கு.அழகிரிசாமி படைப்புகளைத் தொகுத்தவர், ஆய்வறிஞர்; தொடர்புக்கு: athiy61@yahoo.co.in

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in