

# ‘ஆடு மேய்த்த கையோடு வந்து படிக்கவும் எழுதவும் செய்தவன்’ (கு.அழகிரிசாமியின் எழுத்துகள் - என்.ஆர்.தாசன்).
# கந்த புராணம், கருட புராணம், பத்ம புராணம், பாகவத புராணம் என்று பதினெட்டுப் புராணங்கள் எழுதியவர்கள் தூக்கத்துக்கு என்று தனியாக ஒரு புராணத்தை எழுதிவைக்கவில்லை. சிலர் எந்தப் புராணத்தைக் கேட்டாலுமே தூங்கி விழுவதைப் பார்த்துவிட்டுத் தூக்கத்துக்குத் தனிப் புராணம் தேவையில்லை என்று ஒரு வேளை அவர்கள் நினைத்திருக்கக்கூடும் (‘தூக்க புராணம்' கட்டுரையில்).
# எனக்குக் கல்யாணமாகாதிருந்த சமயத்தில் நடந்த பல ரசமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. பிரம்மச்சாரியின் வாழ்க்கையில் ரசமான நிகழ்ச்சி என்றால், அது ஒரு பெண்ணைப் பற்றிய நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று இதற்குள் நீங்கள் ஊகித்திருக்கலாம். ஆனால், உங்கள் ஊகத்தில் உண்மை பாதிதான் இருக்கிறது (‘இரண்டு பெண்கள்’ சிறுகதையில்).
# கற்பகத்துக்கு இரவும் பகலும் திண்ணையைப் பற்றிய கனவுதான். தன் வீட்டில் தெருவைப் பார்த்து ஒரு திண்ணை இருக்க வேண்டும். அப்பா எப்பொழுது கட்டிக் கொடுப்பார்? ...‘குழந்தே! உனக்கு என்ன தெரியும்? திண்ணை கட்டவும் வீடு கட்டவும் சக்தி இருந்தால் நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?’ என்று அப்பா அர்த்தமில்லாமல் ஏதேதோ சொல்லுகிறார். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை (‘காற்று' சிறுகதையில்).
# உண்மைத் தொண்டை மெருகேறுகிறது. நாலு நாளாய் மேல் ஷட்ஜமம் பிடிக்கும்போது பொய்த் தொண்டை கொஞ்சம் பேசுகிறது. கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு ராஜமோடியாய் பிளஷர் காரில் பெண் கிளம்பும்போது அவள் பழைய காதலன் வந்து பல்லிளித்த மாதிரி (கி.ரா.வுக்கான கடிதத்தில்).
# எந்த மொழியிலும் காலத்துக்குக் காலம் செய்யுள் நடை வேறுபடுவதுபோல் உரைநடையும் மாறிகொண்டே வரும். இந்த மாறுதலே ஒரு மொழியின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் சின்னம் (‘தமிழ் வட்டம்' முன்னுரையில்).