

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்
ரஷ்யப் புரட்சி பற்றி மிக விரிவாகப் பேசிய, அதைப் பற்றி முழுமையான சித்திரத்தைத் தருகிறது ஜான் ரீடு எழுதிப் புகழ்பெற்ற இந்த நூல். இந்த நூலும் நூலின் தலைப்பும் காலம்காலமாக உச்சரிக்கப்படுவதாகவும் உத்வேகம் ஊட்டக் கூடியதாகவும் இருந்துவருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர்-சோஷலிசவாதி ஜான் ரீடு, ரஷ்யாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து அந்நாட்டுக்குச் சென்று தங்கினார். அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தொடர்பும் வைத்திருந்தார். ரஷ்ய மக்களின் எழுச்சியை நேரில் கண்டு உணர்ந்த அவர், புரட்சி சார்ந்த நிகழ்வுகளை விவரித்து எழுதிய நூல்தான் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ (Ten Days That Shook the World).
நவம்பர் புரட்சியின் கடைசி 10 நாட்களில் நிகழ்ந்த முக்கிய திருப்பங்களை இந்த நூல் அரசியல் பார்வையுடன் பதிவு செய்கிறது. நூலை எழுதி முடித்த கொஞ்ச காலத்திலேயே ஜான் ரீடு இறந்துபோனதுதான் சோகம்.
இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் ரா. கிருஷ்ணையா. முன்னேற்றப் பதிப்பகத்தின் முதல் பதிப்பு 1980-ல் வெளியானது. பின்னர் என்.சி.பி.எச். நிறுவனத்தாலும், அலைகள் நிறுவனத்தாலும் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
அலைகள் வெளியீட்டகம் தொடர்புக்கு: 94444 31344
யூமா. வாசுகியால் மலையாளம் வழி மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூலின் குழந்தைகள் பதிப்பை புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டிருக்கிறது. தொடர்புக்கு: 044-2433 2424
வீரம் விளைந்தது
ஒரே நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட நாவல் ‘வீரம் விளைந்தது’. உலகெங்கும் உள்ள போராளிக் குழுக்களுக்குக் காலம்காலமாக உத்வேகம் அளித்துவரும் நாவல்களில் இதுவும் ஒன்று. ‘How the Steel was Tempered’ என்று ஆங்கிலத்தில் வெளியான இந்த நாவல், ஒரு சுயசரிதை நாவல். இதை எழுதியவர் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படை வீரர்களில் ஒருவராக ரஷ்யப் புரட்சியில் பங்கேற்றுப் போரிட்ட நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி. இந்த நாவலில் வரும் பாவெல் கர்ச்சாக்கின் என்ற கதாபாத்திரம், அவருடைய சொந்தக் கதையை மையமாகக் கொண்டது.
இந்த நாவல் மிகப் பெரிய தரிசனங்களைத் தரவில்லை என்று சிலர் வாதிடலாம். ஆனால், ஒரு நாட்டின் மிகப் பெரிய புரட்சியில் பங்கேற்ற சாதாரண வீரனின் பார்வையிலிருந்து, பொதுவுடைமை மக்களாட்சியில் ஒரு நாடு எப்படி மீண்டெழுந்தது என்பதை யதார்த்த பாணியில் உணர்ச்சிபூர்வமாக இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.
இந்த நாவலை மொழிபெயர்த்தவர் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் (எஸ். ஆர்.கே.). இந்த நாவல் என்.சி.பி.எச்., தமிழினி, கார்முகில் என பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது.
கார்முகில் பதிப்பகம் தொடர்புக்கு: 97907 06549
ருஷ்யப் புரட்சி, 1917
இன்றைக்கு கிராஃபிக் நாவல்கள் என காமிக்ஸ் வழியாகவே பெரும் கதைகளைக் கூறும் முறை பிரபலமாகியுள்ளது. 1985-லேயே ரஷ்யப் புரட்சியைப் பற்றி இந்தப் பாணியில் யோசித்து, 1988-ல் தமிழிலும் வெளியான நூல்தான் ருஷ்யப் புரட்சி 1917.
1917-ல் ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சியில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, கம்யூனிஸ்ட்களின் ஆட்சி மலர்ந்தது. முதல் உலகப் போர் மூண்டதற்கு அடிப்படைக் காரணம், 1914-ல் சரயீவாவில் ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் ஃபெர்டினாண்ட் சுட்டுக் கொல்லப்பட்டதுதான் என்று படித்துவருகிறோம். ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகள் உலகை மறுபங்கீடு செய்துகொள்ளவே இந்தப் போரைத் தொடங்கின என்கிறது இந்த நூல். இப்படி ருஷ்யப் புரட்சிக்கு அடிப்படையாக இருந்த பல்வேறு சம்பவங்கள், நிகழ்வுகளை அரசியல் பார்வையுடன் இந்த நூல் முன்வைக்கிறது. முழுக்க முழுக்கக் கோட்டுச் சித்திரங்களால் புரட்சிக் காட்சிகள் விவரிக்கப்பட்டிருக்கும் அதேநேரம், நூலின் முதல் பதிப்பு எழுத்துகள் முழுவதும் கையால் எழுதப்பட்டிருப்பது தனி அழகு.
மாஸ்கோவைச் சேர்ந்த முன்னேற்றப் பதிப்பகமே இந்நூலை வெளியிட்டது. என்.சி.பி.எச் மறுபதிப்பு செய்திருக்கிறது. இந்த நூலை மொழிபெயர்த்தவர் யார் தெரியுமா? கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஈடுபட்டிருந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். ஓவியங்களை வரைந்தவர் ரஷ்ய ஓவியர் அனதோலி வசீலியெவ்.
என்.சி.பி.எச். தொடர்புக்கு: 044 - 2624 1288
நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி
ஜான் ரீடைப் போலவே ரஷ்யப் புரட்சியைப் பற்றி மிக விரிவாக எழுதிய மற்றொரு எழுத்தாளரும் அமெரிக்காவைச் சேர்ந்தவரே. அவர் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம்ஸ். ஜான் ரீடின் வழிகாட்டலில் வந்தவர். இருவருமே ரஷ்யப் புரட்சியை நேரில் கண்டவர்கள்.
ரஷ்யா பற்றியும், அந்நாட்டில் புரட்சியை வழிநடத்திய லெனின் பற்றியும் நிலவிய பல்வேறு தவறான நம்பிக்கைகள், சித்திரங்களை மாற்றியதில் ரைஸ் வில்லியம்ஸின் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் 1922-லிருந்து 1959 வரை ரஷ்யாவுக்கு அடிக்கடி சென்று திரும்பியுள்ளார் ரைஸ் வில்லியம்ஸ். இந்த அனுபவங்கள், அங்கு அவர் மேற்கொண்ட சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு ரஷ்யா, அந்நாட்டு ஆட்சியைப் பற்றி பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில் முதன்மையானது ‘Through the Russian Revolution’. இதுவே ‘நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி’ என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. தமிழில் மொழிபெயர்த்தவர் பூ. சோமசுந்தரம். இந்த நூலின் புதிய பதிப்பை அலைகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அலைகள் தொடர்புக்கு: 94444 31344
இந்நூலில் உள்ள லெனினைப் பற்றிய பகுதியை மட்டும் ‘லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து’ என பாரதி புத்தகாலயம் சுருக்கமான நூலாக வெளியிட்டிருக்கிறது.
இன்னும் சில...
லெனினும் ரஷ்யப் புரட்சியும், நா. தர்மராஜன், அலைகள் வெளியீட்டகம்.
ரஷ்யப் புரட்சியை லெனின் வழிநடத்திய விதம் குறித்து பிரிட்டனைச் சேர்ந்த மார்க்சிய வரலாற்று அறிஞர் ‘Lenin and the Russian Revolution’ என்ற நூலை எழுதினார். பேராசிரியர் நா. தர்மராஜன் மொழிபெயர்ப்பில் அந்த நூல் தமிழில் வெளியாகியுள்ளது.
ரஷ்யப் புரட்சி, வி.பி. சிந்தன், பாரதி புத்தகாலயம்.
ரஷ்யப் புரட்சி பற்றி இந்தியப் பார்வையில் அறிமுகப்படுத்தும் குறுநூலை கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி. சிந்தன் எழுதியிருக்கிறார்.