Last Updated : 20 Nov, 2016 12:31 PM

 

Published : 20 Nov 2016 12:31 PM
Last Updated : 20 Nov 2016 12:31 PM

நவகவிதை: லட்சியங்கள் அற்ற அரசியலைப் பேசும் கவிதைகள்

நவ கவிதை க.நா.சுப்பிரமணியனுக்குப் பிறகான தமிழ்க் கவிதையில் ஞானக்கூத்தனின் வரவு விஷேசமானது. புதுக்கவிதைகளில் தீர்க்கமான அரசியலை, அங்கதத் தெறிப்புகளைத் தொடங்கிவைத்தவர் அவரே. அல்லது இவ்வளவு பெரும்பரப்பில் அதைச் செய்து காட்டியவர் அவர். ஞானக்கூத்தனுக்குப் பிறகு 70களிலும் அந்த முயற்சி நடந்தது. ஆனால் அவரது தொடர்ச்சி என அவற்றைச் சொல்ல முடியாது.

90களில் எழுதத் தொடங்கிய பெருந்தேவியின் கவிதைகளுக்கு அந்தத் திராணி இருக்கிறது. தன்மைப் பொருள் கவிதைகளிலும் (தன் கூற்றாகப் பேசும் கவிதைகள்) இந்த எள்ளலைப் பெருந்தேவியின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. 90-களில் பெருந்தேவியின் முதல் கவிதை வெளிவருகிறது. சமீபத்தில் அவரது நான்காவது தொகுப்பு வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட இருபந்தைந்து ஆண்டுகள் அவரது கவிதை பயணித்திருக்கிறது. நம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய செல்போன் போன்ற தகவல் புரட்சி 90களில்தான் அறிமுகமாகிறது. பெண்கள் தங்கள் உடலைக் கவிதைகளில் அறிவிக்கிறார்கள். ஒரு புதிய தலைமுறை வருகிறது. இதற்கிடையில் கவிதையிலும், வெளியிலும் நிகழ்ந்த மாற்றங்களை பெருந்தேவியின் கவிதை உள்வாங்கியிருக்கிறது. விளக்கு அணைக்கப்பட்ட அறையின் கணினி ஒளியை, செல்போன் கட்டணம் மலிவான பிறகு அதிகரித்த உரையாடல்களின் அலுப்பை, மின்னஞ்சல் அரட்டையை, ஃபேஸ்புக் கருத்துத் தெறிப்புகளை எல்லாம் இவரது கவிதைகளில் உணர முடிகிறது.

சிலப்பதிகார நாயகி மதுரையை எரித்ததுபோல் பெருந்தேவியின் கவிதைகள் பேருருவாகச் சில இடங்களில் எழுகின்றன. சில இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பின் நாய்க்குட்டியாகவும் தன்மைப் பொருள் பேசுகின்றன. சில கவிதைகள் மரபின் தன்மையுடன் இருக்கின்றன. க.நா.சு., மரபுத் தன்மைகளைப் புதுக்கவிதையின் அம்சங்களாகப் பார்க்கவில்லை. ஆனால் பெருந்தேவி இதைத் திரும்பத் திரும்பப் பிரயோகித்துப் பார்த்திருக்கிறார்.

70களின் கவிதைகள், தொழில்நுட்பங்களுக்காக மெனக்கிட்டன. ஆனால், கட்டற்ற சுதந்திரத்தை அவை கைவிட்டுவிட்டனவோ என்று தோன்றுகிறது. பெருந்தேவியின் கவிதைகளில் மாபெரும் சுதந்திரத்தை உணர முடிகிறது. உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அதை வெளிப்படுத்த அவர் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறார். வடிவங்களால் ஆனதல்ல கவிதை என்பதன் சாட்சியங்களாகக் கவிதைகளை உருவாக்கிக் காட்டுகிறார். கட்டற்ற சுதந்திரம் பெற்ற அவரது கவிதைகள் இயல்புத் தன்மையுடன் இருக்கின்றன; இயல்பாகச் சிரிக்கின்றன; இயல்பாகப் பேசுகின்றன; இயல்பாகக் கிண்டலடிக்கின்றன; இயல்பாக விசனப்படுகின்றன. அரிதாரப் பூச்சுகளை அவரது கவிதைகளில் எங்கும் காண முடியவில்லை. அவற்றுக்கு கேமரா கூச்சமும் இல்லை.

இதன் அர்த்தம் பெருந்தேவியின் கவிதைகளுக்கு வடிவப் பிரக்ஞை இல்லை என்பதல்ல. தொழில் நுட்பத்தின் தேர்ச்சி அவரிடம் உண்டு. முன்னோடிக் கவிஞர்களின் வடிவத்திலிருந்து திமிறி எழ வேண்டும், தனக்கான புது மொழியைக் கண்டடைய வேண்டும் என்ற ஆவேசத்தை, அவரது ‘தீயுரைத் தூக்கம்’ தொகுப்பில் வலுவாகக் காண முடியும்.

அவரது சில கவிதைகளில் நவீன சிறுகதைத் தன் மையை உணர முடியும். நீதி, சுதந்திரம் போன்ற பல்வேறு கற்பிதங்களுக்கு இடையில் சிக்கலாகியிருக்கிற ஆண், பெண் உறவு அவர் கவிதைகளின் முக்கியமான பாடுபொருள்.

இவை அல்லாமலும் பல வடிவங்களைப் பெருந்தேவி முயன்று பார்க்கிறார். ‘முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக் கொடுங்கள்’ என்ற கவிதையை இரு பத்திகளாக சிருஷ்டிக்கிறார். பொதுவாக அவரது கவிதைகளில் அடைப்புக் குறியில் சொற்களைப் பார்க்க முடிகிறது. இது கவிதை வடிவாக்கத்தின் ஒரு உத்திதான். இந்த அடைப்புக் குறியின் மூலம் பொதுப் புரிதலின் மற்றொரு பக்கத்தைக் காட்ட நினைக்கிறார், நீதிக்கான குறியீடாக உள்ள அசோகச் சக்கரத்தின் அந்தப் பக்கத்தில் மறைந்திருக்கும் சிங்க முகம்போல.

பூமி (நிலம்) என்பது காண்பதன் மூலமாக, தொடு வதன் மூலமாக உணரக்கூடிய ஸ்தூலமான வடிவம். ஆனால், உலகம் என்பது என்ன? நீதிகள், அநீதிகள், உண்மை, பொய் என்பன போன்ற கற்பிதங்களால் உருவாக்கப்பட்டது. இதைப் பெருந்தேவியின் கவிதைக் கிண்டல்கள் மறைமுகமாகச் சொல்கின்றன.

இந்தக் கற்பித அமைப்புக்குள் மீண்டும் ஓர் உலகம் உருவாகியிருக்கிறது. அதையும் பெருந்தேவியின் கவிதைகள் கவனித்துப் பதிவுசெய்திருக்கின்றன; அவரது சமீபத்திய கவிதைகளின் மைய அச்சாக அந்த உலகம் குறித்த அபிப்ராயங்கள் ஆகியிருக்கின்றன. நவீன சமூக வலைத்தள உலகம்தான் அது.

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஃபேஸ் புக்கில் அறிவித்துவிட்டு இறந்துபோன இளைஞன் குறித்த செய்தியை எல்லோரும் கவனித்திருப்போம். அந்த இளைஞனைப் போன்ற ஒருவன் பெருந்தேவியின் கவிதையில் வருகிறான். கணினித் திரையின் முன் தற்கொலை செய்துகொள்கிறான். இது பதிவாக அல்ல. பெரும் விவாதமாகக் கவிதையில் நடக்கிறது. இந்தத் தற்கொலை, கபாலி படம்போல் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது. இந்தத் தற்கொலை சரியா, தவறா? அதில் உள்ள நுண் அரசியல் என்ன? அதனால் தேசியவாதம் என்னாகும்? என்பன போன்று கவிதையில் தர்க்கம் நீள்கிறது.

புதுக் கவிதை குறித்த விமர்சனங்களில் முக்கியமான தாகச் சொல்லப்படுவது அவற்றுக்கு உறுதியான லட்சி யங்கள் இல்லை என்பது. பாரதிக்கு லட்சியம் இருந்தது. பாரதிதாசனுக்கும் லட்சியம் இருந்திருக்கிறது. 70களில் எழுதிவந்த சிலருக்கும் லட்சியங்கள் இருந்திருக்கலாம். சுதந்திரப் போராட்டம், திராவிட அரசியல், மார்க்சிய லெனிய இயக்கங்கள் இவை எல்லாம் இந்தக் காலகட்டங்களில் வெளியே நடக்கின்றன. இந்தச் சமூக நிகழ்வுகளை, லட்சியங்களைக் கவிதைகளும் எதிரொலித்தன. 90-ல் தாராளமயம் வந்துவிடுகிறது. இப்போது பெருந்தேவி வருகிறார். இரு சக்கரத்தின் மூன்றாவது சக்கரமாகி இரவுதோறும் ஓடும் அலுவலனின் “இறுகின கால்களுக்கு இடையில் நசுங்கிச் சுருங்குகிறது கிளிக் குஞ்சு” என்கிறார் அவர்.

கவிதை எழுதுவதைக் குறித்த கவிதை ஒன்றில், கவிதைகளைக்கூடப் பெரும் பொறுப்பில் ஆழ்த்தாதே என்கிறார். அரசியல் சரிகளுக்காகக் கவிதை எழுதாதே என்கிறார். இந்த விதத்தில் அரசியலற்ற, லட்சியங்களற்ற இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அரசியலைச் சொல்கின்றன இவரது கவிதைகள்.

பெண் கவிஞர்கள் எனச் சொல்லப்படும் வரிசையில் பெருந்தேவியை வைத்துப் பார்க்க முடியாது. ‘உடல் உறவுக்கு வங்கிக் கணக்குகளே’ ஆதாரம் ஆகிவிட்ட சூழலில் பெருந்தேவியின் கவிதைகள் ‘சிறு முத்தங்க’ளைக் கேட்கின்றன. பெண்கள் பல நிலைகளில் வருகிறார்கள். சேலை அணிந்து பார்க்கும் பெண், முலையின் நுனி நறுக்கப்பட்ட பெண், மனைவிமார் எல்லோரும் வருகிறார்கள். உறங்கும்போது குறுஞ்செய்திகள்கூட ஆடைகள் களைவதுபோல நழுவுகின்றன. பெண் தன்னிலையாக இருந்து ஆண்களைப் பார்க்கும் கவிதைகளும் இருக்கின்றன. ஆனால், இந்தக் கவிதைகள் ஆண்களைவிடப் பெண்களையே அதிகமாகக் கிண்டலுக்கு உள்ளாக்குகின்றன.

மற்ற பெண் கவிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பெருந்தேவி கவிதையை சிருஷ்டிக்கும் விதம்தான். அதில் கூக்குரல் இல்லை. முலைகள், யோனி, உடலுறவுக் காட்சிகள் எல்லாமும் பெருந்தேவியின் கவிதைகளிலும் உண்டு. ஆனால் அவை அதிர்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை அல்ல. கவிதையின் தேவை பொருட்டே வெளிப்படுகின்றன. பெருந்தேவிக்குக் கவிதையே பிரதானம்.

மொத்தமாகப் பார்க்கும்போது பெண் மையக் கருத்து என்னும் ஒற்றைத் தளத்தில் நிறுத்திவிடாமல் இரண்டாயிரம் ஆண்டுக் கவிதைப் பாரம்பரியத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய ஒரு கவி ஆளுமை எனப் பெருந்தேவியைச் சொல்லலாம்.



தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில்

மயக்கம் தராத மாலை

இன்றும் வந்தது.

விடியலின் கிரணத்தை

சன்ரைஸ் காப்பி விளம்பரத்தில்

அருமையாய் எடுத்திருந்தான்.

இருளின் மின்மினி

எதுவும் சொல்லாமல்

நேற்று பூச்சி கடித்தது.

மடிக்கப்பட்ட

வாசனைமிக்க விரிப்பு

மெத்துமெத்தென்று

தொடைமேல்.

ஸ்வீட்டி

என்னில்

யாரைக் காண்கிறாள்?

நான் காண்கிறேன்

ஸ்வீட்டியின் இமைகளுக்குள்

எல்லோரையும்.

மென்பழமாய் எரிகிற

விடிவிளக்கு

எண்ணூற்றிச் சொச்சத்தை

தின்றுவிட்டது.

மெகாசீரியல் காட்சியில்

வருத்தம்தோய்ந்த

ஒரு கணவன்

உருண்டு படுக்கக்

கற்றுத்தந்தான்

இப்படி… இப்படி…

-பெருந்தேவி

அமெரிக்காவில் சியானா கல்லூரியில் பெருந்தேவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சாதனா வெளியீடாக ‘தீயுறைத் தூக்கம்’; காலச்சுவடு வெளியீடாக ‘இக்கடல் இச்சுவை’, ‘உலோக ருசி’; விருட்சம் வெளியீடாக ‘அழுக்கு சாக்ஸ்’ ஆகிய நான்கு தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

மண்குதிரை தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x