Published : 26 Nov 2016 09:40 AM
Last Updated : 26 Nov 2016 09:40 AM

முப்பெரும் ஜாம்பவான்கள்

தமிழ் சினிமாவின் தொடக்க கால ஜாம்பவான்களில் மிகவும் முக்கியமானவர்கள் பி.யூ.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.எஸ்.பாலையா ஆகியோர். இந்த மூவரின் வாழ்க்கை, திரையுலக வெற்றி தோல்விகள் என்று பல்வேறு தகவல்களின் தொகுப்பாக வெளியாகியிருக்கும் நூல் இது. நூலிலிருந்து ஒரு பகுதி:

பாகவதர் திரைப்படங்களில் பாடிய பாடலை முணுமுணுக்காத மனிதர் இல்லை. அவரது பேரழகு, பெண் ரசிகைகளைக் கவர்ந்திழுத்தது. பண்டிதர் முதல் பாமரர் வரை நாட்டின் நகரம், கிராமம், சாலைகள், சந்து பொந்துகளில் எல்லாம் பாகவதர் பற்றிய பேச்சாகவே இருந்தது.

அவர் பாட்டை கிராமபோன் இசைத்தட்டில் ஒலிபரப்பினால், அவ்விடத்தில் நூற்றுக் கணக்கானோர் கூடிவிடுவார்கள். அவர் பாடல் ஒலிக்காத விழாக்கள் இல்லை என்றாயிற்று. கடல் கடந்து தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் கூட பாகவதரின் இசைத்தட்டுகள் அமோக விற்பனையாயிற்று.

இளைஞர்கள் பாகவதர் போலவே கிராப் வைத்துக்கொண்டனர். அதற்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயராயிற்று. பாகவதரின் முக வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவர் எங்கு சென்றால்லும் அலை கடலென முட்டி மோதி அவரைக் காணத் துடித்தனர். பாகவதர் ஒரு ஊருக்கு வருகிறார் என்றால், அவர் முக தரிசனம் காண, வீதியெங்கும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். போலீஸ் வந்துதான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நேரிடும். அதனால், அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி, அவர்கள் பாகவதரைப் பார்த்துவிட்டுத்தான் திரும்புவார்கள்… அதுநாள் வரை நாடகக் கலைஞர்களைக் கூத்தாடிகள் என்று வர்ணித்த காலம் நடையைக் கட்டியது. நடிகர்களைக் கலைஞர்கள் என அழைக்கும் காலம் பிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x