

கவிஞர் சூ.சிவராமன் ‘சற்றே பெரிய நிலக்கரித் துண்டு’ தொகுப்பின் வழி தன் கவியுலகைத் திடமாக வெளிப்படுத்திக் கொண்டவர். நிலமும் அரசியலும் அதன் பாடுபொருளாக இருந்தன. ‘உப்பை இசைக்கும் ஆமைகள்’ தொகுப்பிலும் அதன் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. கடல் சார்ந்த பரதவ வாழ்வைத் தன் கவிதைக் களமாக வரித்துக்கொண்டுள்ளார். அதற்குள் முங்கி முத்தெடுத்துள்ளார். இந்தத் தொகுப்பில் கடலும் கடல் சார்ந்த வாழ்வு, உப்பும் கவுச்சி நாற்றமுமாகப் பதிவாகியுள்ளது. அண்டசராசரங்களையும் சிவராமன் விண்மீன்கள் தட்டுப்படும் கடற்கரையோரத் தன் சிறு கீற்றுக் குடிசைக்குள் இழுத்துவந்திருக்கிறார். பெரிய அலைகளைப் போல் இரண்டாயிரம் வருடத் தமிழ்ப் பண்பாட்டு வரலாறு கவிதைகளுக்குள் உருண்டு புரள்கிறது. மாபெரும் உருவாக விரிந்து கிடக்கும் கடலை ஆவிசேர அணைக்க சிவராமனின் கவிதைகள் முயன்று திணருகின்றன. கடலைக் கடல் என அழைத்து அழைத்துத் தீராமல் பெளவம், பரவை, புணரி எனத் தமிழால் அணைத்துத் திளைப்பதிலிருந்து இந்தக் காதலைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சங்கக் கவிதைகளின் காட்சிகளைப் போல் பிரிவாற்றாமையைக் கவித்துவத்துடன் சிவராமன் சித்தரித்துள்ளார். கடலைக் காதல் உடலாக, காதல் உறவாக உருவகப்படுத்துகிறார். கடல் காட்சிகள் விவரிக்கும் கவிதைகளையும் கீற்றுக் குடிசைக் காட்சிகளாகக் கற்பனை கொள்ளக்கூடிய மயக்கத்தையும் இந்தச் சொற்சுவை மிக்க வரிகள் உருவாக்குகின்றன. காதலி அனுப்பும் புன்னைக் காய்களை நடுக் கடலில் இருக்கும் ஒரு தனிமை, நடுக் கடலில் காதலன் எண்ணும் நட்சத்திரங்களைக் கரையில் தேடும் காதலி எனப் பிரிவு வேதனைப் பாடலாக வெளிப்பட்டுள்ளன. கடல் திரை கொண்டுபோன காதலன் குறித்த கவிச் சித்திரம் விசேஷமானது. ‘ஆழிச் சூறாவளியில் கொளுத்தும் சுடர்’ என்ற கவிதைத் தொடர் உருவாக்கும் காட்சி, மனத்தைப் பாரமாக்குகிறது. ‘நான் கரை திரும்புவேன்/தரை அணையும் திருக்கையாக’ என்கிறது ஒரு கவிதைக் காட்சி.
பிரபஞ்சம் தோன்றிய கணத்தைப் போன்ற ‘அடிமுடி அறியா’க் கடல் தனிமையின் திகைப்பையும் பரவசத்தையும் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. வரலாற்று நிகழ்வுகளை, கதாபாத்திரங்களை இன்றைய காலகட்டத்துடன் ஒரு கவிதையில் மோதச் செய்திருக்கிறார். அதிபக்தரும் நாகர்களும் இந்தக் கவிதைக்குள் வருகிறார்கள். சில கவிதைகளில் இந்த முரண் ஒரு அபத்த நகைச்சுவையாக வெளிப்பட்டுள்ளது. நிலமும் பண்பாடும் கை நழுவும்போது வரும் பதற்றத்தை இந்தத் தொகுப்பிலும் பார்க்க முடிகிறது. பெளத்தத்தையும் சமணத்தையும்கூட சிவராமன் அந்த இடத்தில் வைத்திருக்கிறார்.
பாடல்களைப் போல் கவிச் சொற்களைத் துண்டுதுண்டாகச் செருகிவைத்திருக்கிறார் சிவராமன். அதனால் ஒவ்வொரு வரிகளும் தனித்து மின்னும் பண்பைக் கொண்டுள்ளன.தமிழ்ச் செவ்வியல் கவிதையின்பால் அவருக்கு உள்ள ஈர்ப்பும் இதில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. சங்கக் கவிதைகளைப் போல் தன் கவிதைகளையும் சிவராமன் அலங்கரித்துள்ளார். தற்காலத் தமிழ்க் கவிதை வரலாறு ஆய்வுசெய்யப்பட வேண்டிய விஷயம் இது. சிவராமன் இதில் தேர்ந்துள்ள பாடுபொருளும் கவிமொழியும் கவனம்கொள்ளக்கூடியது. இந்த அம்சங்களில் சூ.சிவராமன் நம்பிக்கையூட்டும் கவிஞர் எனத் தயக்கமின்றி முன்மொழியலாம்.
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
உப்பை இசைக்கும் ஆமைகள்
சூ.சிவராமன்
வெளியீடு:
கொம்பு பதிப்பகம்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9952326742