பிறமொழி நூலகம் - திமுக: ஒரு கோட்பாட்டு ஆய்வு!

பிறமொழி நூலகம் - திமுக: ஒரு கோட்பாட்டு ஆய்வு!
Updated on
2 min read

தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பதினேழு செப்டம்பர், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஒன்பதில் சென்னை ஜார்ஜ் டவுன் பவளக்காரத் தெருவில் எண் 7 இலக்கமிட்ட வீட்டில் கூடியது திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழு. அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத் உள்ளிட்டோரைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புக் குழு, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ (திமுக) என்ற அமைப்பைத் தொடங்குவதாக மறுநாள் (செப்டம்பர் 18) தெரிவித்தது. அன்று மாலை, ராயபுரம் ராபின்சன் பூங்காவில் ‘திராவிடத்தின் எதிர்கால வேலைத் திட்டம் பற்றி’ நடந்த பொதுக்கூட்டத்தில், திமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது” என்று கொட்டும் மழையில் அறிவித்தார். அன்று தொடங்கி 18 ஆண்டுகளில் ‘மதராஸ் ஸ்டேட்’டின் ஆட்சியைப் பிடித்தது திமுக; அண்ணா முதல்வரானார்.

நவீனத் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் 1949 தொடங்கி 1967 வரையிலான ஆண்டுகளில் திமுகவின் அரசியலைக் கோட்பாட்டு நோக்கில் ஆராய்ந்திருக்கிறது ‘Rule of the Commoner: DMK and Formations of the Political in Tamil Nadu, 1949–1967'. திமுக தொடங்கி எழுச்சிபெற்ற 1960, 70-களில் பிறந்து வளர்ந்தவர்களான பேராசிரியர்கள் ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், பத்திரிகையாளர் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கின்றனர்.1960-களில் திமுகவின் அரசியலைக் கோட்பாட்டாக்கம் செய்த வெளிநாட்டினர், விரிவான கள ஆய்வுகள் ஏதுமின்றி, ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து மட்டுமே குறிப்புகளைக் கொண்டு ‘ஆய்வு’களை மேற்கொண்டிருக்கிறார்கள். இயக்கத்தின் பத்திரிகைகள், இயக்கத் தலைவர்களின் எழுத்துகள் எதையும் அவர்கள் படித்திருக்கவில்லை; தமிழ்ப் புத்தகம், கட்டுரை எதையும் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கவில்லை. இதனால், ஆய்வுகளில் நிகழ்ந்த போதாமை, திமுகவினது மட்டுமல்லாமல் கடந்த அரை நூற்றாண்டுத் தமிழக வரலாறு சார்ந்த கல்விப்புல, கோட்பாட்டாக்க ஆய்வுகளில் மிகப்பெரிய இடைவெளியாக நிலவிவந்தது. அதைக் களையும் விதமாகத் தமிழ்நாட்டில் பிறந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் திராவிட இயக்கம் குறித்த ஆய்வுகள் சமீப காலத்தில் ஆங்கிலத்தில் வரத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில், நேரடி அனுபவங்களிலிருந்து விளைந்த பரந்துபட்ட புரிதலும், இயக்கத்தின் ஆதார எழுத்துகளின் வாசிப்பும், அன்டோனியோ கிராம்ஸி, எர்னஸ்டோ லக்லௌ, சாந்தால் மௌஃப், பார்த்தா சாட்டர்ஜி ஆகியோரின் கருத்தாக்கங்களின் பின்னணியிலும் இருந்து திமுகவின் ஆரம்பகால வரலாற்றை ஆய்வுசெய்திருக்கிறது Rule of the Commoner நூல். திமுக தொடங்கப்பட்டதற்கான வரலாற்றுக் காரணங்கள், அது சாத்தியப்படுத்திய மக்கள்நல அரசியல், மக்களை அரசியல்மயப்படுத்துவதற்கான அணிதிரட்டல் ஆகியவற்றை முதன்மைக் கருத்துருக்களாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த ஆய்வு, திராவிட இயக்கம், திமுக மீதான குறைபட்ட புரிதல்கள், எதிர்மறை மதிப்பீடுகளுக்குக் கல்விப்புலப் பின்னணியில் பதிலளிப்பதாக நூலாசிரியர்கள் கூறுகின்றனர்.

தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Rule of the Commoner: DMK and Formations of the Political in Tamil Nadu, 1949–1967
Rajan Kurai Krishnan, Ravindran Sriramachandran, VMS Subagunarajan
வெளியீடு: Cambridge University Press
பக்கங்கள்: 299
விலை: ரூ.895

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in