

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ‘நக்கீரன்’ இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்னும் தலைப்புக் கட்டுரை, டெல்லியில் நடைபெற்ற 73ஆம் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டுச் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் சிலைகள் அடங்கிய வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, கோவையில் காந்தி நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காந்தியைக் கொன்ற கோட்ஸேவின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று காவல் துறை அதிகாரிகள் சிலர் தடைவிதித்தது உள்ளிட்ட சமகால நிகழ்வுகளுக்கும் அரசியலில் இந்துத்துவ சக்திகள் பெற்றுவரும் ஆதிக்கத்துக்கும் உள்ள தொடர்பைத் தர்க்கபூர்வமாக விளக்குகிறது. சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களிலும் பிற நிகழ்வுகளிலும் இந்துத்துவ
அரசியல் சக்திகளின் பங்கு இருப்பதை நூலாசிரியர் விளக்கியுள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இந்து-முஸ்லிம் வன்முறையைத் தடுப்பதற்காக நவகாளியில் இருந்த காந்தியை மேற்கு வங்க கம்யூனிஸ்ட் இளம் தலைவர்கள் ஜோதிபாசு, பூபேஷ் குப்தா ஆகியோர் சந்தித்தது, தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியின் திருமண வரவேற்புக்குப் பெரியார் தலைமை வகித்தது உள்ளிட்ட பல அரிய வரலாற்று நிகழ்வுகள் நூலில் பதிவாகியுள்ளன. மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், கூட்டாட்சி உள்பட அரசமைப்பு முன்மொழிந்த விழுமியங்களை உயர்த்திப்பிடிப்போர், அவற்றை அழிக்க நினைக்கும் மதவாத சக்திகளை ஏன் எதிர்க்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கையேடாக இந்த நூல் அமைந்துள்ளது. - ச.கோபாலகிருஷ்ணன்
மகாத்மா
மண்ணில் மதவெறி
ஜி.ராமகிருஷ்ணன்
வெளியீடு: நக்கீரன், சென்னை-14
விலை: ரூ.125
தொடர்புக்கு:
044 4399 3000
கலைப் பொக்கிஷம்
மனித குலத்தின் வரலாறும் பாரம்பரியமும் காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்பதற்கு ஓவியமே அடிப்படைக் காரணம். ஆம், ஓவியமே மனிதர்களின் முதல் எழுத்து மொழி வடிவம். இருப்பினும், எழுத்து மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இன்றைய நவீன கல்வி முறை ஓவியத்துக்குக் கொடுப்பதில்லை. 1,000 வார்த்தைகளில் சொல்லக்கூடிய கருத்துகளை ஒரு நேர்த்தியான ஓவியத்தில் கடத்திவிட முடியும் எனும்போது, பக்கங்களில் இருக்கும் எழுத்துகளில் மட்டும் அறிவைச் சுருக்குவது எப்படிச் சரியாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகப் படைக்கப்பட்டிருக்கும் புத்தகமே ‘ஓவியச் செந்நூல்’.
கலையின் மீது தீராத ஆர்வம் கொண்டிருக்கும் இதன் ஆசிரியர் ரவிராஜ், தனது படைப்பின் மூலம் ஓவியத்தில் அடைபட்டிருக்கும் அறிவுக்கு விடுதலை கொடுக்கிறார். முக்கியமாக, உண்மையான அறிவையும், அசாத்திய அனுபவத்தையும் ஓவியங்களிலிருந்து எப்படிப் பெற்றுக்கொள்வது என்று கற்றுக்கொடுக்கிறார். நேர்த்தியான வடிவமைப்பில் வந்திருக்கும் இந்த நூல் மாணவர்களும் ஆய்வாளர்களும் தவறவிடக் கூடாத ஒன்று. - ஹுசைன்
ஓவியச் செந்நூல்
ஆசிரியர்: ரவிராஜ்
வெளியீடு: விக்னேஷ் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர்
தொடர்புக்கு: 8148407465