

நீதிக் கட்சியின் கொள்கைப் பிரகடனமாக நவம்பர் 20, 1916இல் பிட்டி தியாகராயர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோருக்குத் தங்களது நியாயத்தை எடுத்துவைக்கப் பிரத்யேகமான பத்திரிகைகள் எதுவும் இல்லை என்ற கவலை வெளிப்பட்டிருந்தது. நீதிக் கட்சியின் சார்பில் ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’, தமிழில் ‘திராவிடன்’, தெலுங்கில் ‘ஆந்திரப் பிரகாசினி’ ஆகிய பத்திரிகைகள் நடத்தப்பட்டிருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக வெளிவந்த ‘குடிஅரசு’ இதழே திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாக இன்றும் வாசிக்கக் கிடைக்கிறது.
பெரியாரின் சொற்பொழிவுகள் சகல தரப்பினரையும் நோக்கிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் என்றால், அவர் நடத்திய பத்திரிகைகளும் அவற்றில் அவர் எழுதிய கட்டுரைகளும் மாற்றுக் கருத்துக் கொண்டோரிடம் நிகழ்த்தப்பட்ட விவாதங்கள். ‘குடிஅரசு’ தொடங்கி ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘ரிவோல்ட்’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ என்று ஏறக்குறைய 50 ஆண்டுகள் இதழாளராகவும் இயங்கியவர் பெரியார்.
அவரது இதழியல் குறித்த மிகவும் விரிவான அறிமுக - ஆய்வுக் கட்டுரைகளோடு, அவரது இதழியலின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் 1925 தொடங்கி 1949 வரையிலான ‘குடிஅரசு’ காலகட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 320 கட்டுரைகளையும் தொகுத்து, ‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைப் பேராசிரியர் இரா.சுப்பிரமணி. ராயல் சைஸில், 800 பக்கங்களைக் கொண்ட பெருந்தொகுப்பு இது. இத்தொகுப்பில் உள்ள பெரியாரின் கட்டுரைகள் மூலப் பிரதியுடன் ஒப்பிடப்பட்டு வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கொள்கை முரண்பட்டு வெளியேறிய பிறகு, பெரியார் குறித்த செய்திகளை அப்போதைய தேசிய இதழ்கள் தவிர்க்கத் தொடங்கின. தனக்கென ஒரு தனி இதழ் வேண்டுமென்ற தேவையை உணர்ந்தே ‘குடிஅரசு’ வார இதழை, அவர் தொடங்கினார். எதிர்க்கொள்கை கொண்ட இதழ்களைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தார். ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படைத்தன்மையே பெரியாரின் இதழியல் கொள்கையாக இருந்தது. அதன் காரணமாக, காவல்துறை கண்காணிப்பு, சோதனை, ஜாமீன், பறிமுதல், அபராதம், சிறைத் தண்டனை எனச் சட்டரீதியாகப் பல போராட்டங்களையும் அவர் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
சாதி, சமய, பாலின பேதமின்றி அனைவருக்கும் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளைக் கோருவதாகவே பெரியாரின் பத்திரிகை எழுத்துகள் அமைந்திருந்தன. அதற்கு வலுசேர்க்கும் வகையில், மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துகள், பொதுவுடைமைச் சிந்தனைகள், அறிவியல் பார்வைகள் ஆகியவற்றுக்கும் தனது இதழ்களில் அவர் சிறப்பிடம் கொடுத்தார். தனது கொள்கைக்கு நெருக்கமான மற்ற இதழ்களை ஆதரிக்கவும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும் அவர் தவறவில்லை. 50-க்கும் மேற்பட்ட தோழமை இதழ்களை அவர் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி எழுதிய கட்டுரைகள், இத்தொகுப்பில் தனிப் பகுதியாகவே இடம்பெற்றுள்ளன. அவர் எழுதிய புத்தக மதிப்புரைகள், பத்திரிகைகளின் கருத்தியல் மேலாதிக்கம், தனது இதழ்கள் சந்திக்கும் பல்வேறு விதமான சவால்களைக் குறித்து வாசகர்களுக்கு எழுதிய கட்டுரைகள், மாற்றுக் கருத்துள்ள இதழ்களுடனான கருத்து விவாதங்கள் ஆகியவை தனித்தனியாகக் காலவரிசைப்படி வகை பிரிக்கப்பட்டிருப்பது இத்தொகுப்பின் சிறப்பு.
வாசகர்களுடனான பெரியாரின் உறவு, குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. தமது இதழ்களில் வெளியான கட்டுரைகளுக்குப் பெயரறியாத வாசகர்களிடமிருந்து வரும் மறுப்புக் கடிதங்களுக்கும் விரிவான விளக்கங்கள் எழுதுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, இதழ் தாமதம், நிதிச் சுமை, தமது உடல்நலப் பிரச்சினைகள் என அனைத்துத் தகவல்களையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள அவர் தவறவில்லை.
இதழியல் குறித்த பெரியாரின் விமர்சனங்களை ‘விடுதலை’ நாளேட்டில் அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்தும் விரிவாகத் தனது ஆய்வுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார் இரா.சுப்பிரமணி. பெரியாரின் இதழியல் பயணத்தின் முதல் பாதியையே இப்பெருந்தொகுப்பு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அதன் இரண்டாம் பகுதிக்கான தேவையும் உள்ளது. திராவிட இயக்கத்தின் இதழியல் பங்களிப்பு குறித்து, மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதழியல் மாணவர்களுக்குத் திராவிட இதழியல் தனிப் பாடமாகவும் தனிப் படிப்பாகவும் பரிந்துரைக்கப்பட வேண்டிய ஒன்று. அதற்கான தொடக்கப் புள்ளியாக, இந்தப் பெருந்தொகுப்பைக் கொள்ள வேண்டும்.
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
தந்தை பெரியாரின் இதழியல்
ஆய்வும் தொகுப்பும்:
இரா.சுப்பிரமணி
விடியல் பதிப்பகம்,
கோயம்புத்தூர் - 641 015
விலை: ரூ.1,000
தொடர்புக்கு: 0422 2576772